வாராரு வாராரு கருப்பரு வாராரு...



4.தேவர்களும் அசுரர்களும் கருப்பண்ண சாமியும்!

‘மன்னர்’, ‘சக்கரவர்த்தி’ என்றெல்லாம் அழைக்கிறோம் அல்லவா? 

அப்படி ‘இந்திரன்’ என்பது பதவியின் பெயர். இந்த இந்திரப் பதவியை அடைந்தவர்கள் அனைவருமே ‘இந்திரன்’ அல்லது ‘தேவேந்திரன்’ என்றே அழைக்கப்பட்டார்கள்.
அப்படி ‘மந்தரத் துருமன்’ என்பவன் ஒருகாலத்தில் ‘இந்திரனாக’ இருந்தான். இவன் மாபெரும் அம்பாள் உபாசகன். பணிவுடனும் பக்தியுடனும் அம்பிகையை வழிபடுவதில் இவனுக்கு நிகர் இவனே என்ற பெயரைப் பெற்றான்.

இதன் விளைவாக, அம்பிகை அருள் மழை பொழிந்தாள். தன்னிலிருந்து தன்னுடைய அம்சமாக, ‘விஜயஸ்ரீ’, ‘நித்யஸ்ரீ’ என்ற இரு அழகிய பெண்களை அம்பிகை தோற்றுவித்தாள். 

அம்பிகையின் ஆணைப்படி, தேவலோகம் வந்த இருவரும் தங்களின் நற்பலன்களை எல்லாம் இந்திரன்மீது பொழிந்தனர். 

செல்வச் சிறப்போடும் வெற்றிக் களிப்போடும் மூவுலகங்களையும் தேவேந்திரன் ஆண்டான். நாள்தோறும் தனது யானையான ஐராவதத்தின் மீது அமர்ந்தபடி விஜயஸ்ரீ, நித்யஸ்ரீ இரு பக்கமும் வர, உலா செல்வது இந்திரனின் வழக்கம்.அப்படி ஒருநாள் அவன் வந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது. தேவலோகத்தையே புரட்டிப் போட்ட நிகழ்வு அது.

எலும்பும் தோலுமாக, மான் தோல் அணிந்தபடி துர்வாச மகரிஷி, இந்திரனைக் காண வந்துகொண்டிருந்தார். அவரது கரங்களில் அழகிய மாலையொன்று இருந்தது. அம்மாலையை துர்வாசருக்கு வழங்கியது ஒரு கந்தர்வப் பெண்தான்.வழியில்தான் அவளை சந்தித்தார். அந்த கந்தர்வப் பெண்ணும் அம்பாள் பக்தைதான். 

அவளது பக்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு மலர் மாலையை அம்பிகை அவளுக்கு அளித்தாள். தன்னைவிட துர்வாசர் உயர்ந்தவர் என்பதால் அந்த மாலையை அவருக்கு அளித்துவிட்டாள் அந்த கந்தர்வப் பெண்.

அம்பிகையின்  பிரசாதம்! சிலிர்த்த துர்வாசர், அம்பாள் பக்தனான இந்திரனுக்கு அதை வழங்க முடிவு செய்தார். தேவலோகம் வந்து சேர்ந்தார்.

அப்பொழுதுதான் ஐராவதத்தில் அமர்ந்தபடி தேவேந்திரன் எதிரில் வந்தான். கந்தர்வப் பெண் வழியாக தனக்குக் கிடைத்த மாலையை அப்படியே இந்திரனுக்கு அளித்தார்.

அம்பிகையின் அருள் தனக்கிருக்கிறது... தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் அத்தருணத்தில் இருந்த இந்திரன், அந்த மாலையை பயபக்தியுடன் தன் கரங்களால் பெறவில்லை. மாறாக ஐராவதத்தை பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டான்.தனது தும்பிக்கையால் அந்த மாலையைப் பெற்ற ஐராவதம், அதை தன் காலில் போட்டு மிதித்தது.

துர்வாசரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘உன் ஆணவத்துக்கு எவை எல்லாம் காரணமோ அவை அனைத்தும் உன்னைவிட்டு விலகட்டும்’ என சாபமிட்டார்.
அடுத்த கணம், இந்திரன் தரையில் இருந்தான். ஐராவதம் உட்பட தேவலோகத்தில் இருந்த அவனது அனைத்து செல்வங்களும் மறைந்தன. விஜயஸ்ரீயும் நித்யஸ்ரீயும் இந்திரனை விட்டு அகன்றிருந்தார்கள். 

‘தானவர்கள்’ வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். தேவர்களுடன் நடைபெற்ற அனைத்து போர்களிலும் ‘தானவர்களே’ வெற்றிவாகை சூடினார்கள்.

தேவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உடலிலும் வலுவில்லை; மனதிலும் தெம்பில்லை. தப்பித் தவறி ‘தானவர்களில்’ யார் மேலாவது தேவர்கள் ஈட்டியை பாய்ச்சினாலோ, வாளால் கொன்றாலோ... மரணமடைந்த அந்த தானவன் மீண்டும் உயிர்த்தெழுந்தான்!

‘தானவர்களின்’ குருவான சுக்கிராச்சாரியார் இறந்தவர்களை உயிர்ப்பித்தபடியே இருந்தார்.எனவே தேவர்கள் ஓடி ஒளிந்தார்கள். ‘தானவர்கள்’ தேவலோகத்தை மட்டுமல்ல... ஈரேழு உலகங்களையும் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.இந்திரன் கதறினான். அழுதான். தங்கள் குருவான வியாழனின் பாதத்தை பணிந்தான். இந்திரனை அழைத்துக் கொண்டு, வியாழன் பிரம்மதேவரை சந்தித்தார். மூவரும் வைகுண்டம் சென்றார்கள். பாற்கடலில் வீற்றிருந்த மகா விஷ்ணுவின் பாதத்தைப் பற்றினார்கள். 

‘‘குறிப்பிட்ட சில மூலிகைகளைச் சொல்கிறேன். அவற்றை பாற்கடலில் போட்டு அம்பிகையை பிரார்த்தனை செய்யுங்கள். பாற்கடலை கடையுங்கள். இந்திரா... நீ இழந்தவை அனைத்தையும் பெறுவாய்...’’ திருமால் ஆசி வழங்கினார்.மகா விஷ்ணு குறிப்பிட்ட மூலிகைகளை இந்திரன் கொண்டு வந்தான். பாற்கடலில் அவற்றை பெருமாள் சொன்ன முகூர்த்தத்தில் போட்டான். அம்பிகையை மனதார தொழுதான். குழந்தையைத் தாய் ஒதுக்குவாளா? அம்பிகை தோன்றினாள். 

‘‘தேவர்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. தானவர்களையும் கூட்டு சேர்த்துக் கொள். பாற்கடலில் இருந்து வரும் அமிர்தத்தை பருகுங்கள். இறப்பில்லா வாழ்வும் நோய் நொடியில்லா ஆரோக்கியமும் கிட்டும்...’’ அம்பிகை சொன்னபடியே, தானவர்கள் ஆளும் நகரமான மகேந்திரபுரிக்கு இந்திரன் சென்றான். 

தானவர்களின் தலைவனும் விரோசன குமாரனுமான அரசன் பலியை சந்தித்தான்.‘‘அமிர்தம் சரிபாதியாக பங்கிடப்படும் என்றால்... தானவர்கள் பாற்கடல் கடைய உங்களுடன் வருவார்கள்...’’ சுக்கிராச்சாரியாரின் ஆணைப்படி பலி, சொன்னான்.இந்திரன் சம்மதித்தான். 

வியாழனும், சுக்கிராச்சாரியாரும் இணைந்து முகூர்த்தத்தைக் குறித்துக் கொடுத்தார்கள். தானவர்கள் ஒருபக்கமும் தேவர்கள் ஒருபக்கமுமாக நின்று பாற்கடலை கடைந்தார்கள். இதற்கு கயிறாக இருக்க, பரமசிவனின் கழுத்தில் இருந்த வாசுகி பாம்பு சம்மதித்தது.மத்தாக நின்ற மந்தர மலை நகரத் தொடங்கியது; மத்து நிலைக்காமல், பாற்கடலைக் கடைய முடியவில்லை.

அம்பிகையின் கடைக்கண் பார்வையை தேவர்கள் நாட, தானவர்களோ மந்தர மலையோடு சண்டையிட்டனர். தானவர்களின் கோபத்தால் மனமொடிந்த மந்தரம் மேலும் சரிந்தது. 
அம்பிகை திருமாலை நோக்கினாள்.

மறுகணம் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து, அடியில் சென்று மந்தர மலையைத் தாங்கினார். பேரொளி வடிவம் கொண்ட அம்பிகை, தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் ஒளியாகவே நகர்ந்தாள்.ஒளியை உதாசீனப்படுத்திய தானவர்கள், தங்களின் வலிமையால் மட்டுமே பாற்கடலைக் கடையமுடியும் என்று ஆணவத்துடன் இருந்தனர்.
தேவர்களோ, ஒளிப் பிரகாசத்தைக் கைகூப்பித் தொழுது தேவியை வணங்கினர்.

ஒருபக்கம் அட்டகாசமும் ஆர்ப்பாட்டமும்; மற்றொரு பக்கம் பணிவும் வணக்கமும்.விண்ணில் திரிந்த சித்தர்கள் வியப்போடு இக்காட்சியைக் கண்டனர்.
தானவர்கள் பக்கம் வெப்பக் காற்று வீசியது. களைப்பும் உளைச்சலும் அலைக்கழித்தாலும், ஆணவத்தில் நின்ற தானவர்கள், ஆர்ப்பாட்டத்தை விடாமல் ஆட்டம் போட்டனர்.
பணிவான தேவர் பக்கம், குளிர் காற்று வீசியது. பணிந்து அம்பிகையை மனதார வேண்டினர்.

எதிரும் புதிருமாக இருந்த இருபக்க நிலையைக் கண்டபோதும், அம்பிகை பேதமில்லாமல் இருவருக்கும் அருள்வதற்குத் தலைப்பட்டாள்.அம்பிகையின் அம்சமான வாருணிதேவி, கடலுக்குள்ளிருந்து வெளிப்பட்டாள். 

தானவர்களுக்கு எதிரில் போய் நின்றாள்.ஐராவதம், உச்சைசிரவஸ் என்னும் குதிரை உள்ளிட்ட தேவலோகத்தின் செல்வங்களும் சக்திகளும் வரும்... அவற்றை வைத்து மூவுலகையும் எந்தப் பிரச்னையும் இன்றி ஆளலாம் என காத்துக் கொண்டிருந்த தானவர்களுக்கு -மென்மையும் பேரழகும் கொண்ட வாருணியை வைத்து என்ன செய்வது என்னும் சந்தேகம் எழுந்தது. ‘போ, போ...’ என்று வாருணியை விரட்டினார்கள்.

விண்ணிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சித்தர்கள், ‘அசுர, அசுர...’ என்று ஒலி எழுப்பினார்கள்.‘சுரபி’ என்றும் வழங்கப்பட்ட வாருணியை விரட்டியதால், சுரபிக்கு எதிரானவர்கள் என்னும் பொருளில் சித்தர்கள் சொன்ன ‘அசுர’ என்னும் பதமே தானவர்களுக்கு பெயராக அமைந்து ‘அசுரர்கள்’ என்னும் புதுப்பெயர் பெற்றார்கள்.

வாருணி, தேவர்கள் பக்கம் சென்றாள். அம்பிகையின் அருளை உணர்ந்துகொண்ட இந்திரன், வாருணியை வரவேற்று வணங்கினான்.அவ்வளவுதான். அம்பிகையின் அருள் தேவர்கள் பக்கம் பாய்ந்தது. பணிவுக்கும் பக்திக்கும் கிட்டிய பரிசு இது.

இதனைத் தொடர்ந்து வெள்ளை நிறத்தில் உச்சைசிரவஸ் வெளிப்பட்டது. ஐராவதம் என்னும் யானையை எதிர் பார்த்திருந்த அசுரர்கள், ஏமாற்றத்தோடு தலையைத் திருப்பிக் கொள்ள, குதிரையை தேவர்களிடம் கொடுத்தார் திருமால்.

தலையைத் திருப்புவதற்குள்ளாகவே, அப்சரஸ் பெண்கள் வெளிப்பட்டனர். அவர்களின் அழகைக் கண்டு, ‘எனக்கு, உனக்கு’ என்று அசுரர்கள் கூறுபோட முற்பட, அதற்கு இடம் கொடுக்காமல் அவர்களையும் தேவர்கள் பக்கமே திருமால் அனுப்பினார்.அடுத்தது, பாரிஜாதச் செடி தலை தூக்கியது. நல்ல மணத்தை வெளியிட்டது. நறுமணத்திற்கு அசுரர்கள் முகம் சுழிக்க, அதுவும் தேவர்கள் பக்கமே சென்றது.இந்நிலையில்தான், அம்பிகை இன்னொரு விளையாட்டு விளையாடினாள். சந்திரனும், காலகூட நச்சும் ஒன்றாகத் தோன்றின.

சந்திரனை சிவபெருமான் பிடித்துக் கொண்டார். காலகூடத்தை நாகலோக நாகர்கள் உறிஞ்சி உண்டனர். இருப்பினும், விஷம் கூடுதலாக வழிந்தது.தடுமாறிய தேவர்கள், அம்பிகையை வேண்டினர். அகக்கண்களில் அம்பிகையின் அருள் வதனத்தை நோக்கினர். திருக்கைலாயம் நோக்கி ஓடத் தொடங்கினர். 

விஷத்தை இன்னமும் கூடுதலாக விழுங்கும்படி, நாகர்களை அசுரர்கள் அடிக்கத் தொடங்கினர்.நாகர்களும் வாசுகியும் இதனால் மேலும் விஷத்தை வெளியிட, இத்தருணத்தில்தான், தேவர்களோடு கைலாயத்துக்கு அசுரர்களும் ஓடினர்.காலகூடத்தைத் தாமே ஏற்றுக்கொண்டு சிவபெருமான் அருளிச் செய்ய, மீண்டும் கடைதல் தொடர்ந்தது. 

ஒவ்வொரு பொருளும் வெளிவர வெளிவர, பளபளப்பாகவோ பகட்டாகவோ தெரிந்தால் அது தங்களுக்குள் யாருக்கு என்று அசுரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். இப்படிச் சண்டையிட்டதாலேயே, கவனம் சிதறிய நேரத்தில், அதை வேறொருவர் எடுத்துக்கொள்வதைத் தடுக்கமுடியவில்லை.

தேவர்களோ, அது எடுப்பவர்க்கு உரித்தானது என்று ஒற்றுமையோடும் பணிவோடும் இருந்தனர்.இவ்வளவுக்கும் பின்னர் கையில் அமிழ்த கலசத்தோடு தன்வந்திரி வெளிப்பட்டார். அடுத்த கணமே, ஸ்ரீ லட்சுமிதேவியும் வெளிப்பட்டாள்.மலங்க மலங்க விழித்த அசுரர்களுக்கு, அமிழ்தம் வந்துவிட்டது என்பது புரியவே நேரமானது.

சித்தர்களும் தேவர்களும் திருமாலும் பிரம்மாவும் தேவியைப் பலவிதமாகத் துதித்தனர்.அம்பிகையின் கடைக்கண் நோக்கைப் புரிந்துகொண்ட சகரன் (கடல் அரசன்), லட்சுமியைத் திருமாலிடம் சேர்ப்பித்தான்.

அமிழ்தத்துக்கான சண்டை ஆரம்பித்தது. அம்பிகையை வழிபட்ட திருமால், மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை திசை திருப்பி அகற்றினார்.

பெண் வடிவிலும் பேரழகிலும் மயங்கித்தான் அசுரர்கள் அமிழ்தத்தை இழந்தனர்.பிரம்மாண்ட மகாபுராணத்தின் பகுதியான ‘லலிதோபாக்கியானம்’ இந்த நிகழ்ச்சியை வெகு விரிவாக விளக்குகிறது. அதேபோல் ‘ஸ்ரீமத் பாகவதமும்’ இந்தச் சம்பவத்தை கூர்மாவதாரத்தில் பதிவு செய்திருக்கிறது.மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரமே கூர்மாவதாரம். அதாவது ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர்... ஆகியோருக்கு எல்லாம் முற்பட்டது, இந்த கூர்மாவதாரம்.

ஆக, காலத்தால் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு எல்லாம் மிக மிக மிக முந்தியது.தேவர்களும் தானவர்கள் என்கிற அசுரர்களும் அமிர்தத்துக்காக பாற்கடலைக் கடைந்த இந்த சம்பவத்தின் போதுதான் -தன்வந்தரி அமிர்தத்தோடும், அருள்பாலித்தபடி லட்சுமியும் வெளிப்பட்டபோதுதான் -தேவர்களின் - தேவலோகத்தின் - மாபெரும் பாதுகாவலரான... அசைக்க முடியாத காவல் வீரரான கருப்பண்ணசாமி தோன்றினார் என்பது ஐதீகம்.ஆக, காலத்தால் முற்பட்டவர் கருப்பண்ணசாமி என பயபக்தியோடு சொல்கிறார்கள்.
இருக்கட்டும். நம் கருப்பர் இப்படித்தான் தோன்றினாரா?

(கருப்பர் வருவார்) 

- கே.என்.சிவராமன்