வாராரு வாராரு கருப்பரு வாராரு
8. பதினெட்டாம் படி கருப்பர் ‘சித்திரை விடுதி’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தென் தமிழகத்தைச்சேர்ந்தவர் என்றால் உடனே புன்னகைப்பீர்கள். அகமும் முகமும் மலரும்.வேறொன்றுமில்லை. தென் தமிழகத்து கிராமங்களில் வீட்டு வேலை செய்வதற்கோ, மாடு மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால் அவர்கள் சித்திரை மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் வேலைக்கு வராமல் இருக்கலாம்.இதற்குத்தான் ‘சித்திரை விடுதி’ என்று பெயர். அதாவது சித்திரை மாதம் குறிப்பிட்ட நாளில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே ‘விடுதலை செய்து’கொள்ளலாம்.
 இப்படி ஓர் எழுதப்படாத சட்டம் மக்கள் வரலாறாக, அதே சமயம் கோயில் சார்ந்ததாகவும் இருக்கிறது.இருங்குன்றம், ஓங்கிருங்குன்றம், மாலிருங்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமால்குன்றம், இருஞ்சோலைமலை, சிம்மாத்திரி, கேசவாத்திரி, இடபமலை, விடைமலை என்று வரலாற்றில் அழைக்கப்பெற்ற இன்றைய அழகர் கோயில்தான் அந்தப் பகுதி. அந்தக் குறிப்பிட்ட நாள், அழகர் ஆற்றில் இறங்கும் நாள்.தமிழக கோயில் வரலாற்றில் வேறு எங்கும் இல்லாத பல விஷயங்கள் நம் மதுரை கள்ளழகர் கோயிலில் குடிகொண்டிருக்கிறது.
 இந்தியா முழுக்க ஐப்பசியில் தீபாவளி என்றால், மதுரை மக்களுக்கு சித்திரையிலும் ஒரு தீபாவளி உண்டு. அதுதான் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். பத்து நாட்களுக்கு மேலாக மதுரை மட்டும் இல்லாமல், உலகத்தின் பல பகுதியில் இருந்து தமிழர்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடும் அந்த திருவிழாவின் முக்கிய கதாநாயகனாக இருக்கும் கள்ளழகரைச் சுற்றி பல வரலாறுகள் இருக்கின்றன.
 அதிலும் குறிப்பாக சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படும் 18ம் படி கருப்புசாமியின் சரித்திரம் மெய்சிலிர்க்கும் வரலாறு. யார் இந்த 18ம் படி கருப்பு? அழகர் கோயிலின் ராஜகோபுர கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டு இருப்பதன் காரணம் என்ன? ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஏன் கதவைத் திறக்கிறார்கள்?
அப்படி திறக்கும்போது சக்கரத்தாழ்வார் மட்டும் ஏன் செல்கிறார்?
அழகர் மலையில் இருக்கும் அழகர் உற்சவ சிலையைப் பார்க்க கண்கோடி வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாது. காரணம், அச்சிலை அபரஞ்சி தங்கத்தினால் உருவானது.
இந்த உலகத்தில் இவருடைய அழகுக்கு நிகரான உற்சவ மூர்த்திகள் எங்குமில்லை. அவ்வளவு அழகான அந்தச் சிலையை ஓர் மன்னன் அபகரிக்க நினைத்தான். தன் நாட்டுக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தான்.
அந்த மன்னன், சேர நாட்டைச் சேர்ந்தவன். அதாவது இன்றைய கேரளப் பகுதியை ஆண்டுகொண்டிருந்தவன். அழகரோ ஒரு கோட்டையில் இருப்பது போல அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார். எப்படி அவரை இங்கு கொண்டு வருவது?
யோசித்தவன், இந்தப் பொறுப்பை தன் நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த 18 மந்திரவாதிகளிடம் ஒப்படைத்தான். என்ன செய்வீர்கள் என்று தெரியாது. அபரஞ்சி தங்கத்தினாலான அந்தச் சிலை எனக்கு - நம் நாட்டுக்கு வேண்டும்.மன்னரின் கட்டளையை 18 மந்திரவாதிகளும் ஏற்றார்கள்.
அழகர் மலைக்குப் புறப்பட்டார்கள். அந்த 18 பேருக்கும் காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும், வெள்ளைக் குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. அழகர் மலையை அடைந்ததும் அந்தக் காவல் தெய்வம் திகைத்து நின்றது. அழகென்றால் அப்படியொரு அழகு. தெய்வீகம். சாந்தம். காவல் தெய்வம் பார்த்தது. பார்த்துக் கொண்டே நின்றது.
பின்னால் வந்த 18 மந்திரவாதிகளும் தங்கள் கடமையை நிறைவேற்றத் தயாரானார்கள். தங்களை ஒருவரும் காணக் கூடாது. யார் கண்களுக்கும், தாங்கள் தெரியக் கூடாது.மந்திரத்தாலான அஞ்சனத்தை - மையை - தங்கள் இமைகளில் தடவிக் கொண்டார்கள்.
யார் எதிரில் நின்றாலும் இனி அவர்கள் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள். இது போதும் அழகரின் சக்தி வாய்ந்த அந்தச் சிலையை எடுத்துச் செல்லலாம். கேட்பாரில்லை.முக்காலமும் அறிந்த அழகருக்கு இது தெரியாமல் இருக்குமா? தன் நாடகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தார். அதன் முதல் பகுதியாக கோயில் பட்டரின் கனவில் தோன்றி எச்சரித்தார்.
கண்விழித்த பட்டர், ‘எல்லாம் அழகர் அருள்’ என இறைவனுக்கு நைவேத்தியமாக பொங்கல் தயாரித்தார். அளவுக்கு அதிகமாக மிளகை அதில் சேர்த்தார். கோயிலுக்குச் சென்றவர், தன் வழக்கமான கடமைகளை செய்துவிட்டு அழகருக்கு அந்தப் பொங்கலை நைவேத்தியம் செய்தார். பிறகு அப்பொங்கலை ஆலயம் முழுக்க ஆங்காங்கே வைத்தார்.
மிளகின் வாசனை அழகர் மலையை அலங்கரித்தது. இந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட, யார் கண்களுக்கும் தெரியாமல் இருந்த 18 மந்திரவாதிகளும் மெல்ல வந்து பொங்கலை எடுத்துச் சாப்பிட்டார்கள்.
அடுத்த கணம், மிளகின் காரம் தாங்காமல் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. கையோடு அவர்கள் பூசியிருந்த மந்திர அஞ்சனத்தை - மையை - அழித்தது.விளைவு? மந்திரத்தால் யார் கண்களுக்கும் தெரியாமல் இருந்த அந்த 18 மந்திரவாதிகளும் ரத்தமும் சதையுமாக அனைவர் முன்பும் நின்றார்கள்.அவ்வளவுதான்.
காவலர்கள் அவர்களைப் பிடித்தார்கள். கட்டி வைத்தார்கள். களிமண்ணால் 18 படிகளை உருவாக்கினார்கள். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு மந்திரவாதியைப் புதைத்தார்கள்.ஆனால், இந்த 18 மந்திரவாதிகளுக்கும் காவலாக கேரள நாட்டில் இருந்து வந்த கருப்பரை வணங்கினார்கள்! திருடர்களுடன் வந்தவரை ஏன் மக்கள் வணங்க வேண்டும்?
காரணம், கருப்பரின் சக்தி. கருப்பரின் பலம். கருப்பர் நினைத்திருந்தால்... கருப்பர் முடிவெடுத்திருந்தால்... மிகச் சுலபமாக அபரஞ்சி தங்கத்தினாலான அழகரை இந்த 18 மந்திரவாதிகள் என்ன... சாதாரண மக்கள் கூட எடுத்துச் சென்றிருக்கலாம்.போர்க் கலையில் எப்பேர்ப்பட்ட திறமை வாய்ந்தவர்கள் வந்தாலும் ஒருவராலும் கருப்பரை வீழ்த்தியிருக்க முடியாது. முடியவே முடியாது.
அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த கருப்பர், அழகரின் அழகில் மயங்கி நின்றார். அழகர் மலையில் அழகர் இருப்பதே சரி என முடிவெடுத்தார்.இதனால்தான் கோயில் பட்டரால் பொங்கலில் அளவுக்கு அதிகமான மிளகை வைக்க முடிந்தது. இதனால்தான் 18 மந்திரவாதிகளையும் பிடிக்க முடிந்தது; 18 படிகளில் அவர்களைப் புதைக்க முடிந்தது.
கருப்பர் இல்லையேல் இது சாத்தியமில்லை.கைகூப்பி கருப்பரை பட்டர் உட்பட அனைத்து வீரர்களும் மக்களும் வணங்கினார்கள்.அழகர் மேலிருந்த தன் பார்வையை விலக்கி எல்லோரையும் பார்த்த கருப்பர், ‘இனி அழகருக்கு நான்தான் காவல்... என்னை மீறி யார் இவர் மீது கைவைக்கிறார் என்று பார்க்கிறேன்...’ கர்ஜித்தார். அன்று முதல் கருப்பர், அந்தக் கதவிலேயே இருந்து காவல் காத்து வருகிறார். அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள், பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் கூடவே இன்னொரு தகவலும் உண்டு. ‘அழகர் மலையில்தான் அழகர் இருக்க வேண்டும்’ என கருப்பர் கம்பீரமாக அறிவித்ததற்கு காரணம் அதுதான். அது மட்டும்தான்.
அதுதான் அழகர்கோயிலில் கொப்பரை கொப்பரையாக தங்கம் இருந்த விஷயம். ‘அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது’ என்ற சொலவடைக்குப் பின்னால் மறைந்திருக்கும் ரகசியம் இதுதான்.
அந்த அளவுக்கு அழகருக்கு ஆபரணங்கள் இருந்தன. இதை அபகரிக்கவே கேரள மன்னர் முயன்றார். இதைத் தடுக்கவே மந்திரவாதிகளுக்குக் காவலாக கருப்பர் புறப்பட்டார். இனி எப்பொழுதும் இதைத் தடுத்து நிறுத்தவே அழகர் கோயில் கதவில் உறக்கமின்றி காவல் காக்கிறார்.
அதனால்தான் இப்பொழுதும் திருவிழாவுக்காக அழகர் வெளியே செல்லும்போது, பதினெட்டாம்படிக் கருப்பரிடம், அவர் என்னென்ன நகைகள் அணிந்து செல்கிறார் என்று பட்டியலிட்டு வாசித்துக் காட்டுகிறார்கள்.
மீண்டும் அழகர் வந்ததும், அதே நகைகள் அப்படியே திரும்ப வந்திருக்கிறது என கருப்பரிடம் உறுதிப்படுத்துகிறார்கள். எல்லா நாளும் கோயிலை மூடியதும் சாவியை பதினெட்டாம் படி கருப்பரிடம் வைக்கிறார்கள். இந்த பதினெட்டாம் படி கருப்பர், வித்தியாசமானவர். இங்கு மட்டும் கருப்பருக்கு உருவம் கிடையாது. மிகப்பெரிய கோபுரக் கதவே கருப்பர்தான்.
மக்கள் மனதில் நிலைபெற்றிருக்கும் இந்தக் கதை, வரலாற்று ரீதியாகவும் மெய்ப்பிக்கப்பட்டதுதான்.கிபி 1608ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தக் கதவு அடைக்கப்படவில்லை. மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இதன்பிறகு மதுரையின் அரசியல் தலைமை பலவீனமானது.
நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாதன் ஆட்சிக்காலத்திலோ அல்லது அவர் இறந்தபிறகு ஆட்சிக்கு வந்த அவருடைய மனைவியான மீனாட்சியின் ஆட்சிக்காலத்திலோதான் மக்கள் மனதில் அழியாமல் இடம்பெற்றிருக்கும் இந்த ‘18ம் படி கருப்பண்ணசாமியின் உண்மை நிகழ்வு நடந்திருக்க வேண்டும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கருப்பரே கதவாக இருப்பதால், அக்கதவுக்கு சந்தனம், குங்குமம், பூ, மாலை ஆகியவற்றால் அலங்கரித்து கற்பூரம் ஏற்றி வணங்குகிறார்கள். தினமும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்குக் கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கருப்பரின் சந்நிதியில் - கதவுக்கு முன்னால் - வைத்து, ‘இது தூய்மையாகக் கொண்டுவரப்பட்டது’ என்று சொல்லிவிட்டே கோயிலுக்குள் கொண்டு செல்கிறார்கள்.பதினெட்டாம்படி கருப்பரிடம் என்றும் பொய் சொல்ல முடியாது. நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர் பக்கம் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி துணையாக நின்று வழிநடத்துவார்.
நீண்ட நாட்களாக நியாயம் கிடைக்காதவர்கள், நம்பிக்கை துரோகத்தால் பொருளாதாரத்தை இழந்தவர்களுக்கு மட்டுமே பதினெட்டாம் படி கருப்பரின் அருள், துணை கிடைக்கும். எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும் இந்தக் கதவு, வருடத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படும். மற்றபடி வேண்டுதல், நேர்த்திக்கடன் எல்லாமே அந்த பூட்டிய கதவுக்குத்தான்.
அந்த ஒருநாள் கதவு திறக்கும்போதும், அந்த வழியே யாரும் செல்வதில்லை. அழகரின் பல்லக்கு கூட போகாது. ஆனால், அழகரின் போர்த் தளபதியான சக்கரத்தாழ்வார் மட்டும் இவ்வாசல் வழியாக வந்து செல்வார். ஆம். சக்கரத்தாழ்வாருக்காக மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை இக்கதவு திறக்கப்படுகிறது.
சக்கரத்தாழ்வார் மட்டும் அவ்வழியே ஏன் வந்து செல்கிறார்?
காரணம், அழகர் வேறு கருப்பர் வேறு அல்ல. திருமால்தான், பெருமாள்தான் கருப்பண்ணசாமி. எனவேதான், படைத்தளபதி அவரைச் சென்று பார்க்கிறார். தன்னைத் திருட வந்தவர்களை, தானே கருப்பராக மாறி தண்டித்தார்; பதினெட்டு படிகளில் அவர்களைப் புதைத்தார்.
ஓம் கருப்பண்ணசாமியே நம: ஓம் பதினெட்டாம்படி கருப்பரே நம:
(கருப்பர் வருவார்)
கே.என்.சிவராமன்
|