தீபாவளி...ஏன்...எதற்கு...எப்படி..?
வனவாசத்தை நிறைவு செய்த ராமன், சீதையோடும் லட்சுமணனோடும் அயோத்தியில் நுழைந்த தினம் தீபாவளியாக கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் அயோத்தி மக்கள், ராவணனை வென்று வெற்றியோடு திரும்பிய ராமனை ஆரவாரத்துடன் கொண்டாடி வரவேற்றனர். மேலும் அன்றைய தினம், ராவணனின் பொம்மைகளை எரித்து ராமனின் வெற்றியைப் பறைசாற்றினார்களாம்.  அந்த வழியில்தான் நாமும் இன்றும், ராமன் தனது பாணங்களால் ராவணனின் அரக்கர் கூட்டத்தைத் தூள் தூளாக்கியதற்கு அடையாளமாக தீபாவளியன்று பட்டாசுகள் வெடித்து, மத்தாப்புகள் கொளுத்துகிறோம். பட்டாசு சிதறுவது போல் ராவணனின் தலைகள் யாவும் ராம பாணங்களால் தாக்கப்பட்டு சிதறின. ஒளிமிக்க விதவிதமான வண்ண மத்தாப்புகள் ராமன் யுத்தத்தில் விடுத்த விதவிதமான அஸ்திரங்களைக் குறிக்கின்றன.
 அதே போல நரகாசுரன் என்ற கொடும் அரக்கன் உலகுக்கு பல இன்னல்களைக் கொடுத்து வந்தான். பதினாறாயிரத்து நூற்றி எட்டு பெண்களை, தனது கைதிகளாக அடைத்து வைத்து அவர்களை இல்லாத கொடுமைக்கு ஆளாக்கினான்.
தேவர்களைத் தாக்கி அவர்களது உடைமைகளைப் பறித்து அவர்களையும் தொல்லைப் படுத்தினான். தேவர்களின் தாயான அதிதியை அவமதித்து, அவர்களுடைய காதில் இருந்த தெய்வீகத் தோடு ஒன்றைத் திருடவும் செய்தான். இப்படி உலகிற்கு பல இன்னல்களை விளைவித்தான். அவனது தொல்லைகளைத் தாங்காத தேவர்கள் துவாரகையில் இருந்த கண்ணனிடம் முறையிட, கிருஷ்ணன் முறையான போரில் அவனை வென்று கொன்று ஒழித்தார். மரணிக்கும் தருவாயில், தனது இறந்த நாளை அனைவரும் தம் நினைவாக கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மாவிடம் அவன் கேட்க, அவனுக்கு அந்த வரத்தைத் தந்து அருளினார் கண்ணன்.
அந்த வகையில், கொடுமைகள் செய்த அரக்கன் ஒழிந்த நாளை, அதர்மத்தை எதிர்த்து தர்மம் போரிட்டு வென்ற நாளை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
இப்படி கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரனை வதம் செய்துவிட்டு துவாரகை திரும்பிய போது, துவாரகை வாழ் மக்கள் வரிசையாக தீபம் ஏற்றி கொண்டாடியதால், நாமும் தீபங்களை ஏற்றி கொண்டாட வேண்டும் என்ற மரபு வந்தது.
‘ஆவளி’ என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றி கொண்டாடுவதால் இந்த பண்டிகைக்கு தீபாவளி என்று பெயர். அதர்மத்தை எதிர்த்து தர்மம் வென்ற நாளில் நாம், தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்டால் நமது நியாயமான தர்மமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மைஅதே சமயம் பதினெட்டு புராணங்களில் முக்கியமான புராணமான ஸ்கந்த புராணத்தில், விஷ்ணு காண்டத்தில், ‘கிருத்திகா மகாத்மியம்’ என்ற இடத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.
‘துலா மாதத்தில், பிரதோஷ வேளையில் அதாவது சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் பட்டாசுகளை கையில் ஏந்த வேண்டும். இப்படிச் செய்வதால் பெரும் நன்மை விளையும்’ என்று சொல்கிறது.
இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.நமது முன்னோர்கள், எமலோகம் அல்லது முன்னோர்களின் உலகில் இருந்து ஆடி மாதம் அமாவாசை அன்று புறப்பட்டு நம்மைக் காண வருகிறார்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அப்படி வருபவர்கள் புரட்டாசி மாதத்து மகாளய அமாவாசை அன்று முடிவடையும் மகாளய பட்சம் பதினாறு நாட்களும் நம்முடனேயே இருந்து நம்மை ஆசீர்வதித்துவிட்டு மீண்டும் தங்கள் உலகுக்கு செல்கிறார்கள் என்று நம்முடைய புராணங்களும் சாஸ்திரங்களும் சொல்கின்றன.அந்த வகையில் மகாளய பட்சம் முழுவதும் நம்மோடு இருந்த முன்னோர்கள் மீண்டும் எமலோகம் செல்லும் பயணத்தை துலா மாதத்தில், அதாவது ஐப்பசி மாதத்தில் தொடங்குகிறார்கள்.
இருள் நிறைந்த பாதையில் எமலோகத்துக்குச் செல்லும் நமது முன்னோர்களுக்கு, அவர்கள் செல்லும் பாதையில் ஒளி ஏற்படும் பொருட்டு மத்தாப்பு (வடமொழியில் ‘உல்க தனம்’) போன்றவற்றை கொளுத்த வேண்டும் என்று ஸ்கந்த புராணம் சொல்கிறது.இப்படி தீபாவளி அன்று நாம் அவர்களுக்கு காட்டும் ஒளியானது, நமது முன்னோர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை உயர்ந்த நல்ல உலகங்களுக்கு அழைத்துச் செல்லுமாம்.
ஆகவே, நமது முன்னோர்களுக்கு வழிகாட்டவும், நரகத்தில் ஒரு வேளை அவர்கள் இருந்தால் அவர்களை அங்கிருந்து மீட்கவும் தீபாவளி அன்று மத்தாப்பு போன்றவற்றை கொளுத்தி தீபங்களை தானம் செய்ய வேண்டுமாம்.
இப்படிச் செய்வது ஏழேழு தலைமுறை முன்னோர்களும் நல்ல கதி அடைய வழிவகுக்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அது மட்டுமில்லாமல், தீபாவளி அன்று ‘தீர்த்தே கங்கா! தைலே லக்ஷ்மி!’ என்று சொல்வது போல, தீபாவளி அன்று அனைத்து நீரிலும் கங்கை இருப்பதாக ஒரு நம்பிக்கை. அதே போல ‘தைலத்தில்’ அதாவது எண்ணெயில் மகாலட்சுமி இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை.
ஆகவே, தீபாவளியன்ன்று, சூரியன் உதிக்கும் முன்பே, உடல் முழுவதும் எண்ணெயை தேய்த்துக் கொண்டு வெந்நீரில் நீராட வேண்டும். இப்படிச் செய்யும்போது, மகாலட்சுமியின் அருள் நமது உடலுக்கு கிடைப்பதால் தேகத்திலுள்ள நோய்கள் நீங்கி வாழ்வில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதே போல காசிக்குச் சென்று கங்கையில் நீராட முடியாதவர்கள், தீபாவளியன்று சூரிய உதய காலத்தில், நீரில் கங்கை இருப்பதாக நினைத்து, வணங்கி அந்நீரில் குளிக்கும்போது, கங்கையில் நீராடும்போது கிடைக்கும் புண்ணியம் கிட்டும்.
இப்படி தைலத்தில் லட்சுமியும், அனைத்து நீரிலும் கங்கையும் தீபாவளியன்று மட்டுமே இருப்பதால், அன்று மட்டுமே பலன் கிடைக்கும். மற்ற நாட்களில் இந்தப் பலன் கிடைக்காது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து, இருக்கும் இடத்திலிருந்தே கங்கையில் குளித்து இறைவனின் அருள் பெறுவோம்.
நமது ஈரேழு தலைமுறையைச் சேர்ந்தவர்களின் ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.மன நிம்மதி, ஆரோக்கியம், செல்வம் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க எம்பெருமான் என்றும் அருள்புரிவான். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
ஜி.மகேஷ்
|