இப்ப நான் வேல ராமமூர்த்தி இல்ல... எதிர் நீச்சல் ஆதி குணசேகரன்!
தமிழ்த் திரைப்படங்களில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருபவர் எழுத்தாளரும் நடிகருமான வேல.ராமமூர்த்தி. அவரின் கம்பீரமான பார்வையும், தோரணையான நடிப்பும் ரசிகர்களைச் சட்டென கவர்ந்திழுப்பவை.அதுமட்டுமில்லாமல் இலக்கிய உலகிற்கு ‘குற்றப் பரம்பரை’, ‘பட்டத்து யானை’, ‘அரியநாச்சி’, ‘குருதி ஆட்டம்’ என அற்புதமான நாவல்களையும் தந்தவர். இப்போது சினிமாவிலும், சன் டிவியில் பட்டையைக் கிளப்பும் ‘எதிர்நீச்சல்’ சீரியலிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.
 இலக்கியம் டூ சினிமா... எப்படி, யாரால் சாத்தியமானது?
என்னால்தான் சாத்தியமானது! ஆமாம். எழுத்தாளனாக இருந்த என்னை சினிமாவுக்கு நடிக்க கூப்பிட காரணமே என் எழுத்தும், தோற்றமும்தான். என் முதல் படம், ‘மதயானைக் கூட்டம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருது தேர்வில் கூட ஃபைனல் ரவுண்ட் வரை இருந்தேன். ஆனா, கடைசி நேரத்தில் அது மாறி மராட்டிய நடிகர் ஒருவருக்கு போயிடுச்சு.சினிமாவுக்கு முன்னாடி முழு இலக்கியவாதியாக இருந்தேன். சிறு வயசிலேயே எனக்கு இலக்கியம் பரிச்சயமாகிடுச்சு. நிறைய வாசிச்சேன். தமிழுடன் பிறமொழி இலக்கியங்களையும் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே படிக்க ஆரம்பிச்சிட்டேன். ஜெயகாந்தனின் எழுத்து என்னை ரொம்பவே வசீகரிச்சது. கீழ்த்தட்டு மக்களைப் பத்தின யதார்த்த எழுத்து அவருடையது.
அப்புறம் தொடர்ந்து மலையாளம், ரஷ்ய இலக்கியங்கள் எல்லாம் வாசிச்சேன். இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் என் கிராமமான பெருநாழியில் அரசு பொது நூலகத்தில் இருந்தன. இந்த வாசிப்புதான் எனக்குள் இருந்த இலக்கியத்தை அழகுபடுத்துச்சு. என் சமூகப் பார்வையையும் மாத்துச்சு.
சாதி கட்டுமானம் கொண்ட அந்தச் சின்ன ஊர்ல அடித்தட்டு மக்களைப் பார்க்கறேன். அவங்க படுகிற காயங்கள், அடிகள் எல்லாம் நான் வாங்கியதாக உணர்றேன். அதனால் 1974ம் ஆண்டு வெளியான என் முதல் சிறுகதை சலவைத் தொழிலாளி பத்தினதாக இருந்தது. தொடர்ந்து நான் எழுதின எல்லா சிறுகதைகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பேசின.
இதனால், எங்க ஊருக்குள்ளே எனக்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்புச்சு. அதையெல்லாம் சமாளிச்சேன். அப்புறம், மார்க்ஸிய இயக்கத்தின் கலை, இலக்கியப் பிரிவுகளில் முக்கிய பங்கு வகிச்சேன். வீதி நாடகங்களில் பயிற்சி எடுத்தேன்.பிறகு தோழர் பிரளயன், திருவண்ணாமலை கருணா, தாஸ் உள்ளிட்டவர்களின் அறிமுகம் கிடைச்சது.
எல்லோருடனும் சேர்ந்து நாடகப் பயிற்சி முகாமில் இருந்தேன். 1992ல் ‘அறிவொளி இயக்க’த்திற்கு நாடகம் எழுதி இயக்கினோம். இப்படியிருந்த என்னை சினிமாவுக்குள் கூப்பிடுறாங்க. நான் மாட்டேன்னு சொல்லிட்டுத் திரிஞ்சேன். பிறகு, ‘மத யானைக் கூட்டம்’ படத்தின் டைரக்டர் விக்ரம் சுகுமாரன் கதையைச் சொன்னார்.
கதையும், எனக்கு கொடுத்த வீரத்தேவன் கேரக்டரும் பிடிச்சிருந்தது. சரி, பண்ணுவோமேனு 2013ம் ஆண்டு சினிமாவுக்குள் வந்தேன். தொடர்ந்து ‘கொம்பன்’, ‘பாயும் புலி’, ‘
கிடாரி’, ‘சேதுபதி’னு வரிசையாக நடிச்சேன்.
எல்லாமே நல்ல பெயரை வாங்கித் தந்தது.அப்புறம் ரஜினி சாருடன், ‘அண்ணாத்த’, சிவகார்த்திகேய னுடன் ‘ரஜினி முருகன்’, ‘நம்ம வீட்டுப்பிள்ளை’... இப்படி தமிழகத்தின் முக்கியமான நாயகர்களுடன் நடிச்சேன். இப்பவரை என்னுடைய நடிப்பை நல்லா பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். எழுதுவதை ஏன் கைவிட்டீங்க?
உண்மையில் எழுதுவதை நிறுத்தினது எனக்கு பெரிய வேதனைதான். சினிமாவிற்கு வந்தபிறகு ஏதோ வந்தோம், ஓரிரு படத்தில் தலையைக் காட்டினோம், வேற வேலையைப் பார்த்தோம்னு என்னால் இருக்க முடியல. ஒரு வேலையை செய்தால் அதைச் சிறப்பாகச் செய்யணும்.இப்ப ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப்னு என்னென்னமோ வந்திடுச்சு. அப்ப அச்சு ஊடகங்கள் பெரிய களமாக இருந்துச்சு. அதனால், நிறைய எழுதினேன். ஆனா, இன்னைக்கு அப்படியில்ல.
எனக்கு எப்பவுமே சமூக நாவல்கள் எழுதப் பிடிக்கும். அந்தந்த காலக்கட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வச்சு எழுதுவேன். அப்படியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த விஷயங்களை நாவல்களாக ஆக்கினேன்.ஆனா, இப்ப இருக்கிற தற்கால சமூகத்தில் எந்தக் கதையையும் நான் தொடல.
சீக்கிரமே எங்க ராமநாதபுரம் சேது மண்ணின் 200 வருட வரலாற்றை எழுத இருக்கேன். அந்த வரலாற்றை ஒரு சுவாரஸ்யமிக்க நாவலாக பண்ணப் போறேன். அது ‘குற்றப்பரம்பரை’யைவிட இன்னும் சிறப்பா இருக்கும். திரைக்கான உடல்மொழியோடு கச்சிதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறீங்க. உடம்பை எப்படி இவ்வளவு கட்டுக்கோப்பாக வச்சிருக்கீங்க?
பொதுவாக ஒரு நடிகனுக்கு உடலும், குரலும் ரொம்ப முக்கியம். என்னுடைய ஆரோக்கியத்திற்கு காரணம் நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதுதான். அறுபதுகளில் உரம் போடாத உணவை சாப்பிட்டவன்.
நெல்லு, கம்புனு சகலமும் உண்டவன். பின்னாடி பல வகையான அந்நிய விதை நெல்கள் வந்து பதம் பார்த்தது வேறு கதை.ஆனா, அன்னைக்கு மருந்து மாத்திரைகளின் பெயர்களே தெரியாமல் வளர்ந்தேன்.
அது இப்பவரை தொடருது. இதுவரை உடம்புக்கு எந்த நோய்நொடியும் வந்ததில்ல. மெடிக்கல் ஷாப், ஆஸ்பத்திரினு தேடிப் போனதில்ல. என்னைப் பொறுத்தவரை உணவுதான் மருந்து. உணவை சரியான நேரத்துக்கு சாப்பிடுவேன். ஹைபிரிட் காய்களை வாங்குறதில்ல. நாட்டுக் காய்கறிகள்தான்.
அப்புறம் நாட்டுக்கோழி, வெள்ளாட்டு கிடாகறி, மீன்கள் எல்லாம் சாப்பிடுவேன். முக்கியமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருகிற உணவுகளை எடுத்துப்பேன். இப்பவும் உணவு விஷயத்தில் நான் ரொம்ப கரெக்ட்டாக இருக்கேன்.
மூணு நேரம் சாப்பாடு. அதுவும் தேர்ந்தெடுத்த நிறைவான சாப்பாடு. அவ்வளவுதான். அடுத்து ராணுவத்தில் இருந்ததால் அங்க கிடைச்ச பயிற்சி உடலையும், மனசையும் கட்டுப்படுத்தி வைச்சிருக்கு. கோவமான அப்பா... கிராமத்து வில்லன்... தோரணையான தலைவன்... இப்படி ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் உங்களுக்கு நிறைய அமையுதே..?
ஆமாம். இயக்குநர் சுசிந்தீரனின் ‘பாயும் புலி’ல விஷாலுக்கும் சமுத்திரக்கனிக்கும் அப்பாவாக நடிச்சேன். அப்புறம், ‘சேதுபதி’ல வில்லனாக வந்தேன்.
‘கிடாரி’ல அந்தப் பகுதி தாதா மாதிரி அருமையான கேரக்டர்.இப்ப, ‘வீராயி மக்கள்’னு ஒரு படம். அதுல மறைந்த நடிகர் மாரிமுத்தும் நானும் அண்ணன் தம்பியா நடிச்சிருப்போம். இதுல குடும்பத் தலைவன் கேரக்டர். சமீபத்தில் வெளியான, ‘குட் டே’ல கூட சடலங்களை புதைக்கிற வெட்டியானாக நடிச்சிருக்கேன். நான் சின்ன படங்கள், பெரிய படங்கள்னு பார்க்கிறதில்ல. என் கேரக்டர் சிறப்பாக இருக்கணும்னு நினைப்பேன். ஒரு நடிகனுக்கு சந்தோஷமான விஷயம் நல்ல கேரக்டரில் நடிப்பதுதான். ‘எதிர்நீச்சல்’ சீரியல் அனுபவம் எப்படியிருக்கு?
அதை ஏன் கேட்குறீங்க... எங்கேயும் போக முடியல. வர முடியல. நேற்றுகூட ஒரு ஷூட்டை முடிச்சிட்டு சிட்லபாக்கத்தில் இருந்து குரோம்பேட்டை வந்திட்டு இருந்தேன். அப்ப, ஒரு புல்லட்ல கணவன், மனைவி போறாங்க.என்னை கார்ல பார்த்திட்டு ‘எதிர்நீச்சல்’ சீரியலில் வருகிற ஆதி குணசேகரன் உள்ள இருக்கார்னு கார் கண்ணாடி வழியாக பார்க்கிறாங்க. இப்படி என்னை உலகம் முழுவதும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் கொண்டு சேர்த்திருக்கு.
எழுத்தாளனாக அறியப்பட்டது ஒருவகை. சினிமா நடிகனாக அறியப்பட்டது இன்னொருவகை. இப்ப ‘எதிர்நீச்சல்’ சீரியல். ஒரே ஒரு சீரியல்தான். உலகத் தமிழ் மக்களிடம் எல்லாம் கொண்டு போய் சேர்த்திருச்சு. குறிப்பா குழந்தைகள், பெண்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகி இருக்கேன். உங்க ‘குற்றப்பரம்பரை’ நாவல் திரைக்கதையா மாறுமா?
நிச்சயம் மாறும். ‘பாகுபலி’ மாதிரி பெரிசா வரும். அதுக்கான வேலைகள் நடந்திட்டு இருக்கு. இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும். அது ஒருநாள் நிச்சயம் திரைப்படமாக வரும்.
இப்ப என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?
நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்திலும், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் ‘தீயவர்கள் குலைகள் நடுங்க’ படத்திலும் நடிக்கிறேன். அப்புறம் யோகி பாபுவுடன் இரண்டு படங்கள் பண்றேன்.இப்ப, ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷுடன் சேர்ந்து நடிக்கிறேன். இதுதவிர, நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் போயிட்டு இருக்கு.
‘எதிர்நீச்சல்’ இயக்குநர் திருச்செல்வம் சார் என்னை அப்பா ஸ்தானத்தில் வைத்து அன்புடன் மரியாதை செய்றார். அவருக்கு, நடிகனாக என்ன கொடுக்க முடியுமோ அதை பெஸ்ட்டாகக் கொடுத்திட்டு இருக்கேன்.
குடும்பம் பத்தி?
எனக்கு மூணு பிள்ளைங்க. ஏழு பேரன், பேத்திங்க. இரண்டு பேத்திகளுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. அப்புறம் என் மனைவி. அவங்க உணவில்தான் என் ஆரோக்கியம் நிக்குது. ஒவ்வொன்றையும் வைத்தியர் மருந்து தருவதுபோல பார்த்துப் பார்த்து கொடுப்பாங்க. என்னை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க. நிறைவான குடும்பம். இதைவிட ஒரு மனுஷனுக்கு வேறென்ன வேணும்!
ஆர்.சந்திரசேகர்
|