இந்தியாவில் தீபாவளி!
இந்தியா என்றுமே வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாசாரங்கள், பல பண்பாடுகள், பல உணவுகள், பல உடைகள் என எல்லாவற்றிலும் நாம் வேறுபட்டவர்களாக இருந்தாலும் அந்த வேற்றுமையில்தான் ஒற்றுமையுடன் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறோம்.இதற்கு தீபாவளி பண்டிகையும் விதிவிலக்கல்ல. இந்தத் தீப ஒளி நாளிலும் வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டுள்ளோம். அதாவது இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை என்பது இருந்தாலும் சில மாநிலங்களிலும், சில ஊர்களிலும் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. அதைப்பற்றிய ஒரு சிறிய தொகுப்புதான் இது. மேற்கு வங்க காளி பூஜை
தீபாவளி பண்டிகை நாளில் மேற்கு வங்கத்திலும், அசாம், ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மண்டலங்களிலும் அதனை காளி பூஜையாகக் கொண்டாடுகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையின்போது பெரும்பாலான பகுதிகளில் லட்சுமி அம்மனை வழிபடும் வழக்கமே இருக்கிறது. ஆனால், மேற்கு வங்கப் பகுதிகளிலோ காளியை வழங்குகின்றனர். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைதான் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா. இதற்கு அடுத்ததாக தீபாவளி அன்று கொண்டாடப்படும் காளி பூஜை இருக்கிறது. இந்து புராணத்தின்படி, காளி தெய்வம் துர்காவின் சக்தி வாய்ந்த வடிவம் என்றும், அவள் பயங்கரமான அரக்கன் ரக்தபீஜனைத் தோற்கடிக்க இந்த வடிவத்தை எடுத்தாள் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த அரக்கனால், தரையில் விழும் ஒவ்வொரு துளி இரத்தத்தாலும் தன்னைப் பெருக்கிக் கொள்ள முடியும். அரக்கனின் பிரதிபலிப்பைத் தடுக்க, காளி அவனது இரத்தத்தின் ஒவ்வொரு துளியையும் உட்கொண்டு இறுதியில் தோற்கடிக்கிறாள். இந்தத் தீமைக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும்விதமாக ஐப்பசி மாத அமாவாசை அன்று காளியை வணங்குகின்றனர். இந்நாளில் தீபாவளியும் சேர்கிறது.
 இதன்மூலம் தடைகளைத் தாண்டி, மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை வென்று, ஆன்மீக விடுதலையை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.
19ம் நூற்றாண்டில் காளியின் தீவிர பக்தராக இருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரால் இந்த விழா மேலும் பரவலாகவும், பிரபலமாகவும் மாறியதாகச் சொல்கின்றன செய்திகள்.
பஞ்சாப்பின் பந்தி சோர் திவாஸ்
சீக்கியர்கள் தீபாவளியை பந்தி சோர் திவாஸ் என்று கொண்டாடுகிறார்கள். இது சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோபிந்த் ஜி, குவாலியர் கோட்டை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் ஒரு கொண்டாட்டமாகும்.
இந்தத் தினத்தன்று சீக்கியர்கள் குருத்வாராக்களுக்குச் சென்று, கீர்த்தனைகளைக் கேட்டு, ஊர்வலங்களில் பங்கேற்கிறார்கள். அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அழகாக ஒளிரச் செய்யப்படுகிறது. மேலும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இப்படியாக அவர்களின் தீபாவளி நாள் சிறப்புறுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பதர் கா மேளா
இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள தாமி கிராமத்தில், பதர் கா மேளா அல்லது ‘கற்களின் திருவிழா’ என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான மற்றும் நூற்றாண்டு பழமையான திருவிழா நடைபெறுகிறது.பொதுவாக இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த மறுநாளில் நடத்தப்படுகிறது. இதன்தோற்றம் 18ம் நூற்றாண்டில் தாமி சமஸ்தான ஆட்சிக் காலத்தில் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
அதாவது வரலாற்று ரீதியாக காளி தேவியை திருப்திப்படுத்த மனித பலிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தாமி சமஸ்தானத்தின் ஒரு ராணி, சதி மூலம் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு, மனித பலிகளை நிறுத்துமாறு கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அத்தகைய சடங்குகளுக்குப் பதிலாக, போரிடும் இரண்டு பிரிவுகள் கல் எறிதலில் ஈடுபட்டு காயமடைந்தவர்களின் இரத்தம் தெய்வத்தின் சிலையில் திலகமாகப் பூசப்படட்டும் என்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு அடுத்த நாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஹாலோகிஸ் என்பவர்களும், அண்டை கிராமமான ஜமோக்கைச் சேர்ந்த ஜமோகிஸ் என்பவர்களும் ஒரு இடத்தில் கூடுகிறார்கள். இதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்கள் குண்ட்ஸ் என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் எதிரெதிர் பக்கங்களில் வரிசையாக நின்று கல் எறிதலில் ஈடுபடுகின்றனர். இந்தக் கற்களால் அடிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என நம்பப்படுகிறது. இதில் ஒரு நபர் காயமடைந்து, அவரின் இரத்தத்தால் காளி தேவியின் சிலையில் திலகம் பூசப்படும் வரை சடங்கு தொடர்கிறது.இதுதவிர பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற இசை மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் கண்காட்சிகள் மூலம் இந்த விழா சிறப்பிக்கப்படுகிறது.
யம தீபம்
பெரும்பாலான வடஇந்தியப் பகுதிகளில் தீபாவளி நாளன்று யம தீபம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மூன்று நாள் தீபாவளி கொண்டாட்டத்தில் இது முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. யம தீபம் என்பது மரணத்தின் கடவுளான யமனை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் எனச் சொல்லப்படுகிறது. இந்நாளில் பெண்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆணின் பெயரிலும் மாலை நேரத்தில் தீபங்களை ஏற்றி, அவர்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என யமனிடம் வேண்டி பிரார்த்திக்கின்றனர்.
சத்தீஸ்கரின் தியாரி
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் பகுதியில் உள்ள பழங்குடி சமூகங்கள் தீபாவளியைத் தனித்துவமான சடங்குகளுடன் ‘தியாரி’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்நாளில் இறைவன் நாராயணனின் சிலை வைத்து வயல்களில் பயிர்களுக்குச் சடங்கு செய்யப்படுகிறது. பிறகு கால்நடைகளை வணங்குகின்றனர்.
அதைத் தொடர்ந்து உணவு தானியங்களை சேமித்து வைக்கின்றனர். பண்டிகையின் முதல் நாளான தீபாவளி அன்று பழங்குடி கிராமத்தில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் மதுவால் கௌரவிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து கால்நடை உரிமையாளர்கள், கால்நடை மேய்ப்பர்களை மதிய உணவிற்கு தங்கள் வீட்டிற்கு அழைக்கின்றனர். அவர்களுக்கு உணவு வழங்கி தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். மாலையில் மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் ஒவ்வொரு கால்நடை உரிமையாளர் வீட்டிற்கும் செல்கின்றனர். பின்னர் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நாட்டுப்புறப் பாடல்கள், இசை, நடனம் என உற்சாகமாக இருக்கின்றனர். குஜராத்தின் பஞ்ச்மஹால்
குஜராத்தின் பஞ்ச்மஹால் பகுதியில் உள்ள சில கிராமங்களில் தீபாவளி பண்டிகையின் போது விநோதமாக ஒருவருக்கொருவர் பட்டாசுகளை விளையாட்டாக மேலே வீசியெறிகின்றனர். இது ஆபத்தானதாக இருந்தாலும் பஞ்ச்மஹால் பகுதியில் இந்த பழங்கால சடங்கு ஒரு தனித்துவமான நடைமுறை எனச் சொல்லப்படுகிறது.
இதுதவிர, குஜராத் பகுதியில் பல வீடுகளில் தீபாவளியின்போது, நெய் விளக்கை இரவு முழுவதும் எரியவிடுகின்றனர். மறுநாள் இந்த விளக்கில் எஞ்சியவற்றைச் சேகரித்து அதை கண்களில் பூசும் அழகுசாதனப் பொருளான காஜலைத் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கம் புனிதமானதாகக் கருதப்படுவதுடன் அந்த வீட்டிற்கும் செழிப்பைத் தரும் என நம்பப்படுகிறது.
பேராச்சி கண்ணன்
|