போட்டோவை பார்த்து தப்புத் தப்பா நினைச்சீங்களா..?
வாய்விட்டுச் சிரிக்கிறார் சான்வி மேகனா
‘குடும்பஸ்த’னின் குடும்பஸ்தியாக கண்களைக் குளமாக்கிய சான்வி மேகனா, திடீரென இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் புகைப்படங்களில் பேசுபொருளாக மாறினார்.
இறக்கை கட்டிப் பறந்த கிசுகிசுக்களுக்கு மாறாக வெளியாகியிருக்கிறது ‘விழி வீக்குற...’ பாடல். ‘அந்தப் பொண்ணா இந்தப் பொண்ணு’ என கண்களை ஆச்சர்யத்தில் நிரப்புகிறார் சான்வி. உடலை வளைத்து ஆடும் நடனம், ஸ்டைலான லுக் என பொண்ணு இப்போ இணையத்தில் மட்டுமல்ல இதயத்திலும் டிரெண்ட். அட டான்ஸ் மாஸா ஆடுறீங்களே... என்றதும் கண்கள் மிளிர சிரிக்கிறார்.  ‘குடும்பஸ்தன்’ பட நாயகியாக மணிகண்டனுக்கு ஜோடி, படம் முழுக்க கர்ப்பமான காதல் மனைவி, மாமியார் அன்புக்காக ஏங்கும் மருமகள், கணவனின் நெருக்கடிக்குள், தானும் உழன்று கிளைமாக்ஸில் கொந்தளித்து ஓங்கி ஒரு அறை விடும் தருணத்தில் மணிகண்டனையும் மீறி நம் மனதில் நிறைந்த மங்கை இவர். தெலுங்கில் ‘பிட்ட காதல’ சீரிஸ், ‘மோஸ்ட் வாண்டட் பேச்சிலர்’, ‘புஷ்பக விமானம்’, ‘பிரேம விமானம்’ என பிசியானவரை ‘குடும்பஸ்தன்’ படக் குழு தேடிப் பிடித்துத் தமிழுக்குக் கொண்டு வந்தனர். இப்போது இணையம் மொத்தமாக இவரை விழுங்கி விழி வீக்க நிற்கிறது.  ‘‘நல்லதொரு அறிமுகம் வந்தால் நிச்சயம் தமிழில் மிஸ் செய்யக் கூடாதுன்னு காத்திருந்தேன். அதற்கான நல்ல வாய்ப்பா ‘குடும்பஸ்தன’ படம் அமைஞ்சது. இதோ தொடர்ந்து ரெண்டு ஆல்பம் பாடல்கள். எங்கே பார்த்தாலும் டிரெண்ட். ஜாலியா இருக்கு...’’ மனம் நிறைய சிரித்தபடி கண்களைச் சிமிட்டுகிறார்.
 உங்களைப் பற்றி சொல்லுங்க..?
 எனக்கு சொந்த ஊர் தெலுங்கானா, ஹைதராபாத். அப்பா கிஷோர் வம்சி, பிஸினஸ் மேன். அம்மா பத்மா, ஹோம் மேக்கர். பி.காம் முடிச்சிருக்கேன். எதுவும் இல்லைன்னாலும் அப்பாவுடைய பிஸினஸில் என்னை இணைச்சுக்க பி.காம் உதவும் என்கிற நோக்கத்தில் படிச்சேன். ஆனால், விதி எனக்கான பிளான் வேறு வெச்சிருக்கு. எங்க காலேஜ்ல ஒரு படத்தினுடைய ஷூட்டிங் நடந்துச்சு. அதிலே இயக்குநர் ஒருசில கேர்ள்ஸை செலக்ட் செய்து ஹீரோ நானி சாருக்கு பின்னணியில் நிற்க வெச்சாங்க. அதில் நானும் ஒருத்தி. அப்படித்தான் எனக்கு முதல் சினிமா ஃபிரேம் அமைஞ்சது. அதன் பிறகு அதே இயக்குநர் திரும்ப ஒரு படத்துக்காக கேட்டார். ஆனால், சினிமா எனக்கு ஐடியாவே கிடையாது. எங்க வீட்டிலும் பயம். சினிமான்னா பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு யோசிச்சாங்க. எனக்கும் நடிப்பெல்லாம் பக்கெட் லிஸ்ட்டிலேயே இல்லை. ஆனால், நல்லா டான்ஸ் ஆடுவேன்.
முதல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
அது ஒரு பெரிய ஆசீர்வாதம் மாதிரின்னு கூட சொல்லலாம். ஒரு தனியார் சேனல் சீரியலுக்காக எனக்கு கால் வந்தது. எப்படி என் நம்பர் கிடைச்சதுனு கூட தெரியாது. அங்கே போனால் ஜெயசுதா மேடம்தான் என்னைத் தேர்வு செய்து உடனே என் அம்மாவையும் வரவழைச்சாங்க. அம்மாவுக்கு அவ்வளவு தயக்கம். ஆனால், ஜெயசுதா மேம் ‘ உன் பொண்ணுக்கு ரொம்ப சுலபமா நடிப்பு வருது, நாங்க செலக்ட் செய்திட்டோம’ அப்படின்னு சொல்லி அம்மா கிட்ட அனுமதி கேட்டாங்க.
அவ்வளவு பெரிய நடிகை கேட்கும்போது யார் முடியாதுன்னு சொல்வாங்க. ஆனால், என்னவோ காரணம்... அந்த சீரியல் ஆரம்பிக்கறதில் கொஞ்சம் சிக்கல். தொடர்ந்து வந்த ப்ராஜெக்ட்தான் ‘பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன்’ ஹீரோயினாக நடிச்சேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் கதவைத் தட்ட ஆரம்பிக்க, சரி நமக்கான கதவு இதுதான்னு ஒரு குரல் கேட்குமே... அப்படி நடிப்பை கரியராக மாத்திக்கிட்டேன்.
தமிழில் வைரல் மோட் எப்படி இருக்கு?
செம ஜாலியாக இருக்கு. என்னுடைய இன்னொரு டிரான்ஸ்ஃபார்ம் மாதிரி பார்க்கறாங்க. டான்ஸ் எப்பவுமே ஆடி ரீல்ஸ் எல்லாம் போடுவேன். ஆனால், இந்த ‘விழி வீக்குற...’ பாடல் டான்ஸ்தான் எங்கே பார்த்தாலும் கேட்கறேன்; பார்க்கறேன். ஆரம்பத்தில் அந்தப் புகைப்படம் வந்தப்ப கொஞ்சம் கிசுகிசுவாக மாறிடுச்சு. அப்பறம்தான் பாடல் வந்ததும் மொத்தமாக வேற ஒரு மோடுக்கு மாறிச்சு.
காயம் ஆறிடுச்சா?
நல்லாவே ஆறிடுச்சு. ஒரு ஷூட்டிங்கில்தான் கொதிக்கற எண்ணெய் கையிலே ஊத்திக்கிட்டேன். இப்ப பரவாயில்லை. விபத்துகள் நடக்கறது சகஜம். அதெல்லாம் தலையில் ஏத்திக்க முடியாது. உடனே மீண்டு வர்றது நம் கையில்தான் இருக்கு. பல நிகழ்ச்சிகள்ல அந்தக் காயத்துடன்தான் கலந்துக்கிட்டேன்.
ஆல்பம் பாடல்களின் டிரெண்ட்..?
படங்கள், கேரக்டர்கள் நமக்கு நடிக்கவும், திறமையைக் காட்டவும் உதவும். இந்த மாதிரி ஆல்பம் பாடல்கள்தான் நம்மை நாமாகக் காட்டும். ஒரு மாதத்துக்கு முன்னாடி தரன் சார் மியூசிக்கில் ஆரி சார் கூட ‘கிம்சி தோசா...’ பாட்டில் டான்ஸ் ஆடினேன். செம கலர்ஃபுல் பாட்டு அது. கொரியன் சிங்கர் ஆரூரா கூட நடனம் ஆடினார்.
ரொம்ப ஸ்பெஷல்... அந்தப் பாட்டில் கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திக் சார் கூட டான்ஸ் ஆடினார். அடுத்து சாய் அபயங்கர் மியூசிக்கில் ‘விழி வீக்குற ...’ பாடல். ரெண்டுமே டிரெண்டில் இருக்கு. பக்கா டான்ஸ் நம்பர்கள்தான்.
சாய் சான்ஸே இல்ல, அப்படி கிரேஸியாக நடனம் ஆடறார். ரிஹர்சல் எல்லாம் முடிஞ்சுதான் ஷூட் செய்தோம். இந்த டான்ஸ்க்கு அப்பறம்தான் ‘‘குடும்பஸ்தன்’ பொண்ணா இது’ என்கிற ஆச்சர்ய கேள்வி எங்கே பார்த்தாலும் வருது. இது என்னுடைய படங்களுக்கும் பெரிய மைலேஜ், நான் மாடர்ன், ஸ்டைலிஷான லுக் கூட செய்வேன் என்கிற மனநிலை உருவாகும். வாய்ப்புகள் சொல்லிக் கொடுத்த பாடம் என்ன?
‘எந்த வாய்ப்பும் உன்னைத் தேடி சாதாரணமா வராது. உனக்கு அந்த யோகம் இருந்தா,தானா வரும். அப்படி கிடைச்ச வாய்ப்பை தவறா மட்டும் பயன்படுத்திடாதே...’ இது எனக்கு நானே சொல்லிக்கும் பாடம்.
ஒரு படம்னா நான் ஒருத்தி இல்லை... பெரிய குழு ஒண்ணுசேர்ந்து மக்களை மகிழ்விக்க கூட்டாக சேர்ந்துதான் வேலை செய்கிறோம் என்பதையும் உணர்ந்தேன். இந்த வருடமே ரெண்டு படங்கள், பாடல்கள் வெளியாகியிருக்கு. 2025ம் ஆண்டு பக்கா பாசிட்டிவா இருக்கு. படங்களும் நடிச்சிட்டு இருக்கேன். இப்ப இந்த டிரெண்ட் மோடை என்ஜாய் செய்கிறேன்.
ஷாலினி நியூட்டன்
|