காட்டுப்பய சார் இந்த பைசன் (எ) காளமாடன்!
‘‘நான் வைத்தது ‘காள மாடன்’ என்கிற பெயர்தான். ஆனால், பிசினஸுக்கு ஏத்த மாதிரி ஓடிடி, பன்மொழி டப்பிங் ரிலீஸ் இதையெல்லாம் மனதில் வைத்துதான் ‘பைசன்’ என்கிற பெயர் தேர்வு செய்தோம்...’’அழுத்தமாக சொல்கிறார் எப்போதும் சமூகத்தின் மீதான தன் பார்வையை செலுத்தி ஆழமாக கதை எழுதும் இயக்குநர்களில் முதன்மை லிஸ்ட்டில் இருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்தக் கதையிலும் சமூகப் பிரச்னையை பேசத் தயாராக இருக்கிறார்.
 என்ன செய்யப் போகிறான் இந்த ‘பைசன்’ காளமாடன் ?
மற்ற நகரங்களை விட தென் தமிழகத்து நகரங்களுக்கு ஒரு முகம் உண்டு. பிழைப்புக்காக எந்த நாட்டுக்கு போனாலும் தன்னுடைய ஊரில் ஒரு திருவிழா, குலதெய்வ வழிபாடு... இப்படி அழைப்பு கொடுத்துப் பாருங்க... எந்த வேலையாக இருந்தாலும் அப்படியே போட்டுட்டு குடும்பம் குட்டியாக ஓடி வந்துடுவான். முதல் மொட்டை ஊரில்தான் போடுவான். தன்னுடைய ஊர் எல்லைக்குள் நுழையும் பொழுதே முழுமையா அவனுடைய ஊர்க்காரனாதான் நுழைவான்.
 எல்லைச்சாமியைப் பார்த்ததும் தன்னிச்சையா அவன் கை கும்பிடும். இந்த முகத்தை வைத்து ஒரு கதை எழுதணும் என்பது ரொம்ப நாள் ஆசை. அப்படியான கதைதான் இந்த காள மாடா. விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்வதை எப்போதும் பின்பற்றுகிறீர்களே ?
 சினிமா என்பது ஆர்ட் ஃபார்ம்தான். இங்கே எது சொல்ல நினைத்தாலும் கலை வடிவத்தில்தான் சொல்ல முடியும். நேரடியா ஒரு செய்தியையோ அல்லது தகவலையோ சொல்ல செய்தி சேனல்களும், மீடியாக்களும் இருக்காங்க. அதற்கு சினிமா தேவையில்லை. உணர்வு பூர்வமா காட்சி வழியாக ஒரு தகவலை மக்கள் கிட்ட சேர்க்கத்தான் சினிமா. நான் வளர்ந்தது விவசாய பூமி. காலையில் எழுந்து ஒரு அம்மா களத்து மேட்டுக்கு கிளம்பினாலே ஒரு நாய் கூடவே போகும்.
 அங்கே போனால் காளை மாடு, கன்னுக்குட்டி, ஆடுனு அத்தனையும் சேர்த்து உழைக்கும். இப்படி ஏதோ ஒரு விலங்கினம் கூடவே இருக்கும். என்னுடைய வாழ்வியலை கதையா எழுதும்பொழுதும் விலங்குகளை பிரிக்க முடியலை. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள பந்தத்தை அடிப்படையாக வைத்து காட்சிகள் அமைக்கும்பொழுது பார்வையாளன் சுலபமா கதைக்குள்ள வந்திடுவான்.
 துருவ் விக்ரம்..?
என்னுடைய காள மாடன், ஒரு முரடன். காட்டுப்பய. கோபம் உடல் முழுக்க வரக்கூடிய ஒரு மனுஷன். அவனுக்கு ஏத்த ஒருத்தனை நான் தேடிட்டு இருந்தேன்.
அப்போதான் ரஞ்சித் சார், ‘துருவ் விக்ரம் நடிச்சா எப்படி இருக்கும்டா?!’ எனக் கேட்டார். இந்தக் கதை ‘பரியேறும் பெருமாள்’ படம் கொடுத்த பிறகு தயாரான கதை. அப்போதே அடுத்து ‘நீலம்’ தயாரிப்பில் ஒரு படம் என முடிவு செய்துட்டோம். பிறகு விக்ரம் சாரையும், துருவையும் சந்திச்சு பேசினோம்.
அதற்குள் நான் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் பிசியாகிட்டேன். அவங்களும் ‘மகான்’ உட்பட படங்களில் பிசி.‘இந்தக் கதைக்குள் துருவ்’ என்பதில் எனக்கு நிறைய தயக்கமிருந்தது. காளை மாடுகள் கூடவே இருக்கும் ஒரு மனிதன். அவன் பார்க்கற பார்வை கூட காளை மாடு போலவே பார்ப்பான். கோபமான கபடி வீரர். இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் துருவ்வை யோசிக்க முடியலை. அப்ப ரொம்ப சின்ன பையன். ஆனா, துருவ் ரொம்ப தன்னம்பிக்கையா சரி சொன்னார்.
ஆறு மாதங்கள் டைம் கொடுத்தேன். என்னுடைய காள மாடன் இப்படிதான் இருக்கணும் என ஒரு ஸ்ட்ரக்சர் காண்பிச்சேன். அப்போதும் ‘ஆறு மாதம் கழித்து நீங்க எப்படி வர்றீங்களோ அதைப் பொறுத்துதான் நான் முடிவு சொல்வேன்’ என சொல்லிட்டேன். ‘இல்லைன்னாலும் நாம சேர்ந்து ஒரு படம் செய்யலாம். ஆனா, இந்தக் கதை வேண்டாம்’ அப்படின்னு
சொன்னேன்.
அவருக்குள்ள ஏதோ ஒரு நெருப்பு இருக்கு. ஆறு மாதம் கழித்து என் கண் முன்னாடி வந்தபோது அந்த சின்ன வயசு ஸ்மார்ட் பாய் துருவ் அங்கே இல்லை. சவாலா எடுத்துக்கிட்டு தயாராகியிருக்கார். என்னுடைய டிரெயினர், என்னுடைய படக்குழு கொடுத்த சவால்கள் அத்தனைக்கும் தாக்குப்பிடிச்சார்.
இப்போ என்னுடைய ‘மாடன்’ இடத்தில் துருவை தவிர யாரையும் யோசிக்க முடியலை. என்னை நம்பி எனக்குத் துணையாக நின்ன ஒரு நடிகர். சில்வர் ஸ்பூன் குழந்தை. அதை எல்லாம் உடைச்சு, இப்போ என் குழந்தையாக மாறின மாதிரி இருக்கு. அப்பா விக்ரம் என்ன சொன்னார்..?
படத்தின் துவக்க விழாவில் பார்த்ததுடன் சரி. அதன் பிறகு சாரை நான் பார்க்கலை. படம் குறித்து எந்தக் கேள்வியும் என்கிட்ட கேட்கலை. ‘பையன் எப்படி நடிக்கிறான்? கதை என்ன? கிளைமாக்ஸ்ல என்ன செய்யறீங்க...’ இப்படி ஏதாவது கேட்டிருந்தால் கூட எனக்கு பெரிதா அழுத்தம் இருந்திருக்காது.
ஆனால், மகனைக் கொண்டு வந்து இந்த கிராமப்புறங்களில் ஸ்கூலில் விட்டுட்டு, ‘இனிமே உங்க பொறுப்பு. நாங்க வரமாட்டோம்’ அப்படின்னு சொல்லிட்டு போயிடுவாங்க. நமக்கு பொறுப்பு இன்னும் அதிகமாகும். ‘ஐயோ... நம்மள நம்பி ஒரு பையனை விட்டிருக்காங்களே’ அப்படின்னு தோணுமில்லையா... அப்படி எனக்கு இருந்தது. முரட்டுத்தனமான கபடி கேம் எல்லாம் இருக்கு. அதிலே ஏதும் அடி படக் கூடாது. மேலும் ‘இளங்கன்று பயமறியாது’ எனச் சொல்வாங்க. அப்படி என்ன சொன்னாலும் துருவ் செய்தார். அதுவே இன்னும் பயத்தை அதிகரித்தது.அதுவும் என்னை மாதிரி ஒருத்தன்கிட்ட பிள்ளைய கொடுத்திட்டு நிம்மதியா எப்படி விக்ரம் சார் இருந்தார்னு தெரியலை. 3 வருஷம் எனக்கு பெரிய பொறுப்பு.
என்ன கதை..?
தென்னாட்டு கபடி, தெய்வ வழிபாடு. இதற்கிடையிலே ஒரு துரோகம், கோபம், சமூக அழுத்தம்னு அனைத்தும் சேர்ந்த கதை. அந்த அழுத்தத்தில் இருந்து உடைத்து வரும் ஓர் இளைஞன். அவன்தான் ‘பைசன்’.டெம்ப்ளேட் பிரேக்கராக டெக்னீஷியன்கள், நடிகர்கள் என மாற்றிக்கொண்டே இருக்கிறீர்களே?
என்னுடைய கதையை நம்பிதான் படம் செய்கிறேன். அந்தக் கதைக்கு என்ன தேவையோ அந்தக் கலைஞர்களையும் டெக்னீசியன்களையும் அதுவே தேர்வு செய்துக்கும்.
ஒரு கதை... அதில் யார் ஒப்புக்கொள்கிறார்களோ அந்தப் படம். அடுத்த கதைக்கு பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் என கிடைத்தால் அதை செய்வேன்.
எனக்கு அழுத்தம் இல்லாமதான் படம் இயக்கறேன். ‘வாழை’ கதை எனக்கு செய்தே ஆகணும். பிடிச்ச கதை. ஆனால், பட்ஜெட் இல்லை. அதற்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ செய்தேன். அடுத்த படத்தில் தனுஷ், ரஹ்மான் சார் மியூசிக். மார்கெட், பட்ஜெட் எல்லாமே பெரிது. நானும் ரிலாக்ஸாக வேலை செய்வேன்.
அனுபமா பரமேஸ்வரன், லால் சார், பசுபதி சார், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணா, அழகம்பெருமாள் சார் இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க. டெக்னீஷியன்கள் அத்தனை பேரும் இந்தப் படத்துக்குப் பிறகு அவங்கவங்க கரியரில் அடுத்த கட்டம் போகிற மக்கள்தான். நிவாஸ் கே பிரசன்னா மியூசிக், பேக்ரவுண்டு ஆச்சரியப் படுத்திருக்கார்.
எழில் அரசு கே சினிமாட்டோகிராபி. ‘ஸ்டார்’, ‘டாடா’ படங்கள் செய்தவர். சக்தி திரு, எடிட்டர். இந்தப் படத்தில்தான் அறிமுகம். துருவ் போலவே இந்தப் படத்தின் மூலம்தான் கரியரே ஆரம்பிக்கப் போகிற நிறைய டெக்னீஷியன்கள் படத்தில் வேலை செய்திருக்காங்க. எதிர்மறை விமர்சனங்களை அதிகம் எதிர்கொண்டவர் நீங்கள்... உங்கள் பார்வை என்ன?
இங்கே ஒரு கேம் உருவாக்கப்பட்டிருக்கு. அது சினிமாவைச் சேர்ந்த ஒரு சிலரே உருவாக்கிய கேம்தான். அந்த கேம் விளையாட பணம் தேவை. அந்தப் பணம் கொடுத்தால் ஒருவிதமான விமர்சனம், கொடுக்கலைன்னா வேறு விதமான விமர்சனம்.
இந்த கேம் ரொம்ப நாட்கள் நீடிக்காது. ஆரோக்கியமான விமர்சனங்கள் கொடுக்கறவங்க, அவங்க வேலையை அழுத்தமா செய்திட்டு இருக்காங்க. அந்த விமர்சனங்களில் குறை சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். பெர்சனல் தாக்குதல் செய்தால் கடந்து போயிடுவேன். படத்தை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கு. ஆனால், ஒரு சக மனிதனை கேலி செய்ய யாருக்குமே உரிமை கிடையாது. எதார்த்த படங்கள் செய்யும் இயக்குநராக சமீபத்திய சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் தெய்வ வழிபாடுகள் சார்ந்த படங்கள் வெற்றியை எப்படிப் பார்க்கறீங்க?
இனிமே மக்களை ஏமாற்ற முடியாது என்பதை சினிமா பொட்டில் அறைஞ்சா மாதிரி உணர்த்திடுச்சு. சாதாரண மனுஷன் நூறு பேரை தூக்கி அடிக்கற மாதிரி படம் எடுக்க முடியாது. இதையே அவன் சூப்பர் ஹீரோ, சாமி அவனுக்குள்ள இருக்குன்னு சொல்லிப் பாருங்க... ஏத்துக்குவோம்.
நாயகனை மாஸ் ஹீரோவாகக் காட்டணும், அப்போ சூப்பர் ஹீரோவாக காட்டிட்டா கேள்வி கிடையாது, லாஜிக் கேட்க மாட்டாங்க. சினிமாட்டிக் அனுபவமும் சுலபமா கொடுத்து ஆடியன்ஸை உட்கார வைக்க முடியும். இதை நல்ல பிஸினஸ் ஸ்டேட்டர்ஜியாக பார்க்கறேன்’’. சமூகத்தில் மாற்றம் உண்டாகியிருக்கா?
டிஜிட்டலில் நடக்கும் சண்டைகளைப் பார்த்து சாதி அதிகமா இருக்குன்னு நாம நினைக்கிறோம். ஆனால், முன்பை விட இன்னைக்கு சாதிக் கொலைகள் குறைஞ்சிருக்கு. அப்படியான கொலைக்கு பொது மக்கள்எதிர்க் குரல் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
குறைந்தபட்சம் அரிவாள் சகிதமா ஒருத்தன் போஸ் கொடுத்தால் அவனைத் திட்டுகிற, அது தவறுன்னு சுட்டிக்காட்டுகிற அளவுக்கு மக்கள் மனநிலை உயர்ந்திருக்கு. யூடியூப்ல டிரோல் வீடியோ போடுகிற அளவுக்கு தைரியம் வந்திருக்கு. இதுவே பெரிய மாற்றம். இன்னும் மாறும், மாறணும். ‘பைசன்’ காளமாடன் எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கும்? தென் தமிழகத்தின் இயல்பான முகத்தைக் காட்டும்.
ஷாலினி நியூட்டன்
|