ஆன்லைன்ல வரன் பார்க்கறீங்களா..? இதைப் படிங்க முதல்ல!



இந்தியாவை அதிரவைக்கும் ‘மியூல் கணக்கு’ மோசடிகள்

என்ன இது என மல்ஹோத்ரா தலையில் கையை வைத்து மர்ந்துவிட்டார்.அங்கீகரிக்கப்பட்ட மேட்ரிமோனியல் சைட்தான். அப்படி நினைத்துதான் அதில் கட்டணம் செலுத்தி தன் மகளின் விவரங்களை புகைப்படத்துடன் அனுப்பி வரன் தேடத் தொடங்கினார்.பார்த்தால்... அது டுபாக்கூர் சைட்.
அழுக்கு பைஜாமா ஜிப்பா. ஆங்காங்கே கிழிசலும் உண்டு. இதுதான் லலித்தின் அடையாளம். சத்தீஸ்கர் மாநிலத்தில் சாலையோரமாக சப்பாத்தி கடை நடத்தி வருகிறார். விறகடுப்பில் அவரது மனைவி சப்பாத்தியை சுட்டபடி இருப்பார். காலை பத்து மணிக்கு மேல் கடையைத் திறப்பார்கள். இரவு பத்து மணி வரை சப்பாத்தி விற்பனையாகும்.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் இறுதியில் லாபமாக கிடைத்தால் பெரிய விஷயம்.அப்படியிருக்க இந்த லலித் மாதம்தோறும் வங்கிப் பரிவர்த்தனையாக ரூபாய் பத்து லட்சம் வரை டர்ன் ஓவர் செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

மேலே குறிப்பிட்ட இரு செய்திகளும் தனித்தனியானவை. மல்ஹோத்ராவுக்கும் லலித்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப் போனால் டுபாக்கூர் மேட்ரிமோனியல் ஆன்லைன் தளத்தை நிர்வகிப்பது லலித் அல்ல.போலவே லலித்தின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் டர்ன் ஓவர் ஆகும் ரூபாய் பத்து லட்சத்துக்கும் மல்ஹோத்ராவுக்கும் மைக்ரோ அளவு கூட சம்பந்தமில்லை.

ஆனால், இவ்விருவரையும் இணைக்கும் சங்கிலி ஒன்று இருக்கிறது.அதுதான் ‘மியூல் கணக்கு’.சீனாவிலிருந்து இயங்கும் மோசடி கும்பலின் கீழ் செயல்படும் சைபர் குற்றவாளிகள் அமைப்பை ராய்ப்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளனர். 

இதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ். ஏனெனில் இதுவரை இந்தியா காணாத சைபர் குற்றம் இது!சத்தீஸ்கரில் சைபர் குற்றங்களைத் தடுக்க தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் சைபர் ஷீல்’டின் விசாரணையில் ஒரு பெரிய திருப்புமுனையாக, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் நூற்றுக்கணக்கான மியூல் வங்கிக் கணக்குகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான சைபர் மோசடி மற்றும் பணமோசடி வலைப் பின்னலைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த நான்கு குற்றவாளிகளையும் ஒரே இடத்தில் காவல்துறை பிடிக்கவில்லை. மாறாக ஒடிசா, குஜராத், பிலாஸ்பூர் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூரில் தனித்தனியாக கைது செய்துள்ளனர்.மட்டுமல்ல; சர்வதேச சைபர் கிரைம் சிண்டிகேட்களுடன் அவர்களைத் தொடர்புபடுத்தும் முக்கிய ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்துக்கு இடமான பணப்பரிவர்த்தனைகள் நடப்பதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இவ்வளவு பெரிய மோசடி கும்பல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. 

​​ராய்ப்பூரில் நடத்திய காவல்துறை சோதனையில், ஜீவன் ஜோடி, ராயல் ரிஷ்டே மற்றும் இ-ரிஷ்டா என்ற பெயர்களில் இயங்கி வந்த போலி அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த அலுவலகங்களில் இருந்து எண்ணற்ற மொபைல் போன்கள், கணினிகள், சிம் கார்டுகள் மற்றும் 60 வங்கிக் கணக்குக் கருவிகள் உள்பட பெரிய அளவிலான குற்றவியல் செயல்பாடு களுக்கு உதவும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

திருமண வரன் என்ற பெயரில் www.erishtaa.com, www.jeevanjodi.com மற்றும் www.royalrishtey.com போன்ற போலி திருமண வலைத்தளங்களை உருவாக்கி, போலி புகைப்படங்கள் மற்றும் வருங்கால மணமகள் மற்றும் மணமகன்களின் தவறான சுயவிவரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளனர். இப்படி இந்தியா முழுவதும் போலியான மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலம் ஏராளமானோரிடம் இருந்து பணம் பறித்துள்ளனர்.

இப்பணத்தை பல ‘மியூல் வங்கிக் கணக்கு’களுக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அவை அங்கீகரிக்கப்படாத செல்போன் செயலிகள் மூலம் சீனாவில் இருப்பவர்களால் ரிமோட் மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அது என்ன ‘மியூல் கணக்கு’?

நமது நாட்டில் உள்ள சாதாரண மக்களின் வங்கிக் கணக்குகளை கிரிமினல்கள் பயன்படுத்துவதுதான் ‘மியூல் கணக்கு’. தெரியாமல் எல்லாம் செய்யமாட்டார்கள்.சம்பந்தப்பட்ட வங்கி கணக்காளரிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களது ஒப்புதலுடன் மோசடியாளர்கள் பயன்படுத்துவார்கள்.தொடர்புள்ள வங்கிக் கணக்கில் எவ்வளவு டிரான்ஸாக்‌ஷன் நடைபெறுகிறதோ அதற்கேற்ப கமிஷன் தொகை ஒரிஜினலாக பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு பலரும் தங்கள் வங்கிக் கணக்கை இதுபோன்ற மோசடி கும்பலுக்கு வழங்குகிறார்கள். காவல்துறை விசாரணையின்போது இவர்கள்தான் தேவையில்லாமல் சிக்குகிறார்கள். 

மோசடியாளர்களோ தப்பிவிடுகிறார்கள்.இப்படியாக வடமாநிலங்களில் 79 தனியார் வங்கிக் கணக்குகள், மியூல் கணக்குகளாகவும்; தென்னிந்தியாவில் 17 வங்கிக் கணக்குகள் மியூல் கணக்குகளாவும் செயல்பட்டதை இப்போதைக்கு கண்டுபிடித்திருக்கிறார்கள்.கண்டுபிடிக்கப்படாமல் எத்தனை மியூல் கணக்குகள் இயங்கியபடி இருக்கிறதோ? டிஜிட்டல் தேவனுக்கே வெளிச்சம்!

என்.ஆனந்தி