பாரம்பரிய கோயில்களின் அற்புத சிலைகள் இனி உங்கள் வீட்டை அலங்கரிக்கும்!



ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் அட்டகாச முயற்சி 

தமிழகத்தில் பழங்காலக் கோயில்களில் உள்ள சிற்பங்கள் என்றென்றும் எவர்கிரீன்தான். தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எனச் சிற்பங்களின் அழகியலைக் காட்டும் கோயில்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால், இந்தக் கோயில் சிற்பங்களை எல்லாம் நாம் நேரில் சென்றால்தான் பார்த்து ரசிக்கமுடியும். அல்லது புகைப்படங்களின் வழியே கண்டுமகிழலாம். அவ்வளவுதான். 

இதுவே இந்தச் சிற்பங்கள், அதே சிற்ப வடிவில் நம் வீட்டை அலங்கரித்தால் எப்படியிருக்கும்? உற்சாகம் வழிந்தோடும் அல்லவா!  அப்படியொரு மகிழ்ச்சி ததும்பும் விஷயத்தைத்தான் சாத்தியப்படுத்தி வருகிறது, ‘விஸ்மயம் ஆர்ட்ஸ்’ எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம். அதாவது தமிழகப் பாரம்பரிய கோயில்களில் உள்ள அற்புதமான சிற்பங்களை மினியேச்சர்களாக உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கிறது இந்நிறுவனம். 

அப்படியாக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சரஸ்வதி சிலை, தாராசுரத்தில் உள்ள ரிஷபகுஞ்சரம் சிற்பம், திருச்சி அருகே திருெநடுங்களம் கோயிலில் உள்ள சப்தமாதர்கள் சிலை, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள அஷ்டமங்கலம் சிற்பம் என நான்கு சிற்பங்களின் மினியேச்சர்களை தத்ரூபமாக அப்படியே கொண்டு வந்துள்ளனர் இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான லலிதாராமும், சுவாமிமலை சரவணனும். 

‘‘இது நம் பழமையை மீட்டெடுக்கும் ஒரு செயல்தான். லலிதா ராமும் நானும் முதலில் பொருளாதாரத்தில் நலிந்த இசைக் கலைஞர்களுக்காக உதவிகள் செய்தோம். பிறகு அந்தக் கலைஞர்களை ஆவணப்படுத்தினோம்.

அப்புறம் வரலாற்றை ஆவணப்படுத்துறது, இசை வாத்தியக் கருவிகளை ஆவணப்படுத்துறதுனு பல விஷயங்கள் மேற்கொண்டோம். இப்போ, கோயில் சிற்பங்களை வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கோம்...’’ என உற்சாகமாகச் சொல்கிறார்சுவாமிமலை சரவணன். 

‘‘நான் கும்பகோணம் சுவாமிமலையைச் சேர்ந்தவன். கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் படிச்சிட்டு ஐடி துறையில் பணிசெய்றேன். 25 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் சிறந்த கம்பெனிகளில் வேலை செய்திருக்கிறேன். இப்போ, யாராவது பாரிஸ் போனாங்கனா அங்கிருந்து திரும்பி வரும்போது அங்குள்ள ஈபிள் டவர் சிற்பத்தை வாங்கிட்டு வருவாங்க. அதே ஆஸ்திரேலியா போனால் லோட்டஸ் டெம்பிளும், அமெரிக்கா போனால் சுதந்திர தேவி சிலையும் வாங்குவாங்க. 

இதுமாதிரி தமிழகத்தில் என்ன இருக்குனு யோசிக்கிறப்ப நிறைய பொக்கிஷங்கள் இருக்கு. ஆனா, அது வாங்கிட்டுப் போகும் வகையில் இல்லை. இந்த இடத்தில்தான் நானும் லலிதாராமும் இப்படியொரு ஐடியாவை உருவாக்கினோம்.நான் டெக்னிக்கல் சார்ந்து பார்த்துக்கிட்டேன். 

லலிதாராம் வரலாற்று பக்கம் ரொம்ப ஆர்வமுள்ளவர். அப்படியாக நாங்க இருவரும் சேர்ந்து இந்த சிலைகளின் மினியேச்சர்களை உருவாக்குறோம்...’’ எனச் சந்தோஷமாக சுவாமிமலை சரவணன் சொல்ல, அவரைத் தொடர்ந்தார் நண்பர் லலிதாராம்.

‘‘திருச்சியில் டாக்டர் கலைக்கோவன் அய்யா ஒரு வரலாற்று ஆய்வு மையம் வச்சிருக்கார். அவருடன் நிறைய பயணிச்சிருக்கேன். அப்படியாக எனக்கு ஓரளவுக்கு சிற்பங்களை எப்படி பார்க்கணும், கட்டடக்கலையை எப்படி தெரிஞ்சுக்கணும் என்கிற பயிற்சி உண்டு. 

நானும் சுவாமிமலை சரவணனும் ஓராண்டு முன்னாடி விவாதிக்கும்போது இந்தப் பொறி விழுந்தது. வெளிநாடுகள்ல எல்லாம் அவங்க புராதன, வரலாற்றுச் சின்னங்களை கொண்டாடுறாங்க.

 ஆனா, நம்மூரில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிற கங்கைகொண்ட சோழபுரம் பத்திகூட அதிகம் தெரியிறதில்லை.அப்படியே தெரிந்தாலும் அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட விஷயத்தை நம்மால் வீட்டுக்கு எடுத்திட்டு வரமுடியாது. 

இப்பவும் நமக்கு சிற்பங்கள் எல்லாம் கிடைக்குது. ஆனா, திருப்பித் திருப்பி நாம் ஒரே விதமான சிற்பங்களைத்தான் வாங்குறோம். உதாரணத்திற்கு நடராஜர், விதவிதமான விநாயகர், கிருஷ்ணர் இப்படித்தான் சிற்பங்கள் வாங்குறோம். 

ஆனா, புராதன கோயில் சிலைகள் நம்மிடம் இல்ல. அதனால், அப்படியொரு வடிவமைப்பைக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக ‘விஸ்மயம் ஆர்ட்ஸை’ ஆரம்பிச்சோம். 

‘விஸ்மயம்’ என்பது ஒருவகையான கை முத்திரை. அது வியப்பைக் குறிக்கும் முத்திரை. பொதுவாக கோயிலில் துவார பாலகர்கள் எல்லாம் இந்த விஸ்மயம் முத்திரையை வச்சிருப்பாங்க. 

கோயில் உள்ளிருக்கும் இறைவனின் பெரும் ஆற்றலைப் பார்த்து நம்மை மீறி ஒரு வியப்பு ஆட்கொள்கிறது இல்லையா... அந்த உணர்வை குறிக்கக்கூடி  யதுதான் விஸ்மயம். 
இந்தச் சிற்பங்கள் எல்லாம் இப்படியான வியப்பைதான் ஏற்படுத்துகிறது என்பதால் இந்தப் பெயரை வச்சோம்.  

இதில் எங்களுடைய முதல் சிலையே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சரஸ்வதி சிலைதான். மூன்றாவது கண் உள்ள சரஸ்வதி சிற்பம் இது. அப்புறம் முன்கையில் எச்சரிக்கை பண்ற ஒரு முத்திரையும் இந்தச் சிற்பத்துல இருக்கும். 

பொதுவாக உக்கிரமான தெய்வங்களிடமே இப்படியான வீரத்தைக் குறிக்கக்கூடிய எச்சரிக்கை சின்னம் உண்டு. ஆனா, இங்க சரஸ்வதி சிலையில் இருக்குது. அதையெல்லாம் தாண்டி இந்தச் சிலை பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அதை அப்படியே மினியேச்சராகக் கொண்டு வந்தோம். 

அப்புறம் தாராசுரத்துல தோற்ற மாயை கொண்ட ஒரு சிற்பம் இருக்குது. அதுக்கு ‘ரிஷபகுஞ்சரம்’னு பெயர். ஒரே முகம்தான். ஆனா, அதை ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் காளை மாதிரி இருக்கும். 

இன்னொரு பக்கத்திலிருந்து பார்த்தால் யானை மாதிரி தெரியும். இதனையும் மினியேச்சராக செய்தோம். பிறகு திருச்சியில் உள்ள திருநெடுங்களம் என்ற ஊரில் பாடல் பெற்ற சிவன் கோயில் இருக்கு. இங்குள்ள சப்த மாதர்களை ஒரே தொகுப்பாக மினியேச்சராக்கினோம். இதைக் கொலுவில் வைப்பதற்காக சிறிய அளவிலும் செய்தோம். 

இப்போ ‘அஷ்டமங்கலம்’னு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிற்பத்தைக் கொண்டு வந்திருக்கோம். இது என்னனா, நாம் எல்லோரும் வீட்டு வாசலில் மங்கலகரமான விஷயங்கள் வைக்கணும்னு நினைப்போம். அதாவது ஒரு பாசிட்டிவ்வான வைப்ரேஷன் வேணும்னு செய்வோம். 

இந்த எண்ணம் நமக்கு குறைந்தபட்சம் 1200 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்தே இருக்குது. இந்த அஷ்டமங்கலம் தஞ்சாவூர் கோயிலில் வடக்கு நுழைவு வாயிலில் இருக்கு. அதை உருவாக்கியிருக்கோம்...’’ என லலிதாராம் சுவாரஸ்யமாக நிறுத்த, சுவாமிமலை சரவணன் தொடர்ந்தார். 
   
‘‘இப்ப நாங்க பத்து இஞ்ச் உயரம் என்கிற அளவில் இந்தச் சிற்பங்களைச் செய்திருக்கோம். ஒரு இஞ்ச் என்பது இரண்டரை சென்டிமீட்டர். அப்படினா 25 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. 
அப்படியாக சரஸ்வதி சிலை பத்து இஞ்ச் உயரமும், ஒன்றரை கிலோ எடையுமாகக் கொண்டு வந்தோம். சப்த மாத்ரிகாஸ்னு சொல்லப்படுற சப்த மாதர்களின் ஒவ்வொரு சிலையும் 10 இஞ்ச் உயரம் கொண்டது. 

இதை கொலுவில் வைப்பதற்காக ஆறு இஞ்ச்சிலும் செய்தோம். இதை சமீபத்திய நவராத்திரி திருவிழாவில் நிறைய பேர் ஆர்டர் பண்ணி வாங்கினாங்க.

அப்புறம் ரிஷபகுஞ்சரம் சிற்பம் 6 இஞ்ச் உயரமும், பத்து இஞ்ச் அகலமும் உடையது. அஷ்டமங்கலம் வீட்டின் வாசலில் மாட்டும்படி உருவாக்கியிருப்பதால் இதன் அகலம் 30 இஞ்ச் ஆகவும், உயரம் 9.5 இஞ்ச் ஆகவும் செய்திருக்கோம். 

இதை நாங்கள் 3டி டிஜிட்டலாக மீண்டும் மீட்டுருவாக்கம் செய்து கல் தூள் மூலம் சிற்பங்களைத் தயாரிக்கிறோம். அதனால் பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக கற்சிலைகள் போன்ற உணர்வைத் தரும்.

இப்போதைக்கு இதனை நாங்க இணையம் மூலமாக விற்பனை செய்திட்டு வர்றோம். மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. நாங்க வரலாற்றைத் தேடி அதனுள் என்ன வரலாறு இருக்குனு எல்லாம் பார்த்து செய்றது பலருக்குப் பிடிச்சிருக்கு...’’ என்கிறவர்களிடம் அடுத்து என்ன சிற்பம் என்றோம். 

‘‘இப்போ கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் மினியேச்சரை உருவாக்கப் போறோம். இது அவரின் 250வது ஆண்டு. அதை முன்னிட்டு செய்றோம். 
அப்புறம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள சிற்பங்களைப் பண்ணலாம்னு இருக்கோம். 

தொடர்ந்து தமிழகத்தின் அழகியலை வெளிகாட்டும் வெவ்வேறு சிற்பங்களை பண்ணலாம்னு நினைச்சிருக்கோம்...’’ என முத்தாய்ப்பாகச் சொல்கின்றனர் லலிதாராமும், சுவாமிமலை சரவணனும்!  

பேராச்சி கண்ணன்