முதல் பெண் பேராயர்!
இங்கிலாந்து தேவாலய அமைப்பின் முக்கிய பதவிகளில் ஒன்று, கான்டர்பரி ஆர்ச்பிஷப் எனும் பேராயர். கிறிஸ்துவ மதத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் குறிக்கும் பதவி இது.
பொதுவாக பேராயர்தான் திருச்சபைக்கு உட்பட்ட மாகாணத்தின் தலைமைப் பதவியை வகிப்பார். இங்கிலாந்தில் கடந்த 1400 வருடங்களாக, 105 பேர் பேராயர் பதவியில் இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருமே ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 106வது பேராயராக பதவியேற்கிறார் சாரா. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு மரபை உடைத்து முதல் பெண் பேராயர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார். இப்போது அவருக்கு வயது 63.சாராவுக்கு நாலாப்பக்கமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  இங்கிலாந்தில் உள்ள சர்ரே மாகாணத்தில் அமைந்திருக்கும் வோக்கிங் எனும் இடத்தில் வாழ்ந்து வந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர், சாரா மலாலி. இவருக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கின்றனர். பள்ளியில் நன்றாகப் படித்தாலும் மருத்துவராக விரும்பாமல், செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்தார் சாரா. நோயாளிகளுடன் மருத்துவரை விட, செவிலியரால்தான் நெருக்கமாக இருக்க முடியும் என்பதால் இப்பணியைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். 16வது வயதிலிருந்தே கிறிஸ்துவத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார் சாரா. அவர் தேர்ந்தெடுத்த செவிலியர் பணிக்குப் பின்னணியில் கூட கிறிஸ்துவ நம்பிக்கைதான் இருக்கிறது.
செவிலியருக்கான படிப்பை முடித்துவிட்டு, செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்தார். செவிலியர் பணியை ஒரு வேலையாகச் செய்யாமல், இறைவனுக்குச் செய்யும் சேவையாகக் கருதினார் சாரா.
அதனால் மற்ற செவிலியர்களிடமிருந்து தனித்து அறியப்பட்டார். அவர் வேலை செய்த மருத்துவமனையில் எல்லோருமே அறிந்த ஒரு சேவகியாகத் திகழ்ந்தார். அதனால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டானது. பல மருத்துவமனைகள் அவரை தங்களது நிறுவனத்தில் வந்து வேலை செய்ய அழைத்தும், அவர் செல்லவில்லை.
தாமஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி செய்துகொண்டே, ஹெல்த்கேர் சம்பந்தமான மேற்படிப்பையும் படித்தார். பிறகு த ராயல் மார்ஸ்டென் மருத்துவமனை மற்றும் செல்சியா அண்ட் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைகளில் தலைமை செவிலியராகப் பணிபுரிந்து, இங்கிலாந்தின் பிரபலமான செவிலியராக அறியப்பட்டார்.
இவரது பணியைப் பாராட்டும் விதமாக, 1999ல் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையத்தின் தலைமை நர்சிங் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். குறைந்த வயதில் தலைமை நர்சிங் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாராதான். தவிர, இங்கிலாந்தில் போர்டு ஆஃப் நர்சிங்கிலும் உயர் பதவியை வகித்தார்.
மனதுக்குப் பிடித்தமான செவிலியர் பணியைச் செய்து வந்தாலுமே கூட, நேரடியாக தேவாலயத்தில் சேர்ந்து, இறைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பம்.
அதனால், 2001ல் கென்ட் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டப்படிப்பையும் படித்தார். இங்கிலாந்தில் உள்ள பல தேவாலயங்களில் பணிபுரிய ஆரம்பித்தார். 2004ம் வருடம் தலைமை நர்சிங் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர இங்கிலாந்து தேவாலயப் பணிகளில் இறங்கினார். 2004 முதல் 2006ம் வருடம் வரை செயின்ட் சேவியர்’ஸ் தேவாலயத்தில் உதவி காப்பாளராகப் பணிபுரிந்தார்.
2006ம் வருடம் ஹேர்ரோப் கல்லூரியில் ஆயர் இறையியல் பாடத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். படிப்பை முடித்தவுடனே லண்டனில் உள்ள செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் உயர் பதவி கிடைத்தது. கடந்த ஜூன் 2015ம் வருடம் இங்கிலாந்தில் உள்ள கிரீடிசன் டவுனின் பிஷப்பாக அறிவிக்கப்பட்டார் சாரா.
கிறிஸ்துவ மதத்தின் மதகுருவின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் குருமாரைக் குறிப்பதுதான் பிஷப். தமிழில் ஆயர் என்கின்றனர். இவர் தலைமை குருவாகவும் கருதப்படுகிறார். ஜூலை 22, 2015ல் கிரீடிசனின் பிஷப்பாக பதவியேற்றார் சாரா. செப்டம்பர் 2015ல் இங்கிலாந்து தேவாலயங்களில் பதவி நியமனம் செய்யும் முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பைத் தன் வசப்படுத்தினார். கடந்த டிசம்பர் 18, 2017ல் லண்டனின் அடுத்த பிஷப்பாக அறிவிக்கப்பட்டார் சாரா. கான்டர்பரியின் பேராயர் மற்றும் யார்க்கின் பேராயருக்குப் பிறகு இங்கிலாந்து தேவாலய அமைப்பின் மூன்றாவது உயர் பதவி லண்டன் பிஷப்தான்.
மார்ச் 2018ல் லண்டன் பிஷப்பாகப் பதவியேற்றார். இங்கிலாந்து தேவாலய அமைப்பில் புனிதப் பணிகளை மேற்கொண்ட முதல் பெண் என்ற பெருமையைத் தன்வசப்படுத்தினார். இதற்கு முன்பு ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கிலாந்து தேவாலய அமைப்பில் புனிதப் பணிகளை ஆண்கள் மட்டுமே செய்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 3, 2025ல் அடுத்த கான்டர்பரியின் பேராயராக சாராவை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து தேவாலய அமைப்பு. ஜனவரி 28, 2026ல் பேராயர் பதவியை ஏற்கவிருக்கிறார். மட்டுமல்ல, சாரா திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவரான ஈமோன் மலாலி, தகவல்தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர். சாராவுக்கு மகனும், மகளும் இருக்கின்றனர்.
த.சக்திவேல்
|