ஒரேயொரு சேஃப்டி பின் விலை ரூ.69 ஆயிரம்!
ஆம்! சரியாகத்தான் படித்தீர்கள். ஊக்கு என்னும் ஒரு ‘சேஃப்டி பின்’னின் விலை ரூ. 69,000. காரணம் அதன் பிராண்ட்.இத்தாலியின் ‘பிராடா’ பிராண்ட் உலகின் மிகப்பெரும் பிரண்டாக திகழ்கிறது. இதில் ஒரு சேஃப்டி பின் வாங்கவேண்டும் என்றால் இவ்வளவு விலை கொடுக்கவேண்டும்.இந்த சேஃப்டி பின் வெள்ளியில் உருவாக்கப்பட்டது. அதில் கம்பளி நூலினால் டிசைன் செய்யப்பட்டு இந்த சேஃப்டி பின் வெளியிடப்பட்டிருக்கிறது.
 ‘இருந்தாலும் ரூ. 69,000 என்பது கொஞ்சம் நெருடுதுப்பா’ என்றால் இந்த பிராண்ட் கடந்து வந்த பூர்வீகம் அப்படி என்கிறது கூகுள் முதல் AI உலகம் வரை.இத்தாலியில் 1913ம் ஆண்டு, மாரியோ பிராடா (Mario Prada) மற்றும் அவரது சகோதரி மார்ட்டினோ (Martino) ஆகியோரால் நிறுவப்பட்ட ஃபிராடெல்லி பிராடா (Fratelli Prada) எனும் சிறிய தோல் பொருட்கள் விற்கும் கடையிலிருந்துதான் இன்று உலகம் அறிந்த பிராடா பிராண்டின் வரலாறு தொடக்கம்.
 ஆரம்பத்தில் இத்தாலி, மிலான் நகரில் தோல் பயணப் பைகள், சிறு கைப்பைகள், பெல்ட், வாலட், பர்ஸ் ஆகியவற்றை இந்நிறுவனம் விற்பனை செய்தது. சிறு கடையாக இருப்பினும் பிராடா தயாரித்த பொருட்கள் மிகுந்த நுணுக்கத்துடன், உயர் தர தோல் மற்றும் உலோக அலங்காரங்களுடன் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக இத்தாலி அரச குடும்பத்தின் கவனத்துக்கு வந்தது பிராடா தோல் பொருட்கள். 1919ம் ஆண்டு பிராடா ராயல் குடும்பத்திற்கு அதிகாரபூர்வ சப்ளையர் என்ற அந்தஸ்தைப் பெற்றது. இதுவே பிராண்டின் முதல் அங்கீகாரம்.
1978ம் ஆண்டு, மாரியோ பிராடாவின் பேத்தி மியுச்சியா பிராடா இந்நிறுவனத்தின் உரிமையாளராக (CEO) பொறுப்பேற்றார். இதுவே பிராடாவின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கலை, அரசியல், சமூகம், பெண்ணின் தனித்துவம் போன்ற புரட்சிகளை ஆடைகள் வழியாக வெளிப்படுத்திய மியுச்சியா உருவாக்கிய பிராடா தயாரிப்புகளில் நவீன அரசியலும், பெண் சுதந்திரமும் சேர்ந்து ஃபேஷனில் கலக்கப்பட்டன.
அவர் அறிமுகப்படுத்திய நைலான் பைகள், 1980களில் ஃபேஷன் ஸ்டேட்டஸாக மாறியது. அந்தக் காலத்தில் பெரும்பாலான பிராண்டுகள் தோல் பைகள் மட்டுமே தயாரித்திருந்த நிலையில், பிராடா நைலான் பைகளால் மாற்று சிந்தனையாக கொண்டாடப்பட்டது.
‘சிம்ப்ளி பட் ஸ்மார்ட்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.பிராடா ஃபேஷன் 1980களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பத்திலும் ஆடைகளுக்கு விரிவுபடுத்தியது. பெண்களுக்கான உடைகள், கோட்டுகள், ஸ்கர்ட்கள், பின்னர் ஆண்கள் ஆடைகள் வரை தயாரிக்கத் துவங்கினர்.
1993ல் மியுச்சியா ‘Miu Miu’ எனும் இளைய தலைமுறைக்கான கிளை பிராண்டை அறிமுகப்படுத்தினார். Miu Miu சுவாரஸ்யம், சுறுசுறுப்பு, மற்றும் சுதந்திரமான வடிவமைப்புகளுக்காக பிரபலமானது.பிராடா 2000களில் உலகளாவிய அளவில் பரவியது. நியூயார்க், டோக்கியோ, பாரிஸ், லண்டன், ஹாங்காங் போன்ற நகரங்களில் அதன் ஷோரூம்கள் திறக்கப்பட்டன.
பிராடா என்பது வெறும் ஆடம்பர பிராண்ட் அல்ல. ஃபேஷன் ஸ்டேட்மெண்ட், சமூக அக்கறை கொண்ட அறிவுசார் ஃபேஷன், அறிவுடன் கூடிய லக்ஷுரி என்ற கருத்தில் அதன் வடிவமைப்புகள் உருவாகின்றன. பிராடா விலங்குத் தோல் பயன்படுத்துவதைக் குறைத்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கும் நிலைத்தன்மை பொருட்கள் மேல் ஆர்வம் காட்டத் துவங்கியது.
மியுச்சியா பிராடா மற்றும் ராப் சைமன்ஸ் இணைந்து இப்போது நிறுவனத்தின் வியாபாரத்தை வழிநடத்தி வருகின்றனர்.இன்றைய பிராடா இன்று, திரைப்படங்களில் (‘The Devil Wears Prada’ போன்றவை), கண் காட்சிகளில், ரன்வே ஷோக்களில் மற்றும் டிஜிட்டல் உலகிலும் பிராடா மிகப்பெரும் அந்தஸ்து அடையாளம்.எனினும் இப்பேர்ப்பட்ட ஆடம்பர பிராண்ட் நிறுவனமும் கூட ஒரு முறை பிரச்னையில் சிக்கியது.
இவர்களின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை தயாரிப்புகளின் தொகுப்பாக இந்தியாவின் முக்கிய கலாசார காலணியாக விளங்கும் கோலாபுரி செருப்புகளை தங்களது சொந்தத் தயாரிப்பு என கொண்டுவந்து ஃபேஷன் உலகில் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. பின்னர் மன்னிப்பு கேட்டு அதற்கு விளக்கம் தெரிவித்தது வேறு கதை. ஆனால், பிராடா பிராண்டில் ஓர் எளிமையான உடை வேண்டுமானால் கூட குறைந்தது ரூ. 3 லட்சம் வேண்டும் என்பது மட்டும் இப்போதைய நிலவரம்!
ஷாலினி நியூட்டன்
|