சிறுகதை - ஊசித் தட்டான்கள்
வாரத்திற்கு ஒரு முறையாவது எதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து வெளியுலகைப் பார்ப்பதென்பது மிகப்பெரிய இளைப்பாறுதல் மைதிலிக்கு. வீட்டு வேலைகளுக்கு பயந்தவளில்லை. இருந்தாலும் ஒரேமாதிரியான நடைமுறை வாழ்வின் தினசரிகள் பெரும் சலிப்பைத் தந்துவிடுகின்றன.
 “ஏங்க நான் சாயங்காலம் அக்கா வீட்டுக்கு ஒரு எட்டுப்போய் பார்த்துட்டு வந்துடுறேன். காலையில அக்கா போன் பண்ணுச்சி. குரலே சரியில்லை. மகேந்திரன் அத்தான கூட்டிட்டு ஆஸ்பத்திரி போறேன்னு சொன்னுச்சி. ‘தினேஷு வந்ததும் அவன மட்டும் அனுப்புறீயா’ன்னு கேட்டுச்சி. அது வாயவிட்டு எதுமே கேக்காது.
மனசவிட்டு எதுவும் சொல்லாது. இப்ப இவன அனுப்புறீயான்னு கேட்டதுதான் மனசுக்கு நெருடலா இருந்துட்டே இருக்கு. நீங்க வீட்டைப் பார்த்துக்குங்க...’’சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பாராமல் செல்பவளை வெறுமனே நிமிர்ந்து பார்த்தான் கணபதி. அக்கா தங்கை விவகாரத்தில் எப்பொழுதும் தலையிட்டதே இல்லை. அவர்கள் அன்பு அவனுக்குப் புரிந்ததுதான். மாலை வீட்டு வேலைகளை அவசரமாக முடித்துவிட்டு ஓடிவந்து பொன்மலை மஞ்சள்திடல் இரயில்வே ஸ்டேசனுக்கு மைதிலி வருவதற்கும் இரயில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.கையில் பாஸ் இருப்பதால் டிக்கெட் எடுக்க மெனக்கெடத் தேவையில்லை. இரயில் வேகமெடுத்தது. மைதிலி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டு இருள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை ஆசையோடு விழுங்குகிறது என ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தண்ணீரில் இறங்குகையில் படிப்படியாக வந்து திடீரென ஆழம் தட்டுப்பட்டு கால்கள் பிடிமானத்திற்கு தடுமாறி ஒருகணம் அந்தரத்தில் தவித்து தயங்குமே... அப்படிதான் பூமியும் ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த இருளை எதிர்கொள்ள தயங்கித் தயங்கி நிற்பது போல மைதிலிக்குத்தோன்றியது.
இரயிலிலிருந்து இறங்கி சித்ரா வீட்டிற்கு வந்து வாசல்கதவு பூட்டியிருப்பதைப்பார்த்ததும், ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டாள். அங்கு தனியாக சுவரில் தலையை சாய்ந்தபடியே சித்ரா கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டதும் ஓடிப்போய் அருகில் அமர்ந்து அவளது தோள்களைக் குலுக்கினாள்.
“அத்தான ஐசியூல வச்சிருக்காங்க மைதிலி. என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியல. இவர இங்க விட்டுட்டு வந்து யாருக்கு போன் பண்றதுன்னு சட்டுன்னு தெரியல. அசோக் டூர் விசயமா காலையிலதான் ஊருக்கு கிளம்பிப் போனான்...’’ சித்ராவுக்கு அழுகை முட்டியது. “என்னக்கா சொல்ற... ஒரு மொபைலு கூட உனக்குன்னு வச்சிக்க மாட்ட... மொபைல்ல போன் பண்றதுக்கும் கத்துக்க மாட்ட. என்ன சொன்னாலும் கேக்க மாட்ட.
அத்தான் பின்னாடியே போவ. அத்தான் பின்னாடியே வருவ. உனக்குன்னு எதுவும் செஞ்சிக்க மாட்ட. இப்பப் பாரு எந்த நிலமையில வந்து நிக்கிறேன்னு...’’ சித்ராவைக் கடிந்த மைதிலி, “எதாவது சாப்பிட்டீயா? நீ எங்க இந்த இடத்தைவிட்டு நகர்ந்துருக்கப்போற? இரு நான் போய் டீ வாங்கிட்டு அப்படியே டாக்டர பார்த்துட்டு வர்றேன்...’’ என்றபடி அகன்றாள்.
சித்ராவிற்கும் மகேந்திரனுக்கும் திருமணமானபோது மைதிலி எட்டுவயதுக் குழந்தை. அவளுக்கு விவரம் நன்றாகப் புரிய ஆரம்பித்ததிலிருந்தே மகேந்திரன் முசுடுதான். வீட்டில் எந்த விழா நடந்தாலும் பிரச்னை பண்ணுவான்.
எதற்கெடுத்தாலும் மரியாதை தரவில்லை, மதிப்பு தரவில்லையென சித்ராவை அம்போவென அப்படியே விட்டு விட்டு திருச்சிக்குக் கிளம்பிவிடுவான். அப்பொழுதெல்லாம் தனியாக நிற்கும் சித்ராவைப் பார்க்கப் பாவமாக இருக்கும். அக்கா மூக்கை லேசாக உறிஞ்சினால்கூட அவள் அழுகிறாளோ என ஆயிரத்தெட்டு தடவை அவளைப் பார்த்துக்கொண்டே இருப்பாள் மைதிலி.
அவளுக்கு அக்கா என்றால் உயிர். சித்ராவிற்கும் அப்படித்தான். மைதிலிக்காக எதை வேண்டுமானாலும் செய்வாள். ஒருமுறை மைதிலி வாடிக்குச் சென்று சீக்கிரமாக தண்ணீர் எடுத்து வராமல் விளையாடிவிட்டு தாமதமாக வந்தாள். வாசல் கூட்டிக்கொண்டிருந்த விளக்குமாற்றால் இவர்களைப் பெத்த ஜெயம் அடிக்கச் சென்றாள்.
உடனே சித்ரா அதைப் பிடுங்கி அவளையே அடிக்க கையை ஓங்கிவிட்டாள். அப்பொழுது ஜெயம் அதிர்ச்சியானாலும்அதற்குப்பின் அவளொன்றும் அதற்காக கவலைப்படவில்லை. மாறாக ‘என் பொண்ணுங்க எப்படி ஆசையா அன்பா இருக்குங்க பாருங்க’ன்னு ஊரு முழுக்க சொல்லிக்கொண்டு திரிந்தாள். ‘‘பையனுக்கு அம்மா இல்லை. எதோ சண்டையில சின்னவயதிலேயே அப்பாவை விட்டு போயிட்டாங்க. சித்திதான் இருக்காங்க. பையனுக்கு ரயில்வேயில் வேலை. ரயில்ல எங்க போனாலும் இலவசம்தான். தங்கறதுக்கு வீடு, மருத்துவம்னு எல்லாமே இலவசம்...’’தூரத்து பெரியப்பா சொன்ன வார்த்தைகளில் மயங்கி சித்ராவை மகேந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அன்று சாயங்காலமே சௌந்தரவல்லி ஆத்தா விளையாட்டாகவோ வினையாகவோ ஒரு கதையை மைதிலியிடம் சொல்லி வைத்தது. அக்காவைத் திருமணம் செய்துகொண்டு தங்கைமேலே ஆசைப்பட்ட குமாஸ்தாவின் கதை அது.
கேட்டது முதல் கல்யாணமாகி வேறு வீடு செல்லும்வரை மகேந்திரனின் கண்பார்வையில் மைதிலி படவேயில்லை. சித்ராவிற்கு குழந்தை பிறந்து அறையில் இருக்கும்பொழுது கூட யாரிடமும் ஒரு வார்த்தை சொல்லிக்கொள்ளாமல் கோபமாகக் கிளம்பிவிட்டான்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு மகேந்திரன் வந்து குழந்தையையும் சித்ராவையும் அழைத்துக்கொண்டு போனான். எதுவும் பேசாமல் அவன் பின்னே கிளம்பிச்சென்றுவிட்டாள் சித்ரா. அவள் என்ன நினைக்கிறாள் என யாருமே புரிந்துகொள்ள முடியவில்லை.
அமைதியாக எதற்காகவும் அலட்டிக்கொள்ளாமல் பொறுமையாக இருக்கும் சித்ராவைப் பார்க்கும்பொழுதெல்லாம் மைதிலிக்கு பெருமை தலைகொள்ளாது.
‘எவ்வளவு அமைதியாக பூரணமாக இந்த குணங்கெட்ட அத்தானை வைத்துக்கொண்டு அருமையாக குடும்பம் நடத்துகிறாள்’ என அக்காவின் பெருமையை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அனைவரிடமும் தம்பட்டமடித்துக்கொண்டே இருப்பாள்.
இதற்கு அப்படியே நேரெதிர் குணம் மைதிலிக்கு. பொறுமை என்பதே கிடையாது. அனைத்தும் அதிரடிதான்.எப்பொழுது பார்த்தாலும் எந்த விசேஷமானாலும் ஏதாவது பிரச்னை செய்து அவ்விடத்தில் சிறிய அளவிலேனும் சங்கடத்தை ஏற்படுத்தும் மகேந்திரனை அவ்வளவாக மைதிலிக்கு பிடித்ததே இல்லை . அவனை நன்றாகத் திட்டத் தோன்றும்பொழுதெல்லாம் ஒன்றை மட்டும் நினைத்துக்கொள்வாள்.
அவளது அம்மா சொல்லும் பழமொழி அது. ‘நமக்கு பால் பெரிதா? பால் வைக்கும் பாத்திரம் பெரிதா எனில் பால்தான் பெரிது. அது வைக்கும் பாத்திரம் பற்றி நாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
நெருங்கிய உறவுகள் பால் போல. அவர்கள் தேவையெனில் அவர்களைச் சார்ந்தவர்களின் குறைகளை நாம் பெரிதுபடுத்தக் கூடாது...’ தேநீருக்கு டோக்கன் வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கேயிருந்த நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்தாள் மைதிலி. மருத்துவர் சொன்னது அவளது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. மகேந்திரனுக்கு காய்ச்சலினால் ஏற்கனவே இருந்த டயாபட்டீசுக்கு சரியான சிகிச்சை எடுக்காததால் அதிகமாகி உள்ளுறுப்புகள் பெரும்பாலும் செயலிழந்துவிட்டதாகவும், சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை எனவும், எந்த நேரம் வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்றும் சொன்னார்.
நிதானமாக யோசித்துப் பார்க்கையில் இத்தனை வருட இறுக்கமான வாழ்க்கைக்கு இது ஒருவிதத்தில் சித்ராவிற்கு விடுதலையாகக்கூட இருக்கலாம் எனத் தோன்றியது.
தேநீரை கப்புகளில் ஊற்றி சித்ராவிடம் கொடுத்தாள் மைதிலி.
“அக்கா... அத்தான் நல்லா இருக்காங்களாம். சுகரு கொஞ்சம் கூடிட்டாம். அதான் மருந்து போட்டுக் குறைக்கிறாங்களாம். சுகர் பேஷண்டுல்ல... இன்ஃபெக்ஷனாகிடக் கூடாதுன்னு ஐசியூல வச்சிருக்காங்களாம். நீ டீயைக் குடி...’’ முகம் தெளிந்த சித்ரா ஆழமாக இழுத்து நன்றாக மூச்சை விட்டாள். தேநீரை வாங்கி மிடறு மிடறாக விழுங்கினாள். “பொறந்ததுலேர்ந்தே அம்மா முகத்தைப் பார்த்ததை விட என் முகத்தைத்தான் அதிகமாக பார்த்திட்டு இருக்க மைதிலி. எனக்கு ஒண்ணுன்னா துடிச்சி ஓடிவர நீங்கல்லாம் இருக்கீங்க. அத்தானுக்கு யாரு இருக்கா? விவரம் தெரியாத வயசில அத்தானோட அப்பா ஒரு பொம்பளைய சேர்த்துக்கிட்டாருன்னு அப்படியே பச்சை மண்ணா உலகமே தெரியாம நின்ன அத்தான விட்டுட்டு அவுங்க அம்மா புத்தி பேதலிச்சி எங்கயோ போயிருச்சு.
அம்மா இருந்தவரை இவரை தரையில நடக்க விடாதாம். இடுப்புலயே ஏத்திட்டு திரியுமாம். திடீர்ன்னு அம்மா விட்டுட்டு போனத இவரால் தாங்கவே முடியல. அழுதழுது சுருண்டு கிடந்திருக்காரு. கொஞ்ச கொஞ்சமா நிலவரம் புரிஞ்சப்ப வயித்துக்கு சோறு கூட போடாம கொடுமைப் படுத்திருக்கா சித்திக்காரி.
அந்த வயசிலயே பாத்திரம் விளக்குறது, துவைக்கிறது, கூட்டுறதுன்னு எல்லா வேலையும் இவருதான் செஞ்சிருக்காரு. பள்ளிக்கூட இடைவேளையில வெயில்ல ஓடிவந்து அம்மில மிளகாய் அரைச்சிக் கொடுத்தாதான் சாப்பிடுறதுக்கு சித்திக்காரி கையளவு தண்ணி சாதம் கொடுப்பாளாம்...’’ மூச்சுவாங்கி அசதியாக சுவரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் சித்ரா.
“விடுக்கா! உனக்கு பிரஷர் இருக்கு. ரொம்ப அலட்டிக்காத. நான் தள்ளிப்போய் போன் பண்ணிட்டு வரேன். இங்க டவர் கிடைக்கலக்கா...’’“இரு மைதிலி. கொஞ்ச நேரம் உட்காரு. அத்தானப்பத்தி உங்களுக்கெல்லாம் சரியா தெரியாது. நான் சொன்னதில்லை. ஒருநாள் கூட உடம்பு முடியாம ஆஸ்பத்திரிக்கு அவரு வந்ததில்லை.
எப்பவாவது கால்வலின்னு மாத்திரை வாங்கிட்டு வந்து இரண்டு வேளை சாப்பிடுவாரு. சரியாகிடும். இரண்டு நாளா ஜொரம். காலையில வாந்தி எடுத்தவரை நான்தான் கட்டாயப்படுத்தி ஆட்டோ வச்சி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தேன். நல்லாதான் என்கூட நடந்து வந்தாரு! திடீர்ன்னு எப்படி இவ்வளவு முடியாமப் போச்சு... நான்தான் அவர சரியா கவனிக்காம விட்டுட்டேனா?
மனுசங்களோட பழகவிடாம வீட்டுக்குள்ளேயே இவரை அடைச்சி வச்சி வேலை வாங்கிருக்காங்க. அதுனாலதான் கூட்டத்துல எப்படி நடந்துக்கணும்னே இவருக்குத் தெரியல. எப்படி பேசணும்னும் தெரியாது.
ஆனா, அத்தான் தங்கம் தெரியுமா?...’’ என்றபடியே குனிந்து அழுத சித்ராவை இறுக்கி அணைத்துக் கொண்டாள் மைதிலி.“இங்க யாருங்க இரண்டாம் நம்பர் பேஷண்டோட வந்த அட்டண்டர். மாஸ்க் எடுத்துருக்கோம். பார்க்கிறவங்க சத்தம் போடாம வந்து பார்த்துட்டு போங்க...” சொன்ன செவிலியைத் தொடர்ந்து ஐசியூக்குள் ஓடினாள் சித்ரா. அவளது பதற்றத்தைப் பார்த்த மைதிலிக்கு மகேந்திரனுக்கு எதாவது நடந்தால் எப்படி சித்ரா அதைத் தாங்கிக் கொள்ளப்போகிறாள் என பயமாக இருந்தது. வெளியில் சொல்லவில்லை. எனினும் சித்ராவுக்கு மகேந்திரன் மேலிருந்த ஆழ்ந்த அன்பு புரிந்தது. அவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என எல்லாக் கடவுளிடமும் மனமுருகி வேண்டிக்கொண்டாள்.
மகேந்திரனும் சித்ராவும் பேசிக்கொண்டிருப்பதைக்கண்டு சற்றுத் தயங்கி நின்றாள் மைதிலி. எப்பொழுதுமே அவள் மகேந்திரனோடுஅவ்வளவாகப் பேசியதில்லை.
இருப்பினும் சாவின் விளிம்பில் நிற்பவனிடம் இறுதி ஆசை எதுவென கேட்கும் பொறுப்பு அவளறியாமல் அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மகேந்திரன் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவது தெரிந்தது. அவனைச் சுற்றி இணைக்கப்பட்டிருந்த ஒயர்களைப் பார்த்தாலே பயமாக இருந்தது. தயங்கியபடியே மகேந்திரனின் அருகில் வந்தாள்.
“ அத்தான் இப்ப உடம்புக்கு பரவாயில்லையா? ஏன் அத்தான் ஆஸ்பத்திரியில கொடுத்த சாப்பாட நீங்க சாப்பிடவே இல்லையாமே? உங்களுக்கு பிடிச்சத சொல்லுங்க! நான் வீட்டுக்கு போயி சமைச்சி எடுத்துட்டு வர்றேன்...’’சிரமப்பட்டு புன்னகைத்தான் மகேந்திரன்.
முகத்தில் மெல்லிய படலமாக சவக்களை தெரிந்தது.தன்னைப் பார்த்து அழும் சித்ராவின் கரங்களை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டான்.“இவதான் பிடிக்கும். என்னை தனியா விட்டுட்டு எங்கயும் போயிடாத ஆயா...’’ சித்ராவின் கரங்களை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டான் மகேந்திரன்.
இதுவரை கண்டிராத கோணத்தில் மகேந்திரனைப் பார்ப்பது கலக்கமாக இருந்தது மைதிலிக்கு. ஒரு தீவிரமான மனிதனின் நெகிழ்ந்த அன்பு அவனின் மீதிருந்த எல்லாக் குறைகளையும் தவிடுபொடியாக்கியது.
ஆரம்பத்திலிருந்தே அந்நியனைப்போலவே மகேந்திரனிடம் பழகி வந்தவளுக்கு, அன்புக்கு ஏங்கி குழந்தை மகேந்திரனாக மாறி அவளது அக்காவை ‘ஆயா’ என்று அழைத்த வார்த்தை அவளுள் பெரும் உடைப்பை ஏற்படுத்தியது.
இறக்கும் தருணத்தில் நிற்கும்போதுகூட அவளது அக்காவின் மீதிருந்த அவனது அன்பு அவளைக் கலங்கடித்தது. அதிர்ச்சியைக்கூட தாங்கிக்கொள்ளலாம். பேரன்பொன்று கண்முன்னே நிகழுகையில் அந்த நெகிழ்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை. “அத்தான்” என அவளையும் மீறி கதறத் தொடங்கினாள்.
தேவிலிங்கம்
|