டீசல்... க்ரூட் ஆயிலுக்கு பின்னால் இருக்கும் மாஃபியாக்களின் கதை இது!
மிடில் கிளாஸ் இளைஞன் தோற்றம், தனித்துவமான நடிப்பு என ரசிகர்கள் மனதில் நெருக்கமாக இடம் பிடித்தவர் ஹரிஷ் கல்யாண். சமீபத்திய ஹிட்டான ‘லப்பர் பந்து’ தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இவரைக் கொண்டுபோய் சேர்த்தது. இப்போது தீபாவளி சரவெடியாக ‘டீசல்’ ரெடி. முதன்முறையாக தீபாவளி ரிலீஸ், பாடல்களுக்கான வரவேற்பு என எல்லாமே பாசிட்டிவ் ரிப்போர்ட் என்பதால் ஹரிஷ் முகத்தில் கூடுதல் புன்னகையைப் பார்க்க முடிந்தது.  ‘டீசல்’ என்ன மாதிரியான படம்?
எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் எனக்கே ஆச்சர்யத்தைக் கொடுத்துச்சு. படத்தின் ரஃப் கட் பார்த்தபோது மெச்சூரிட்டியாக நடித்ததுபோல் தோணுச்சு. அத்துடன் அடுத்த லெவலுக்கு மூவ் ஆகிறோம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துச்சு.இது வழக்கத்துக்கு மாறான சீரியஸ் கன்டென்ட். படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகிவிடும். பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய்... அதன் பின்னணியில் இருக்கக்கூடிய மாஃபியா, அண்டர்வேர்ல்ட் பிசினஸ்... அந்த ஏரியாவாசிகளின் வாழ்வாதாரம், மீனவர்களின் வாழ்க்கை முறை என பல தளங்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. ‘டீசல்’ ஒரு நிக்நேம். படத்துல என்னுடைய பேர் ‘டீசல்’ என்ற வாசு. டைட்டில் கவர்ச்சியாக இருந்ததால் அதையே வச்சிட்டோம். கதைக்களத்துக்கும் கனெக்டாகக் கூடிய டைட்டில்.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி, ஒன் லைனாக சொல்லியது ‘க்ரூட் ஆயில் பற்றித் தெரியுமா, கேள்விப்பட்டிருப்பீங்க.
ஆனா, நான் சொல்லப் போற விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரியாது’னு ஆரம்பிச்சார்.க்ரூட் ஆயிலை கருப்பு தங்கம்னு சொல்லுவாங்க. உலகத்தில் தங்கத்தை விட அதிக சந்தை மதிப்பு உடையது. தங்கத்தை விட அதிக பயன்பாடு உள்ள ஒரு திரவம். பெண்கள் பயன்படுத்தும் பொட்டுலகூட க்ரூட் ஆயில் இருக்கு.
க்ரூட் ஆயில் மக்கள் பயன்பாட்டில் எங்கெல்லாம் கலந்திருக்கிறது என்பதை ரொம்ப புள்ளிவிவரத்தோடு சொன்னார்.இது டீசலுக்காக சண்டையிடும் மாஃபியா கும்பல் என்றில்லாமல் இரண்டாம் பாதியில் வாழ்க்கை சார்ந்த முக்கியமான அம்சங்கள் உள்ள கதை. ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்களில் எப்படி ரசிகர்களோடு கனெக்ட் ஆகும் விஷயம் இருந்ததோ அது போல் இந்தப் படத்திலும் ரசிகர்ளோடு கனெக்ட் ஆகும் விஷயம் இருக்கிறது.அதுல்யா ரவி, விநய் ராய், தங்கதுரை, தீனா, விவேக் பிரசன்னா என ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.
திபு நினன் தாமஸ் பிரமாதமான பாடல்கள் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ‘பீர்...’ பாடல் ஹிட். பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
‘டீசல்’ வாசு என்ன மாதிரியான கேரக்டர்?
ஆளுமை உணர்வுள்ள கேரக்டர். சரி, தவறு என தனக்குத் தோணுவதை உடனே செய்யக்கூடிய கேரக்டர். சாய்குமார் சார் என்னுடைய காட்ஃபாதராக வர்றார். அவருடைய பிசினஸுக்குப் பிறகு நான் டேக் கேர் பண்ணுவது போல் என் கேரக்டர் வரும்.முழுக்க முழுக்க வட சென்னை பகுதியில் ஷூட் பண்ணினோம்.
இந்தப் படத்துல வெளிப்புற படப்பிடிப்புக்காகத்தான் அதிகமாக செலவு பிடிச்சது. கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஷூட் பண்ணினோம். எல்லாமே பார்க்காத புது லொகேஷனாக இருக்கும். பாண்டிச்சேரியில் சில பகுதிகளை ஷூட் பண்ணினோம்.
முக்கியமாக மீனவர்களுடைய பங்களிப்பை சொல்லணும். படப்பிடிப்புக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினார்கள். கடல் சார்ந்த பகுதியில்தான் அதிகம் ஷூட் பண்ணினோம்.‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்கள் வந்தபிறகு மீண்டும் ஒரு லவ் படம் பண்ணினா ஸ்டீரியோடைப்பா ஆகிடுமோனு தோணுச்சு.
அப்ப ‘ஓ மணப்பெண்ணே’ வந்துச்சு. அது லூசர்னு சொல்லக்கூடிய யதார்த்தமான இளைஞனின் கதையாக ஃபீல் ஆச்சு.
‘டீசல்’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ போன்ற படங்களாக இருந்தாலும், எந்தப் படங்களாக இருந்தாலும் முந்தைய படங்களின் சாயல் இல்லாதபடி பண்ண வேண்டும்னு தோணுச்சு. எதுவும் திட்டமிட்டு செய்தது கிடையாது. என்னுடைய இயக்குநர்கள் அது போன்ற கதைகளோடு வந்தார்கள்.‘டீசல்’ல இதுவரை பார்க்காத ஹரிஷைப் பார்க்கலாம். ஆக்ஷனாகவும் பார்க்கலாம். ஆளுமை உணர்வுள்ள கேரக்டராகவும் பார்க்கலாம்.
உங்கள் ஃபிட்னஸ் டான்ஸ் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதே?
சின்ன வயசுல இருந்து எனக்கு டான்ஸ் பிடிக்கும். ஹெவியாக டான்ஸ் ஆடுவதற்கு ‘டீசல்’ல வாய்ப்பு கிடைச்சது. பொதுவாக டான்ஸ் பிராக்டிஸ் பண்ணும் போது விஜய் சார், சிம்பு அண்ணன் அல்லது அல்லு அர்ஜுன் ஆகியோரின் ஃப்ளோர் மூவ்மெண்ட் டிரை பண்ணுவேன். ‘தில்ரூபா...’ பாடலை ஷோபி மாஸ்டர் கம்போஸ் செய்தார்.
கோரியோ பண்ணும்போது ‘இது உங்களுக்குப் பேர் கொடுக்கும்’னு என்கரேஜ் பண்ணி ஆட வைத்தார். இப்ப அந்தப் பாடல் எனக்குப் பேர் வாங்கித் தந்திருக்குனா அதுக்கு மிக முக்கிய காரணம் ஷோபி மாஸ்டர். உங்கள் படத்துடன் சேர்ந்து ‘பைசன்’, ‘டியூட்’ என ரிலீஸாகும் தீபாவளி படங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அஜித் சார், விஜய் சார், சிம்பு அண்ணன் என பலருடைய படங்கள் தீபாவளி அன்று பார்த்திருக்கிறேன். சினிமாக்கு வர நினைத்தபோது வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்திருக்கிறேன்.
என்னுடைய படம் இரண்டு மூன்று நாளாவது திரையில் ஓடுமா என்று தவித்திருக்கிறேன். இப்போது எனக்கென்று சிறிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.இந்த நிலையில் என்னுடைய படம் தீபாவளிக்கு வெளியாவது பெரிய சந்தோஷம். என் கரியரில் ஒரு மைல் ஸ்டோனாகப் பார்க்கிறேன். இதே உணர்வுதானே துருவ் விக்ரம், பிரதீப் ரங்கநாதனுக்கும் இருக்கும்! நல்ல விஷயம்தானே... மூன்றுபடங்களும் இந்த தீபாவளியில் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன்.இளம் நடிகர்கள் அதிகமாக அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். அதன் பின்னணி என்ன?
அப்படி கிடையாது. யாரிடம் நல்ல கதை இருக்கிறதோ அதை செலக்ட் பண்ணுகிறேன். பெரிய இயக்குநர் எனக்கு ஏற்ற மாதிரி கதை எழுதி அழைக்கும்போது நிச்சயம் அந்தப் படம் செய்வேன். அறிமுக இயக்குநர்கள் படம் செய்யும்போது அவர்களும் வளர்கிறார்கள், நானும் அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன்.
எஸ்.ராஜா
|