கவனிப்பாரற்ற தீவின் மணல் மதிப்பு ரூ. 4 ஆயிரத்து 600 கோடி!
தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் சிலி நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவு ‘ஈஸ்டர் ஐலேண்ட்’. உலக வரைபடத்தில்கூட நம் கண்களுக்குப் புலப்படாத ஒரு மிகச்சிறிய தீவு இது. அப்படியான ஒரு தீவு, தொடர்ந்து உலக அளவில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். முதலாவதாக சுமார் 7 ஆயிரத்து 750 பேர் வசிக்கும் இந்தச் சிறிய தீவு உலகப் பாரம்பரிய சின்னத்திற்கு பெயர் பெற்ற ஒன்று. காரணம், அங்கு வீற்றிருக்கும் மோவாய் கற்சிலைகள். இந்தச் சிலைகள் பற்றியும், இங்கு வாழ்ந்த மக்கள் குறித்தும் இப்போதும் ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கின்றன.  இரண்டாவதாக இந்தத் தீவு மருத்துவ உலகிற்கு அளப்பரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறது என்பதே. ஆம். இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரபாமைசின் எனும் ஆன்டிபயாடிக் மருந்து இந்தத் தீவின் மண்ணிலிருந்து கண்டறியப்பட்ட ஒன்று.ஆனால், அறிவியல் மற்றும் மருத்துவத்தில் பரவலாக இருக்கும் ரபாமைசின் எவ்வாறு, எங்கிருந்து கண்டறியப்பட்டது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.
 இந்நிலையில் இந்தத் தீவின் மக்களுக்கு, இதற்கான அங்கீகாரம் சரியாகக் கொடுக்கப்படவில்லை என சமீபத்தில் உலகளவில் செய்திகள் வைரலாகி இருக்கின்றன. குறிப்பாக, ‘பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ள இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஈஸ்டர் தீவிற்கு விஞ்ஞானிகளும், நிறுவனங்களும் என்ன செய்தனர்’ என்ற கேள்விகள் பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளன. ரபாமைசின் மருந்து பிறந்த கதைஈஸ்டர் தீவில் வாழ்ந்த மக்கள் ரபா நூயி என்பவர்கள். அதனால் இந்தத் தீவு ‘ரபா நூயி’ என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மக்கள் கற்கால கலாசாரத்தைக் கொண்டிருந்தனர். இவர்களே தீவிலுள்ள மோவாய் கற்சிலைகளை கிபி 1250 முதல் கிபி 1500 வரை செதுக்கியதாகச் சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்நிலையில் இந்தத் தொலைதூரத் தீவிற்கு 1964ம் ஆண்டு ஓர் அறிவியல் குழு சென்றது. அதாவது இந்தத் தீவின் சுற்றுச்சூழல் அமைப்பை ஆய்வு செய்யும் நோக்கத்துடன், ‘ஈஸ்டர் தீவுக்கான மருத்துவப் பயணம்’ என்ற பெயரில் பயணித்தது.
இதற்குக் காரணம், அப்போது விமான நிலையக் கட்டுமானம் உள்ளிட்ட மேம்பாட்டு வளர்ச்சித்திட்டங்கள் தீவில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால், தீவிலுள்ள தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின. இந்நிலையில் தீவின் சுற்றுச்சூழல் அமைப்பை ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்தக் குழுவினர் பயணித்தனர். அவர்கள் அங்குள்ள மண் மாதிரிகளைச் சேகரித்தனர். இதில் குறிப்பிடத்தக்கதாக எதுவும் இருக்காது என்றே நினைத்தனர்.
ஆனால், மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஆச்சரியப்படுத்தின. ஆம். மண் மாதிரிகளில் ஒன்று ஸ்ட்ரெப்டோமைசஸ் ஹைக்ரோஸ்கோபிகஸ் (Streptomyces hygroscopicus) என்ற பாக்டீரியாவைக் கொண்டிருந்தது. இது ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டிஃபங்கல் பண்புகளைக் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த சேர்மத்தை உருவாக்கியது. இதுவே பின்னர் ரபாமைசின் என்ற மருந்தாக பரிணமித்தது. ரபா நூயி மக்களையும் அந்தத் தீவினையும் அடையாளப்படுத்தும் நோக்கில் மருந்திற்கு ரபாமைசின் எனப் பெயரிடப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த மருந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது நிராகரிப்பைத் தடுக்கவும், கரோனரி இதய நோய் சிகிச்சையில் ஸ்டென்ட்களின் செயல்திறனை மேம்படுத்தவும் ஒரு நோயெதிர்ப்பு தடுப்பு மருந்தாக உருவாக்கப்பட்டது.
பின்னர் இது பல வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்க பயன்படும் எனத் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது ஆராய்ச்சியாளர்கள் இதன் செயல்திறன் நீரிழிவு, நரம்புச் சிதைவு நோய்கள் மற்றும் வயதாவதைக் கூட குணப்படுத்தும் என்பதை நோக்கி ஆராய்ந்து வருகின்றனர். உண்மையில் ஆயுட்காலத்தை நீட்டிக்க அல்லது வயது தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராட ரபாமைசின் பயன்படும் என்பது குறித்தான ஆய்வுகள் தினமும் வெளியானபடியே இருக்கின்றன. அந்தளவுக்கு மருத்துவத் துறையில் அதிகம் பேசப்படும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளில் ஒன்றாக ரபாமைசின் விளங்குகிறது.
ரபாமைசினின் முக்கியத்துவம்
ரபாமைசின் மருந்தில் ரபாமைசின் கைனேஸ் அல்லது mTOR எனப்படும் புரதத்தைத் தடுக்கும் திறன் உள்ளது. இந்த mTOR புரதமே செல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு மறுமொழி ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் பொறுப்பைக் கொண்டது.
இந்த mTORஐத் தடுப்பதன் மூலம், ரபாமைசின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்குகிறது. அப்படியாக இது மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உறுப்பு நிராகரிப்பைத் தடுப்பதற்கு விலைமதிப்பற்றதாக உள்ளது. அத்துடன் நிற்கவில்லை இதன் ஆற்றல். இது பல நோய்களின் சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்று சிரோலிமஸ் என அழைக்கப்படும் ரபாமைசின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்தாகும். கடந்த 2024ம் ஆண்டு நிலவரப்படி, இதன் உலகளாவிய சந்தை மதிப்பு 328 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய்.இது 2033ம் ஆண்டுக்குள் 522 மில்லியன் டாலரைத் தாண்டும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயரும் என்கின்றன.
கண்டுகொள்ளப்படாத ஈஸ்டர் தீவு
இந்நிலையில் இப்படியொரு பிளாக்பஸ்டர் மருந்தினை வெட்டியெடுக்கும் ஆராய்ச்சியாளர்களும், மருந்து நிறுவனங்களும் அதன் பூர்வீக நிலமான ஈஸ்டர் தீவிற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை.
ரபாமைசின் ஆராய்ச்சியில் விரிவாக பணியாற்றிய கலிபோர்னியா பல்கலைக்கழக மூலக்கூறு மற்றும் செல்லுலார் உயிரியல் பேராசிரியர் டெட் பவர்ஸ் இதுகுறித்து பேசும்போது, பெரும்பான்மையான அறிவியல் சமூகத்தால் இந்தத் தீவு குறைத்து மதிப்பிடப்படுகிறது என்றும், தீவின் பங்களிப்பை அவர்கள் கவனிக்காமல் விட்டுவிட்டனர் எனவும் வேதனை தெரிவிக்கிறார்.
இந்தக் கண்டுபிடிப்பை சாத்தியமாக்கிய ரபா நூயி சமூகத்திற்கு இந்த அறிவியல் சமூகம் ஏதாவது திருப்பித் தரவேண்டும் எனக் குறிப்பிடுகிறார். குறிப்பாக அவர்களுடன் உரையாடி, அவர்களைக் கௌவரப்படுத்தி, இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிறார் டெட் பவர்ஸ்.
ஆனால் வேறு சிலரோ, ரபாமைசினை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் பிற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதால் ஈஸ்டர் தீவின் மண் இந்த மருந்தின் கண்டுபிடிப்புக்கு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என வாதிடுகின்றனர்.
இருப்பினும் ஈஸ்டர் தீவில்தான் முதன்முதலாக ரபாமைசின் கண்டுபிடிக்கப்பட்டு அதுவே வணிகமயமாக்கலுக்கு அடித்தளமாக அமைந்தது. அதனால், அந்தத் தீவிற்கு சரியான அங்கீகாரம் அளித்து அவர்களின் பங்களிப்பிற்கு ஈடுசெய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர் டெட் பவர்ஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள்.
பேராச்சி கண்ணன்
|