இதே வேலையை செய்ய பீகார்ல கூப்பிட்டிருக்காங்க!
2023 சென்னை பெரு மழைல ஏரி உடைஞ்சு கார்கள் மிதந்தன...
அரசு + குடியிருப்பு மக்கள் + தன்னார்வல அமைப்பு வழியா இப்ப ஏரியை பலப்படுத்திட்டோம்...
கடந்த 2023ம் ஆண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகனமழை சென்னையை மொத்தமாகப் புரட்டிப்போட்டது நம் எல்லோருக்கும் நினைவிருக்கலாம். அந்நேரம் மேடவாக்கம் பெரிய ஏரி எனும் வடக்குப்பட்டு ஏரியின் ஒருபக்க கரை உடைந்து தண்ணீர் குடியிருப்பிற்குள் புகுந்தது. அப்போது கார்கள் மிதக்கும் காட்சிகள் செய்திகளில் வெளியாகி பதைபதைக்க வைத்தன.
 இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட மேடவாக்கம் குடியிருப்பாளர்கள் நலச் சங்கக் கூட்டமைப்பினர் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கினர். அப்படியாக அவர்களுடன் கைகோர்த்து சிஎஸ்ஆர் நிதியுதவி மூலம் மேடவாக்கம் பெரிய ஏரியை சமீபத்தில் புனரமைப்பு செய்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த தாகம் பவுண்டேஷன். இந்த அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக சாலையோரம் வசிப்பவர்களின் பசியை போக்கி வருகிறது. தற்போது முதல்முறையாக ஏரியை புனரமைக்கும் பணியைச் செய்து முடித்துள்ளது. இந்நிலையில் வடக்குப்பட்டு ஏரிக்கு நேரடியாக ஒரு விசிட் அடித்தோம்.  வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலையிலிருந்து பிரியும் வடக்குப்பட்டு சாலையில் இருக்கிறது இந்த ஏரி. பரந்து விரிந்து அத்தனை அழகாய் காட்சியளிக்கும் இந்த ஏரி சுமார் 370 ஹெக்டேர் பரப்பளவை கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் கரை வரப்பு ஏறக்குறைய 1.7 கிமீ நீளம் உடையது. இதில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை வரப்பை உயர்த்தியும், அகலப்படுத்தியும், கரையின் பலத்தை அதிகரித்தும், நடைபாதை அமைத்தும் இருக்கிறது தாகம் பவுண்டேஷன்.
 இதனுடன் ஏரியில் இருந்த ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளையும் அகற்றி புதுப்பொலிவுடன் மாற்றியுள்ளது. ‘‘அடிப்படையாக நாங்க சென்னையில் தினமும் 5 ஆயிரம் சாலையோரவாசிகளுக்கு உணவு வழங்கிட்டு இருக்கோம். இதேபோல் தில்லியிலும் தினமும் குழந்தைகளுக்கும் தெருவோர வாசிகளுக்கும் உணவளிக்கிறோம். அப்புறம் தெருநாய்களுக்கும் உணவளிக்கிறோம்.
 தவிர, மாநகராட்சியின் முதியோர் இல்லங்களைப் பராமரிக்கிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவுறோம். எல்லாமே crowdfunding எனும் கூட்டு நிதி திரட்டுதல் மூலம் செய்திட்டு வர்றோம். ஆனா, இந்த ப்ராஜெக்ட் எங்களுக்கு ரொம்பவே புதுசு. சவால் நிறைஞ்சது. எல்லாவற்றையும் தாண்டி வெற்றிகரமாக செய்து முடிச்சிருக்கோம்...’’ என அத்தனை உற்சாகமாகப் பேசுகிறார் தாகம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜா மான்சிங்.
 ‘‘இந்த ஏரியை நாங்க தேர்ந்தெடுக்கக் காரணமே கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது இதன் கரை உடைந்து அந்தப் பகுதி குடியிருப்புகளைச் சூழ்ந்ததுதான். அப்போ, அந்தப் பகுதி மக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டாங்க. வடக்குப்பட்டு பிரதான சாலையில் ஒரு பக்கம் ஏரினா, இன்னொரு பக்கம் குடியிருப்புகள் இருக்குது. இந்த ஏரியின் கரை ரொம்ப பலவீனமாக இருந்தது. சாலையிலிருந்து கொஞ்சம் உயரத்துல கரையின் வரப்பு இருக்கும். ஆனா, அது குப்பை மேடாகவும், புதர்கள் மண்டியும் மோசமாகக் கிடந்தது.
 அந்தப் பகுதியைச் சேர்ந்த என் நண்பர் சங்கர் ரவி இந்தப் பிரச்னையைச் சொல்லி மேடவாக்கம் குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தினரை அறிமுகப்படுத்தினார். அப்புறம் ஃப்ளாக்ஸ்ட்ரானிக்ஸ்னு ஒரு பெருநிறுவனத்தின் சிஎஸ்ஆர் பிரிவான ஃப்ளக்ஸ் பவுண்டேஷனுடன் டைஅப் பண்ணினோம்.அவங்க நிதியுதவி அளிக்க நாங்க சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டோம். இதற்கு மேடவாக்கம் குடியிருப்பு சங்கத்தினர் ரொம்ப சப்போர்ட் செய்தாங்க. அவங்கதான் எங்களை நம்பி இந்தப் பெரும் பணியை ஒப்படைச்சாங்க.
அப்படியாக முதல்கட்டமாக ஏரியை மறுசீரமைப்பு செய்து மழை வெள்ளம் குடியிருப்புக்குள் புகாமல் இருக்க பணிகளை மேற்கொண்டோம். இதற்காக சுமார் 150 டூ 160 லோடு மண் பயன்படுத்தினோம். இதன்வழியே நான்கு முதல் ஐந்து அடி வரை கரையின் வரப்பு உயரத்தை கூட்டினாம். அப்புறம் வரப்பின் அகலத்தை அதிகப்படுத்தினோம். பிறகு மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் மண்ணை இறுக்கமாக அழுத்தி சீரமைச்சோம்.
குறிப்பா பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் மண்ணை கச்சிதமாக அழுத்தி பலமாக்கியிருக்கோம். இதனால், பெருமழை பெய்தாலும் தண்ணீர் வெளியே லீக் ஆகாது. அப்புறம் நிறைய மரங்கள் நடவு செய்தோம். தொடர்ந்து ஏரியின் உள்ளே இருந்த ஆகாயத்தாமரைகளையும், ஹைட்ரில்லா என்கிற ஆக்கிரமிப்பு தாவரத்தையும் அகற்றினோம். இதன்பிறகு நடைபாதை அமைத்து அழகு படுத்தினோம். இனி இதில் அங்குள்ள குடியிருப்புவாசிகள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
இப்போ, வடக்குப்பட்டு பிரதான சாலையில் உள்ள ஏரிக்கரையில் ஒருபகுதி முடிஞ்சிருக்கு. இதற்கு 47 லட்சம் ரூபாய் வரை செலவானது. அடுத்து இன்னொரு பாதி பண்ண வேண்டியிருக்கு...’’ என்கிறபடி தொடர்ந்தார். ‘‘இந்த வடக்குப்பட்டு ஏரிக்கு அருகில் நன்மங்கலம் காடு இருக்குது. மழை பெய்யும்போது அதிலிருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த ஏரிக்கு வருது. இப்போ தமிழக அரசும் இந்த ஏரியில் கட் அண்ட் கவர் முறை பண்ணியிருக்காங்க.
அதாவது இந்த ஏரியையும், அருகிலுள்ள அணை ஏரியையும் அண்டர்கிரவுண்ட்ல ஒரு சுரங்கப்பாதை மூலம் இணைச்சிருக்காங்க. பெருமழையின்போது தண்ணீர் அதிகரித்ததும் அந்த கட் அண்ட் கவரை திறந்திடுவாங்க. அப்போ, அதிகப்படியான தண்ணீர் அணை ஏரிக்குப் போய், அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்குச் சென்றிடும். அதனால், இனி மழைநீர் அதிகமாகி ஏரி உடைஞ்சு வெள்ளமாகிடுமே என்கிற பயம் தேவையில்ல.
அடுத்ததாக நாங்க இன்னொரு பகுதியில் மழைக்காலம் முடிஞ்சதும் பணி செய்ய இருக்கோம். இதுக்கு சுமாராக 450 முதல் 500 மண் லோடு தேவைப்படுது. அப்புறம், இந்தப் பக்கத்தில் உள்ளதுபோல அதே அளவுக்கு வரப்பை உயர்த்தணும். அதனால், இந்தப் பகுதிக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மொத்தமாக இந்தப் பணி ஒண்ணேகால் கோடி ரூபாயில் முடியும்.
இதுக்கும் ஃப்ளக்ஸ் பவுண்டேஷன் நிதி தர்றோம்னு சொல்லியிருக்காங்க. அதில்லாமல் வேறு சிஎஸ்ஆர் வந்தாலும் இணைஞ்சு வேலைகள் செய்யலாம்னு ஐடியா இருக்கு.
இப்ப எங்களுடைய இந்தப் பணியைப் பார்த்திட்டு பீகார்ல இருந்து ஜல்சக்தி அமைச்சகத்துல கூப்பிட்டாங்க. இதுவும் நண்பர் மூலமாக வந்ததுதான்.
அங்கே பகவதி ஆறுனு இருக்கு. அந்த ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் பிரிந்து 13 கிலோமீட்டர் தூரம் சென்று நிறைவில் ஒரு ஏரியில் கலக்குது. இந்த 13 கிலோமீட்டர் ஸ்ட்ரெட்ச் பகுதி ரொம்ப பலவீனமாக இருக்கிறதா சொன்னாங்க. அதை சீரமைக்கச் சொல்லி கேட்டிருக்காங்க. கடந்த ஓராண்டு காலமாக நடந்த வடக்குப்பட்டு ஏரி புனரமைப்புப் பணியில் நாங்க நிறைய கத்துக்கிட்டோம். அந்த அனுபவம் பீகார் கால்வாய் ப்ராஜெக்ட்டை இன்னும் சிறப்பாக செய்யமுடியும்னு நம்பிக்கை தந்திருக்கு. தொடர்ந்து இதுபோல் நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளைச் செய்யலாம்னு இருக்கோம்...’’ என முத்தாய்ப்பாய் சொல்கிறார் ராஜா மான்சிங்.
பேராச்சி கண்ணன்
|