சிறைக் கைதிகளின் தீபாவளி !



தீபாவளி... எல்லோரும் கொண்டாடும் பண்டிகை. பட்டாசு, இனிப்பு, விருந்து என ஆனந்தம் நிறைந்த அமர்க்களம். இது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். ‘இதில் புதிதாக பேசுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று நீங்கள் கேட்பது இயல்பு. 
ஆனால், நம்மில் பலருக்கு தெரியாத ஒரு சுவாரசியமான பக்கம் இருக்கிறது.ஆம். நம்மிடையே இயல்பான வாழ்க்கை வாழ முடியாத பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதி சிறைக் கைதிகள். 
தண்டனைக்காகவோ, விசாரணைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்குப் பண்டிகை என்றால் என்ன அர்த்தம்? அவர்களும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையைக் கொண்டாட முடியுமா? சட்டம் அதை அனுமதிக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளிக்கிறார் திரைப்பட இயக்குநர் அனீஸ்.
‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தை இயக்கியவர் இவர். தற்போது சசிகுமார் மற்றும் சிறைக் கைதிகள் நடிக்கும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். தவிர, சிறைக் கைதிகளின் வாழ்க்கையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

சிறைக் கைதிகள் குறித்த ஆராய்ச்சி செய்வது, அதைப் படம் எடுப்பது என்பது சாதாரணமாக ஒருவரால் செய்ய முடியாத விஷயம். இந்த ஆர்வம் எப்படித் தோன்றியது?
2014ம் ஆண்டு நான் இயக்கிய ‘திருமணம் எனும் நிக்காஹ்’ வெளியானது. அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்ஸ் மாணவன். 

புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் கல்லூரியில் நாடகக் கலையில் எம்.ஏ., எம்.ஃபில் முடித்துள்ளேன்.சினிமாவில் என்னுடைய பயணம் நாசர் சாரிடம் உதவி இயக்குநராக ஆரம்பமானது. 2000ம் ஆண்டு மோகன்லால் சார் நடித்த ‘பாப்கார்ன்’ படத்தை நாசர் சார் இயக்கினார். அப்போது மோகன்லால் சார் தில்லியில் நடத்திய ஒரு நாடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்வில் பல்வேறு நாடகக் குழுக்கள் கலந்து கொண்டன. ஒரு நாள் மிகவும் கடுமையான பாதுகாப்புடன் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது. ‘சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்களா’ என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதில் நடித்தவர்கள் அனைவரும் பெங்களூரு சிறைக் கைதிகள் எனத் தெரிந்தது.அந்தத் தகவல் என்னை பெரும் அதிர்ச்சியடையச் செய்தது. சிறைவாசிகள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பது - அதுவே அவர்களுடைய வெளிப்பாடாக இருப்பது - எனக்குப் புதிதாகத் தோன்றியது. அதுவே அவர்களின் மனநிலையைப் பற்றி ஆழமாக அறியவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

முதன்முறையாக பெங்களூரிலுள்ள - ஜெயலலிதா கைதியாக இருந்த - பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ஆய்வுக்காகச் சென்றேன். அப்போது நாடகத்தில் நடித்த சில கைதிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் பேசும்போதுதான் இதை திரைப்படமாக்க வேண்டும் என்ற விதை விழுந்தது.

நான் பார்த்ததில், திருவிழாக்கள் கைதிகளுக்கு தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்; ஆனால், கலை அவர்களை உள் மனதளவில் மாற்றுகிறது. அந்த நாடக நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் ஒரு கைதி, ‘நீதிமன்றமும், சிறைச்சாலையும், தண்டனையும் எங்களை மாற்றவில்லை; ஆனால், இந்தக் கலை எங்கள் மனதை மாற்றியது...’ என்று சொன்னது மனதில் பதிந்தது.

இதைத்தான் ஆய்வாக மாற்றினேன். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ‘நாடகப் பயிற்சியின் மூலம் சிறை இல்லவாசிகளின் மன நலம்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்.அந்த அனுபவமும், கலை நம்பிக்கையும் சேர்ந்துதான் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்துக்கு ஊக்கம் அளித்தது.

பொதுவாக சிறைக் கைதிகளின் மனநிலை எப்படி இருக்கும்?

சிறை வாழ்க்கையில் உள்ளவர்களை இரண்டு பிரிவாகப் பார்க்கலாம். தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள்.விசாரணைக் கைதிகள் வழக்கு முடியும் வரை சிறையில் இருப்பவர்கள். 

அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால் வெளியே செல்லலாம். ஆனால், தண்டனைக் கைதிகள் - அதாவது குற்றம் நிரூபிக்கப்பட்டு பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் தண்டனை அனுபவிப்பவர்கள் மனதளவில் பல்வேறு மாற்றங்களைச் சந்திப்பார்கள். 

ஆரம்பத்தில் அவர்களுக்கு மன அழுத்தம், கோபம், குற்ற உணர்வு, சில நேரங்களில் தற்கொலை எண்ணமும் கூட வரும். ஆனால், சிறைச் சூழல், அங்கு வழங்கப்படும் அறிவுரை, ஆலோசனை, தொழில்பயிற்சி, விழாக்கள் போன்றவை படிப்படியாக அவர்களை அமைதிப்படுத்துகிறது.அவர்களுக்கும் வெளி உலகத்தில் நடைபெறும் திருவிழாக்கள், குடும்ப நிகழ்வுகள் போன்றவற்றை சிறைக்குள் நடத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுவே அவர்களுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை அளிக்கிறது.

உதாரணமாக, ஒருவரின் திருமண நாள் அல்லது பிறந்த நாள் வந்தால், அதிகாரிகளின் அனுமதியுடன் வண்ண உடை அணிய அனுமதி அளிக்கப்படும். இது ஒரு சிறிய விஷயம். ஆனால், அவர்களுக்கு அது மிகப் பெரிய மகிழ்ச்சி. சிறை விதிமுறைகள்படி சீருடை (வெள்ளை உடை) அணிதல் கட்டாயம். 

ஆனால், தங்கும் அறைகளில் இருக்கும்போது கைலி, பனியன் போன்ற வசதியான ஆடைகளை அணியலாம்.அதிகாரிகள் அழைக்கும் நேரத்தில் அல்லது குடும்பத்தினரைச் சந்திக்கும் போது சீருடை அணிய வேண்டும். அதுவே சிறை ஒழுங்கு.சுருக்கமாகச் சொன்னால், சிறைவாசிகளின் மனநிலை ஆரம்பத்தில் சிதைந்திருந்தாலும், ஒழுங்கு, கலை, மற்றும் மனித உறவு அவர்களை மீண்டும் நம்பிக்கையோடு வாழச் செய்கிறது.

சிறைவாசிகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை அனுபவிக்க முடியுமா?

முடியும். அவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. சிறைகளில் கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் அனைத்தும் வெகு விமரிசையாக நடைபெறும்.

பல தன்னார்வ நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் நாளில் பிரியாணி, இனிப்பு, பழங்கள் என பலவிதமான உணவுகளை வழங்குவார்கள்.பொங்கல் கொண்டாட்டம் பெரும்பாலும் அரசே ஏற்பாடு செய்யும். அந்நாளில் அறுசுவை உணவு, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என முழுமையான மகிழ்ச்சி சூழல் இருக்கும்.

சில நேரங்களில் அதிகாரிகளும் கைதிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடுவார்கள். கைதிகள் ‘அதிகாரிகளை ஜெயிக்கணும்!’ என்ற உற்சாகத்துடன் விளையாட, அதிகாரிகளும் ‘தோல்வி அடையக்கூடாது!’ என்ற முனைப்புடன் விளையாடுவார்கள்.அந்தச் சூழல் வெற்றி தோல்வியை விட ஓர் ஒற்றுமை உணர்வை உருவாக்குகிறது. இரு தரப்பினருக்கிடையே பரஸ்பர மரியாதை, புரிதல் அதிகரிக்கிறது.

அந்தவகையில், சிறையில் விழாக்கள் அவசியம். அது இல்லையென்றால் சிறைச்சாலை ‘மரண வீடு’ போல அமைதியாகவும், மன அழுத்தத்துடனும் இருக்கும். 
தீபாவளி என்றாலே பட்டாசு நினைவுக்கு வரும். ஆனால், சிறைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. பொதுவாக கைதிகளுக்கு அந்த நாளில் புதிய ஆடை, இனிப்பு, பலகாரம் போன்றவை வழங்கப்படுகின்றன.

இங்கே இரண்டு முன்னாள் சிறைத்துறை தலைவர்களைச் சொல்லியே ஆகவேண்டும். நட்ராஜ் சார் மற்றும் சைலேந்திர பாபு சார். அவர்கள் பொறுப்பில் இருந்தபோது, பண்டிகை நாளன்று அல்லது அதற்கு அடுத்த நாள் கைதிகளின் குடும்பத்தினரை நேரடியாகச் சந்திக்க அனுமதி அளித்தனர். சில சமயங்களில் சிறை அறை வரை குடும்பத்தினர் செல்ல அனுமதிக்கப்பட்டது.

உதாரணமாக, புழல் மத்திய சிறைச்சாலையின் சுவர் 32 அடி உயரம். அங்கிருந்து 8 அடுக்கு பாதுகாப்பு வளையத்தைக் கடந்துதான் கைதியைச் சந்திக்க முடியும். அப்படிப்பட்ட பாதுகாப்பு சூழலில் வாழும் ஒருவருக்கு திருவிழா ஒரு மனநிம்மதி அளிக்கும் நிகழ்வு. 

மற்றொரு முக்கியமான விஷயம்... பண்டிகைகள் மத ஒற்றுமையையும் வளர்க்கின்றன. தீபாவளி அன்று பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு மகிழ்வார்கள். அதேபோல கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளை எல்லோரும் ஒன்றாகக் கொண்டாடுவார்கள்.நான் பரப்பன அக்ரஹாரா சிறையில் பார்த்ததே இதற்கே சாட்சி. ரம்ஜானின் போது பிற மதத்தைச் சேர்ந்த கைதிகளும் நோன்பு கடைப்பிடித்து, நோன்பு கஞ்சி அருந்தினர். அந்தத் தருணம் உண்மையிலேயே மனதை நெகிழ வைத்தது.

‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் உருவாக்கம் எப்படி நடந்தது?

நான் சொன்னது போல், புதிய கதைக்காக முதலில் சிறைக்குச் சென்றேன். ஆனால், அங்கேயே எனக்கு உண்மையான நடிகர்கள் கிடைத்தார்கள்.பலர் சிறையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த சோகத்திலிருந்து மீள அவர்களுக்கு கலை ஒரு நல்ல மருந்தாக இருந்தது. சிலர் பாடகராக, சிலர் ஓவியராக, சிலர் நாடகக் கலைஞராக மாறிவிட்டார்கள்.

உண்மையில், குற்றம் செய்யும் குணத்துக்கும், கலை உருவாக்கும் குணத்துக்கும் இடையே மிகச் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. இரண்டிலும் கற்பனை தேவை. குற்றம் செய்வதற்கும் கற்பனை தேவை; கலை உருவாக்குவதற்கும் அதே கற்பனை தேவை.

அந்தக் கற்பனையை தவறான வழியிலிருந்து நல்வழிக்கு திருப்பினால், அவர்கள் கலைஞர்களாக மாறுகிறார்கள். அதனால்தான் நான் கதையை மட்டும் எடுக்காமல், அவர்களையே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

படம் எதைப் பற்றி பேசுகிறது?

இது முழுக்க முழுக்க சமூக விழிப்புணர்வு தரக்கூடிய ஒரு சோஷியல் டிராமா. காந்தியடிகள் சொன்ன ஒரு வரி தான் படத்தின் தீம். ‘குற்றத்தை வெறுத்து ஒதுக்குங்கள்... குற்றவாளிகளை அல்ல...’இந்தப் படம் வெளிவந்த பிறகு, மக்கள் சிறைச்சாலை மற்றும் சிறைவாசிகள் குறித்து பார்க்கும் பார்வை மாறும் என்று நம்புகிறேன். ஏனெனில் சிறை என்பது தண்டிக்கும் இடம் அல்ல, மறுவாழ்வுக்கான மையம்.

சமூகம்தான் அவர்களை தொடர்ந்து குற்றவாளிகளாக மாற்றுகிறது. வெளியே வந்த பிறகு அவர்களுக்கு வேலை வாய்ப்பு, ஏற்றுக்கொண்டு அரவணைத்து ஆதரவு தருவது ஆகியவை இல்லாமல் போவதால்தான் மீண்டும் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். எனக்குத் தெரிந்து 70 முறை வரை சிறைக்கு சென்றவர்கள் கூட உள்ளனர். சிறை இல்லாத சமூகம் என்பதே ஆரோக்கியமான சமூகம். இந்தப் படம் மக்களிடத்தில் அந்த உணர்வை ஏற்படுத்தும். 

படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?

சசிகுமார், பிந்து மாதவி, வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கன்னட நடிகர் சதீஷ் நினசம் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
2019ல் சில கைதிகள் விடுதலையானார்கள். அவர்களுக்கு நான் சிறையில் இருக்கும் போதே நாடகம், இசை, இலக்கியம் போன்ற கலை பயிற்சிகளை அளித்திருந்தேன். 

அதே டீமை நடிக்க வைத்துள்ளேன்.ஜிப்ரான் இசையில் பாடல்கள் பிரமாதமாக வந்துள்ளன. சிறை வளாகத்தில் இருந்தபடியே ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்திய சிறை வரலாற்றில் இது முதல் முறை என்று சொல்லலாம்.அந்தப் பாடலைப் பாடியவர்களும் சிறை இல்லவாசிகளே. சிறைச் சூழலை மையமாகக் கொண்ட ‘சிறை கானா...’ பாடல் ரசிகர்களிடையே பேசப்படும். 4 மங்கீஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

*தமிழக சிறைகள் மற்றும் ஜெயலலிதா கைதியாக இருந்த பரப்பன அக்ரஹாரத்தில் ஆய்வு

*சிறைக் கைதிகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம்

*சிறைக் கைதிகளே நடிக்கும் படத்தின் இயக்கம்

செய்தி: எஸ்.ராஜா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்