இந்தியாவில் குடிசைகள் இல்லாத முதல் நகரம்!
இந்தியாவில் இருக்கிறோமா அல்லது ஐரோப்பிய நகரங்களில் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு நகரம், சண்டிகர். அந்தளவுக்கு நம்மை வசீகரிக்கக்கூடிய இந்நகரம், இந்தியாவின் வடமேற்கில் அமைந்திருக்கிறது. இந்த அழகிய நகரம் ஒன்றியப் பகுதியாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாகவும் திகழ்கிறது. 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து, விரிந்திருக்கும் சண்டிகரின் மக்கள் தொகை, சுமார் 13 லட்சம்.  இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முக்கியமான நகரமும் இதுவே. இதன் நகர வடிவமைப்பும், கட்டடங்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. சுவிஸ் - ஃபிரெஞ்சைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான லே கார்புயூஸர்தான் சண்டிகர் நகரத்தை உருவாக்குவதற்கான மாஸ்டர் பிளானை வடிவமைத்துத் தந்தவர்.
லே கார்புயூஸர் மற்றும் பிரிட்டிஷின் கட்டடக்கலை நிபுணர்களான ஜேன் ட்ரூ மற்றும் மேக்ஸ்வெல் ஃப்ரை ஆகியோரின் தலைமையிலான குழுவினர்தான் சண்டிகரில் உள்ள பெரும்பாலான அரசு கட்டடங்களையும், வீடுகளையும் கட்டமைத்துக் கொடுத்தனர். இன்று‘அழகு நகரம்’ என்று சண்டிகருக்கு ஒரு செல்லப்பெயரும் இருக்கிறது.
மட்டுமல்ல, சமீபத்தில் இந்தியாவில் குடிசைகள் இல்லாத முதல் நகரம் என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தியிருக்கிறது, சண்டிகர். அரசினால் அங்கீகரிக்கப்படாத அனைத்து குடிசைப்பகுதிகளையும் அழித்துவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு நல்ல குடியிருப்பை ஏற்படுத்தி, குடிசைகளே இல்லாத ஒரு நகரமாக மாறியிருக்கிறது சண்டிகர்.
சண்டிகரில் இருந்த ஒவ்வொரு குடிசைப்பகுதியையும் அகற்றியபோது, அந்த நிலத்தைச் சுற்றி யாரும் அத்துமீறி குடியேற முடியாதபடி பாதுகாப்பு வேலிகளை அமைத்தது சண்டிகரின் நகர நிர்வாகம். தவிர, அழித்த சுவடே தெரியாதபடி, அந்த இடங்களைத் தூய்மையாக்கியிருக்கிறது.
குடிசைப்பகுதிகளை அகற்றுவதற்கு முன்பு, அதில் குடியிருந்தவர்களுக்கு உரிய வீடுகளை சண்டிகரின் நகர நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே சண்டிகரைக் குடிசைகள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு நகர நிர்வாகம் திட்டமிட்டது.
முதலில் நகரில் எங்கெல்லாம் குடிசைப்பகுதிகள் இருக்கின்றன என்பது கணக்கிடப்பட்டது. நகரின் வெவ்வேறு பகுதிகளில் 18 குடிசைப்பகுதிகள் இருந்தன. இவற்றின் மொத்தப் பரப்பளவு, 520 ஏக்கர். இதன் மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்.
இந்த 520 ஏக்கர் நிலப்பகுதியும் அரசுக்குச் சொந்தமானது. அரசால் அங்கீகரிக்கப்படாமலேயே அங்கே குடிசைகளை உருவாக்கி, மக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடிசைகளை உடனே அகற்றிவிட முடியாது.
அப்படி அகற்றினால் அங்கிருந்தவர்கள் நடுத்தெருவுக்குத்தான் வர வேண்டியிருக்கும். அதனால் குடிசைப்பகுதிகளில் குடியிருந்தவர்களுக்கு ‘சண்டிகர் சிறிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்’தின் மூலம் மாற்று வீடுகளை ஏற்பாடு செய்ய ஆரம்பித்தது நகர நிர்வாகம்.
வீடுகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு, குடிசைகளை அகற்றியிருக்கின்றனர். அதாவது, குடிசைப்பகுதியில் வசித்துவந்தவர்கள் தங்களுக்கு வீடு வேண்டும் என்று அந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர்களின் உண்மை நிலையையும், தகுதியையும் உறுதிப்படுத்திய பிறகு அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. வீடு கிடைக்காமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வீடுகளைப் பெற்ற கதைகளும் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘‘குடிசைகளை அகற்றி, அரசு நிலங்களை மீட்பது மட்டுமே எங்களுடைய நோக்கமல்ல; குடிசைகளில் வாழ்ந்து வந்தவர்களுக்கு நல்ல வாழ்விடத்தையும், வாழ்க்கையையும் தருவதற்காகவே இந்த முன்னெடுப்பு...’’ என்கிறார் சண்டிகரின் துணை கமிஷனரான நிஷாந்த் குமார் யாதவ். கடந்த மே மாதம் செக்டார் 25ல் அமைந்திருந்த ஜண்டா காலனி எனும் குடிசைப்பகுதி அகற்றப்பட்டது. இதுதான் சண்டிகரின் மிகப்பெரிய குடிசைப்பகுதி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜண்டா காலனியின் நில மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய். இந்தக் குடிசைப்பகுதியை அகற்றுவதற்கு முன்பு அங்கே 10 ஆயிரம் பேர் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகரில் அகற்ற வேண்டிய கடைசி குடிசைப் பகுதியாக செக்டார் 38ல் அமைந்திருந்த ஷாபுர் காலனி இருந்து வந்தது. 4 முதல் 4.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து, விரிந்திருந்த இக்குடிசைப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். குடிசைகள் இருந்த நிலப்பகுதியின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய். இந்தக் குடிசைப்பகுதியையும் இரண்டு வாரத்துக்கு முன்பு அகற்றியதன் மூலம் குடிசைகள் இல்லாத இந்தியாவின் முதல் நகரம் என்ற சிறப்பை அடைந்தது சண்டிகர்.
ஒவ்வொரு குடிசைப்பகுதியையும் அகற்றும்போது, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த 500க்கும் மேலான காவல்துறையினர் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
ஜேசிபி மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் குடிசைகளை அகற்றுவதற்காக ஏழு குழுவினர் செயல்பட்டிருக்கின்றனர். இந்தியாவின் மற்ற நகரங்களும் குடிசைகள் இல்லாத நகரமாக மாறுவதற்கு ஒரு மாடலை உருவாக்கி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது சண்டிகர்.
த.சக்திவேல்
|