தாலி சென்டிமென்ட் பேசப்போறான் இந்த டூட்!
என் மூச்சவன் பேச்சவன் பேர் சொல்லும் அழகவன்... அழகிய நிலவவ நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளியவ சரியவ தவறவ சிரிக்கிற சிரிப்புக்கு அவதான் காரணமா...
 நிச்சயம் இந்த வரிகளைப் படித்திருக்க மாட்டோம். அப்படியே ராகமாக பாட்டாகவேதான் பாடியிருப்போம். அந்த அளவுக்கு இந்தப் பாட்டு கபாலத்தில் புகுந்து கதகளி ஆடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘டூட்’ படத்தின் பாடல்தான் டிஜிட்டல் டிரெண்ட். பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அதிரடி காதல் படம் இது.
 ‘‘ரஜினி சார் தன்னுடைய 30வது வயதில் இருந்தால் எப்படி இருக்கும்? அதை அடிப்படையாக வச்சுதான் கதை எழுதினேன்...’’ ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்.
ரஜினிக்கு எழுதிய கதையா ‘டூட்’? சினிமாவே கற்பனைதானே! என்ன வேணும்னாலும் கற்பனை செய்யலாம். அதனால் ஓர் எழுத்தாளராக முழு சுதந்திரத்தையும் எடுத்துக்கிட்டேன். அப்படி ரஜினி சார் எனக்கு கால்ஷீட் கொடுத்து அவருடைய 30வது வயதில் நான் ஒரு படம் அவருக்கு இயக்கியிருந்தா எப்படி எழுதியிருப்பேன் என நினைச்சுதான் இந்தக் கதை எழுதினேன்.
எனக்கு சொந்த ஊர் பரமக்குடி. படிக்கும்பொழுதே சினிமாதான் வாழ்க்கைனு முடிவு செய்தேன். 18 வயசுல அசிஸ்டென்ட் இயக்குநராக வேலைக்குச் சேர்ந்தேன். ஏழு வருஷமா சுதா கோங்குரா மேடம்கிட்ட உதவியாளரா இருந்தேன்.
‘டூட்’ படத்தினுடைய சினிமாட்டோகிராபர் நிக்கேத் மூலமா ‘மைத்ரி மூவிஸ்’ கூட ஒரு சந்திப்பு அமைஞ்சது. கதை சொன்னேன். ‘திரும்பக் கூப்பிடறோம், யோசிச்சு சொல்றோம்’ இப்படி எந்த வார்த்தையும் அவங்க சொல்லலை. அவங்களுக்கு கதை பிடிச்சது. ‘செய்யலாம்’னு சொல்லிட்டாங்க. கதை கேட்டு ஓகே சொன்ன அடுத்த நொடி பிரதீப் சாருக்கு கால் செய்தாங்க.
இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப்புடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?
‘மைத்ரி மூவிஸ்’ பிரதீப் சார் கால் செய்ததும் அடுத்த இரண்டு நாட்கள்ல பிரதீப் சார் எனக்கு டைம் கொடுத்தார். கதை சொன்னேன். அவருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.
ஜீரோ இன்வால்வ்மென்ட்.
இப்படி சொன்னால் கூட தகும். என்னதான் அவர் கதையாசிரியரா, இயக்குநரா இருந்தாலும் இந்தக் கதைக்குள்ள ஒரு காட்சியில் கூட அவர் தலையிடவே இல்ல. பேப்பரில் என்ன இருந்துச்சோ அதை அப்படியே எடுத்திருக்கேன். உண்மைல பிரதீப் சார் இயக்குநருக்கான நடிகர். நமக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து வேலை செய்வார். அவரும் இயக்குநர் என்பதால் கதை மட்டும்தான் சொன்னேன். நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை கதை சொன்னதை வைச்சே புரிஞ்சுகிட்டு நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்தக் கதைக்கு முதன் முதலில்பிரதீப் சாரைதான் முடிவு செய்தேன். அவரும் ஓகே சொல்லிட்டார். அதனால் வேறு யார்கிட்டயும் கதை சொல்லலை.
என்ன கதை?
தாலி சென்டிமென்ட் கதைதான். 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸுக்கு தாலி சென்டிமென்ட்னா என்ன என்பதை உணர்த்தும் இளசுகளா பிரதீப் சாரும் மமீதா பைஜுவும் நடிச்சிருக்காங்க. ஊரிலிருந்து இங்கே வந்து செட்டிலான ஓர் இளைஞர், இங்கேயே இருக்கிற ஒரு பொண்ணு. ரெண்டு பேரும் பார்ட்னர்ஷிப்பா சர்ப்ரைஸ் ஈவென்ட் செய்கிற கம்பெனி வச்சு நடத்துறாங்க. இவங்க ரெண்டு பேரும் சந்திச்சு... அதன் மூலமா உருவாகிற காதல்... அங்கிருந்து தாலி, உறவு... இதெல்லாம் சேர்த்துதான் ‘டூட்’.
‘டூட்’னா மச்சி, மாமேனு எல்லாம் நண்பனைக் கூப்பிடுவோமே... அப்படியான ஒரு பெயர்தான். அது ஏன் இந்தக் காதல் படத்தில் என்பதற்கான பதில்தான் முழுப் படமும். மமீதா பைஜு, சரத்குமார்..?முதல் படத்தில் இந்த பட்ஜெட், இப்படியான கிராண்ட் நடிகர்கள் பட்டாளம்... இப்படி நடக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கலை. அதே மாதிரிதான் தீபாவளி ரிலீஸா இருக்கும் என்பதும். ஒரே தருணத்தில் எல்லா கனவும் நிறைவேறின மாதிரி இருக்கு.
‘பிரேமலு’ ரிலீசுக்கு முன்னாடியே மமீதா பைஜு நடிச்ச ‘சூப்பர் சரண்யா’ பார்த்துட்டு, இந்தக் கதைக்கு அவங்களை செலக்ட் செய்தேன். எங்க படத்துக்குள் வருவதற்கு முன்பே ‘பிரேமலு’ ரிலீஸாகி சென்சேஷன் ஆகிட்டாங்க.
மமீதாவுக்கு அப்பாவா சரத்குமார் சார் நடிச்சிருக்கார். அப்பா என்பதைத் தாண்டி இப்ப இருக்கற ஜெனரேஷன் பொண்ணுக்கு ஒரு தந்தை எப்படியிருப்பாரோ அப்படி அருமையா செய்திருக்கார். ரோகிணி மேடம் பிரதீப் சாருக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க. இவங்க இல்லாம சத்யா, ஹிருது ஹரூன்னு எல்லோருக்குமே முக்கியமான கதாபாத்திரம். ‘ஊரும் பிளட்’ + ஜெமினி AI டிரெண்ட்?
பாட்டு ஏற்கனவே டிரெண்ட். இதுல ஜெமினி AI போட்டோக்கள் டிரெண்டும் சேர்ந்து புது டிரெண்டா மாறிடுச்சு. படத்துக்கு ரொம்ப பெரிய மைலேஜ் அதுதான். சாய் அபயங்கர் மியூசிக் இன்டர்நெட்டில் எப்ப ரிலீஸானாலும் ஏதோ ஒரு மேஜிக் செய்யுது. அந்த மேஜிக் இந்தப் படத்திலும் சூப்பரா ஒர்க்கவுட் ஆகியிருக்கு. ‘யங் பிளட் கொடுத்த ஊரும் பிளட்...’ பாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்க்கணும்னு நினைச்சுதான் சென்னை முழுக்க கேமரா வைத்தோம்.
எங்கெங்கோ வெளிநாட்டில் போய் கேமரா வைக்க மனசு வரலை. நான் இயக்குநரானதும் முதலில் முடிவு செய்தது மவுண்ட் ரோடில் கேமரா வைத்து படப்பிடிப்பு நடத்தணும் என்பதுதான். நான் இருக்கிற சென்னையை இன்னும் அழகா, பரபரப்பா காட்டணும்.
அப்படி யோசிச்சுதான் ‘ஊரும் பிளட்...’ பாட்டு மட்டுமில்ல... மொத்த படமும் சென்னையை சுத்தி வரும். இந்த சென்னைக்கு எத்தனையோ முகங்கள், எத்தனையோ நிறங்கள் இருக்கு. ஆனா, வருகிற எல்லா நல்ல உள்ளங்களையும் தன்னுடைய ரத்தமா ஏத்துக்கும். அதற்கு நிகேத் பொம்மி சினிமாட்டோகிராபி இன்னும் உயிர் கொடுத்திருக்கு. அவர்தான் ‘சூரரைப் போற்று’, ‘டிராகன்’, குபேரா’ படங்களுக்கு சினிமாட்டோகிராபர். என்னுடைய நண்பன் பரத் விக்ரமன்தான் இந்தப் படத்துக்கு எடிட்டர். இந்தப் படம் மூலமாக அறிமுகமாகிறார்.பிரதீப் ரங்கநாதன் படம் என்றாலே ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்பாக நகருமே..? அந்த மொமெண்ட் இந்தப் படத்தில் இருக்கா?
அந்த பரபர மொமண்ட்களும் இருக்கு. இதுவரை இல்லாத சில சுவாரஸ்யங்களும் இருக்கு. அதே சமயம் முந்தைய படங்கள் போல இந்தப் படம் ஹிட்டாகுமானு கேட்டா எனக்கு பதில் சொல்லத் தெரியாது.
காரணம், இந்தப் படம் முடியறதுக்குள்ள பிரதீப் சார் மார்க்கெட் ரூ.100 கோடி அழுத்தத்தைக் கடந்து ரூ.150 கோடியாக மாறிடுச்சு. இந்த எந்த அழுத்தத்தையும் நான் மனதில் ஏத்திக்கவே இல்ல. ஒரு நல்ல படம்... அதற்கு என்ன சிறப்பு கொடுக்க முடியுமோ கொடுத்திருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|