சர்வதேச கார் பந்தயத்தில் ஃபெராரி காரை ஓட்டப்போகும் முதல் இந்திய பெண் ரேஸர்!
சமீபத்தில்தான் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பையைக் கைப்பற்றி, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். இப்போது கார் பந்தயத்திலும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் ஒரு பெண். ஆம்; சர்வதேச கார் பந்தயத்தில் ஃபெராரி காரை ஓட்டப்போகும் முதல் இந்தியப் பெண் ரேஸர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார், டயானா பண்டோல். ஆம்; இந்தியாவின் முதன்மையான பெண் கார் ரேஸர் இவர்தான்.
 நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஃபார்முலா ஒன் டிராக்குகளில் நடக்கப்போகிற ‘ஃபெராரி சேலஞ்ச் மிடில் ஈஸ்ட்’ எனும் தொடர் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள தேர்வாகியிருக்கிறார் டயானா. இப்பந்தயத்தில் தேர்வு செய்யப்படுவதே பெரும் கௌரவம்; உலகளவிலான கார் பந்தய வீரர்கள், வீராங்கனைகளின் கனவும் கூட. இந்தப் பந்தயத்தில்தான் ‘ஃபெராரி 296 சேலஞ்ச்’ எனும் ஃபெராரி காரை ஓட்டப் போகிறார்.
 இதுவரைக்கும் டயானா ஓட்டிய கார்களிலிருந்து அதி நவீனமானது இந்த கார். மிக வேகமாகச் செல்லக்கூடியது. எந்தச் சூழலிலும் காரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எளிது.
இந்த ஃபெராரி சேலஞ்ச் பந்தயங்களில் உலகின் முக்கியமான கார் பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் கலந்துகொள்ளப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் மோதும் டயானா, துபாய், பக்ரைன், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தாரில் உள்ள நவீன கார் பந்தய டிராக்குகளில் ஃபெராரியை வேகமாக ஓட்டி, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கப்போகிறார்.
 “இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நாளாக கார் பந்தயங்களில் நான் செலுத்திய உழைப்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த கௌரவமாகப் பார்க்கிறேன். ஃபெராரி சேலஞ்ச் மிடில் ஈஸ்ட்டில் பங்கு பெறும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமைமிகு தருணம் எனக்கானது மட்டுமல்ல; மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டிருக்கும் அனைத்து இந்தியப் பெண்களுக்குமான தருணம் அது...” என்கிற டயானாவின் சாதனைப் பட்டியல்கள் நீள்கின்றன.
கடந்த 2024ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியன்று, மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டில் இந்தியன் நேஷனல் கார் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் வென்று இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் முதல் முறையாக தேசிய அளவில் நடந்த கார் பந்தயத்தில் ஆண்களுடன் போட்டியிட்டு வென்ற பெண் என்ற பெருமையைப் பெற்றார் டயானா.
முன்னாள் ஆசிரியை மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான டயானாவின் வெற்றி கார் பந்தயங்களில் கலந்துகொள்வதற்கான ஆர்வமும், உந்துதலும் உள்ள பெண்களுக்கு அளவற்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்கின்றனர்.
புனேவில் பிறந்து, வளர்ந்த டயானா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். டயானாவின் தந்தை கார் பந்தயங்களின் மீது பெருங் காதலைக் கொண்டவர். அவரது ஆர்வம்தான் டயானாவுக்கு கார் பந்தயங்கள் மீது காதல் உண்டாக முதற்காரணம். கடந்த 2018ம் வருடம் கார் பந்தய வீராங்கனையாகத் தனது பயணத்தை ஆரம்பித்தார், டயானா. அந்த வருடத்தில் திறமையான பெண் ரேஸர்களைக் கண்டுபிடிப்பதற்காக, ‘ஜேகே டயர்ஸ்’ நிறுவனம் கோயம்புத்தூரில் ‘வுமன் இன் மோட்டார்ஸ்போர்ட்’ என்ற நிகழ்வை நடத்தியது.
இதில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண் ரேஸர்கள் கலந்துகொண்டனர். இதில் டாப் 6 நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், டயானா. இதன் மூலம், ‘ஜேகே டயர் நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப்’பில் ஒரு வருடம் இலவசமாக கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடைத்தது. 2021ல் சென்னையில் நடந்த ‘போக்ஸ்வேகன் போலோ கப் சாம்பியன்ஷிப்’பில் கலந்துகொண்டார். அடுத்த இரண்டு வருடங்களில் ‘எம்ஆர்எஃப் சலூன் கார்ஸ் நேஷனல் சாம்பியன்ஷிப்’பில் பங்குபெற்றார்.
இந்தப் போட்டிகளில் எல்லாம் பெண்கள் கலந்துகொள்வது மிகவும் அரிதானது. 2024ல் தேசிய சாம்பியன்ஷிப்பைத் தன்வசமாக்கினார். கார் ரேஸில் இறங்கிய ஆறு வருடங்களிலேயே தேசிய அளவில் வென்றது, உலகளவில் கார் பந்தயங்களை நடத்துபவர்களின் கவனத்தை ஈர்த்தது.“ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் கார் பந்தயத்தில் ஒரு பெண்ணாக நிலைத்து நிற்க ஆண்களைவிட இரண்டு மடங்கு உழைப்பைப் போட வேண்டியிருக்கிறது...” என்கிற டயானாவுக்கு ஆரம்ப காலங்களில் ஸ்பான்சர்ஷிப்பே கிடைக்கவில்லை.
டயானா கார் பந்தயங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்து, நான்கு வருடங்கள் கழித்த பிறகே ஸ்பான்சர்ஷிப்பை பெற்றார். 2022ல் பெங்களூரைச் சேர்ந்த ரேஸ் கார்களை வடிவமைக்கும் ஒரு நிறுவனம் டயானாவுக்கு ஸ்பான்சர் செய்தது.
2024ல் தேசிய அளவில் டயானா வெற்றி பெறவே, ஆண்களுக்கு இணையான ஸ்பான்சர்களும், ஆதரவுகளும் கிடைக்க ஆரம்பித்தன. இன்று ஃபெராரி கிளப் சேலஞ்ச் மிடில் ஈஸ்ட் போட்டியில் கலந்துகொள்வது டயானாவின் ரேஸிங் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாகவும், மைல் கல்லாகவும் இருக்கும். தவிர, சர்வதேச வீரர்கள், வீராங்கனைகளுடன் போட்டியிட்டு உலக அளவில் தனது ரேஸிங் திறமையைக் காட்டுவதற்காக ஒரு வாய்ப்பாகவும் இந்தப் போட்டி அமையும். மட்டுமல்ல, சர்வதேச நிறுவனங்களின் ஸ்பான்சர்களும் டயானாவுக்குக் கிடைக்கலாம். அப்படி கிடைத்தால் உலகின் நம்பர் ஒன் பெண் கார் ரேஸராக டயானா மாறும் நாள் தொலைவில் இல்லை.
த.சக்திவேல்
|