அந்தப் பத்திரிகையாளர் என்னை Body Shaming செய்தது தப்பு!
பெண்கள் என்றாலே இப்படி இப்படித்தான் உடை உடுத்த வேண்டும், சத்தமாக சிரிக்கக் கூடாது, குறிப்பிட்ட நேரத்தில் வெளியே செல்லக்கூடாது... என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதே மனநிலையில் ஒரு நடிகை என்றால் இந்த எடையில் இருக்க வேண்டும்... இந்த அளவுகளில் அவர் உடல் இருக்க வேண்டும்... அதை மீறிப் போனால் அக்கா, தங்கை, அண்ணி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற சூழல் இன்னமும் மாறாமல் இருக்கிறது.
 இதே மனநிலையில் ‘உங்கள் எடை எவ்வளவு’ எனக் கேள்வி கேட்க அதிரடி பதில்களால் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் கௌரி கிஷான். அவர் நடித்த ‘அதர்ஸ்’ திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில்தான், தன்னை பாடி ஷேமிங் செய்த பத்திரிகையாளரை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
 முதல்முறையாக மருத்துவர் கதாபாத்திரம்?
உண்மைதான். இதுதான் ஒரு கரியர் அடிப்படையிலான ஒரு ப்ரொஃபஷனல் கேரக்டர். எனக்கும் கதைக்குள் அதீத முக்கியத்துவம் உண்டு. அம்மாவுக்கு என்னை டாக்டராக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா, என்னால முடியலை. பட், ‘அதர்ஸ்’ல டாக்டரா நடிச்சுட்டேன். அம்மா இப்ப ஹேப்பினு நினைக்கறேன்! கேரக்டராகவே கதைக்குள் நிறைய மெடிக்கல் வார்த்தைகள் பேச வேண்டி இருந்தது. அதையெல்லாம் புரிகிற மாதிரி இயக்குநர் அபின் ஹரிஹரன் சொல்லிக் கொடுத்தார். நாயகனா ஆதித்யா மாதவன். அவருக்கு இதுதான் முதல் படம். ஆனா, அப்படித் தெரியாது. அந்தளவுக்கு மெச்சூர்டா எதார்த்தமா நடிச்சிருக்கார்.  கதாபாத்திரங்கள் தேர்வில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கிறீங்களா?
அப்படீன்னு இல்ல. ஆனா, கொஞ்சம் எனக்கு செட்டாகற மாதிரி கதைகள் தேர்வு செய்வதுண்டு. தமிழ், மலையாளம், தெலுங்குனு மூணு மொழிகளிலும் நடிச்சிட்டு இருக்கேன். இங்க ஒரு சின்ன பிரேக் எடுக்கிறேன்னா இன்னொரு மொழியில் நடிச்சுட்டு இருக்கேன்னு அர்த்தம். ஆனாலும் கேரக்டர் சாய்சில் ஃபில்டர் போடுவதுண்டு. இப்ப இருக்கற நேரத்தை விட இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கிடைச்சா, நடிப்பில் இன்னும் அட்வான்ஸ் மெத்தடு கத்துக்குவேன். எக்ஸ்பிரஷன் பயிற்சி எடுத்துக்கலாம். நேரம் பத்தலை. ஒரு சில நடிகர்கள் மூன்று மாதம் பிரேக் எடுத்துக்கிட்டு முழுமையான பாடி ட்ரான்ஸ்பார்ம் ஆகி வருவாங்க. அப்படி எல்லாம் செய்யணும்னு ஆசை இருக்கு.  ‘96’ படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவு... இந்தப் பயணம் எப்படி இருக்கு?
தமிழக மக்கள் எனக்கு வரவேற்பு கொடுத்து, ஏத்துக்கிட்டு என்னை நல்ல நிலையில் வெச்சிருக்காங்க. ரொம்ப நன்றி. நேத்து வெளியானது மாதிரி இருக்கு. ஆனா, 7 வருடங்கள் ஆகிடுச்சு. விஜய் சேதுபதி சார், த்ரிஷா மேடம் எல்லாருக்குமே நன்றி.
நேர்மறை அனுபவங்கள், எதிர்மறை அனுபவங்கள்னு நிறைய இருக்கு. ஆனா, எல்லாத்தையும் பாடமா கத்துகிட்டு என்னை நானே வடிவமைச்சுக்கறேன். நல்ல விமர்சனங்களை அது எதிர்மறையாக இருந்தாலும் சரி கரியர் அட்வைஸாதான் பார்க்கறேன். ஒரு கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு மாறி வருகிறது... இதை எப்படி பார்க்கிறீர்கள் ?
அதற்கு காரணம் அழகு, ஜீரோ ஸ்ட்ரக்சர் இவற்றைத் தாண்டி திறமை கொண்டு ஜெயித்த எனக்கு முன்னோடியான பல சீனியர்ஸ்தான். மலையாளத்தில்தான் இந்த மாற்றம் முதல்ல ஆரம்பிச்சது. தொடர்ந்து தமிழிலும் நடிச்ச நடிகைகளுக்கு தேசிய விருது கூட கிடைக்க ஆரம்பிச்சிருக்கு.ஒரு கதாபாத்திரத்துல நடிக்க நல்ல திறமை இருந்தால் போதும். பியூட்டி ஸ்டாண்டர்ட் அவசியமில்லை என்கிற நிலை வந்திருக்கு. சந்தோஷமான விஷயம் இது.
எல்லோராலும் ஜீரோ ஸ்ட்ரக்சர், பியூட்டி சைஸ்... எல்லாம் கொண்டு வர முடியாது. அதற்குப் பின்னாடி நிறைய உழைப்பு இருக்கு. உடல் ஒத்துழைக்கணும், கொஞ்சம் ஹார்மோன் பிரச்னை இருந்தா கூட உடல் எடை சுலபமா குறையாது. அப்படியே குறைஞ்சா கூட அதை பராமரிக்க மனதளவில் நாம தயாரா இருக்கணும்.
நடிகர்களாக இருக்க வேண்டுமென்றால் சமூக வலைத்தளத்தில் இருக்க வேண்டும் என்பது ஒரு கடமையாகவே இருக்கிறதே?
அதை வெறும் கடமையாக பார்க்கறதால நானும் என்னுடைய கரியருக்கான இன்னொரு கருவியாகத்தான் சோஷியல் மீடியாவை பார்க்கறேன். சமூக வலைத்தளம் என்னுடைய படங்களைப் பற்றி பொதுவெளியில் சொல்கிற ஒரு மீடியம்.
அவ்வளவுதான். அதற்கு அடிமையா இருக்க விருப்பமில்லை.அதனால் எனக்கு அவ்வளவு அழுத்தமில்லை. ஆனா, இன்றைக்கு எந்த அளவுக்கு படப்பிடிப்பு முக்கியமோ அதே அளவுக்கு ப்ரமோஷன் முக்கியமா இருக்கு. வாரம் வாரம் படங்கள்... எல்லாரும் தங்கள் படங்களை மக்கள்கிட்ட சேர்க்க இந்த மீடியம் உதவியா இருக்கு. தேவையில்லாத கேள்விகள்... ?
நான் ஒரு ஜர்னலிஸ்ட் ஸ்டூடண்ட். குறைந்தபட்சம் எந்தக் கேள்விக்கு பதிலளிக்கணும், எதற்கு அமைதியா இருக்கணும் என்கிற புரிதல் இருக்கு. ஒரு நடிகை என்றாலே அவங்ககிட்ட என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், அதற்கு அவங்க பதில் சொல்லணும் என்கிற நிலை இருக்கு. நான் எல்லா ஜர்னலிஸ்ட்களையும் சொல்ல மாட்டேன். ஒரு சிலர், ஓரிரு நபர்கள்... இப்படி கேள்வி கேட்பதை பொழுதுபோக்கா கருதறாங்க.
என்னுடைய எடை பற்றி அந்தப் பத்திரிகையாளர் ஹீரோ கிட்ட கேட்டபோது, அந்த மொமெண்ட் ஷாக்ல இருந்தேன். அந்தக் கேள்வி எனக்குள்ள பதிவாகி, நான் ரியாக்ட் செய்யறதுக்குள்ள அந்த மொமெண்ட் கடந்து போயிடுச்சு.
பொதுவா எல்லாருமே ஒரு சில கேள்விகளை தவிர்ப்போம். அதுக்குக் காரணம் பயம் கிடையாது இல்லையா? அப்படித்தான் நானும். ‘அதர்ஸ்’ பட ரிலீஸை எந்த வகையிலும் அது பாதிக்கக் கூடாது என்கிற புரிதல் எனக்கு உண்டு.
எதிர்த்து கேள்வி கேட்கலை என்கிறதுக்காக எதை வேண்டுமானாலும் கேட்கலாம்னு அர்த்தம் கிடையாது. பத்திரிகையாளர்கள் மேல எனக்கு அதீத மரியாதை உண்டு. ஒருவேளை நான் நடிகையாகலைனா நிச்சயம் பத்திரிகையாளராதான் மாறியிருப்பேன்.
இந்த ஆற்றாமைதான் அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அங்கிருந்த ஜர்னலிஸ்ட்கிட்ட பகிர்ந்துகிட்டேன். அப்பவும் முந்தைய சந்திப்புல என்னை பாடி ஷேமிங் செய்த பத்திரிகையாளர், தன் தவறை உணராமயே பேசினார். ரொம்ப வருத்தமா இருக்கு. நிச்சயமா இது ஜர்னலிஸ்டுக்கான இலக்கணமே கிடையாது.
ஒரு படம் தொடர்பான சந்திப்பில் அந்த சினிமா குறித்துதானே கேட்கணும்? எதுக்குத் தேவையில்லாத கேள்விகள். நான் என்ன எடையில் இருக்கணும் என்பது என் சாய்ஸ். என்னை ஒப்பந்தம் செய்யும் இயக்குநரின் சாய்ஸ். அப்படியிருக்க தேர்ட் பர்சன் இந்த விஷயத்துல நுழைவது அத்துமீறல்.
என்னுடைய எடை என்னனு கேட்ட அந்தப் பத்திரிகையாளர், இதே கேள்வியை ஒரு நடிகரைப் பார்த்து கேட்பாரா? கேட்கத்தான் முடியுமா? நடிகைனா வெறும் உடல் எடை மட்டும்தானா? சம்பந்தப்பட்ட அந்த ஜர்னலிஸ்ட் யோசிப்பார்னு நம்பறேன்!
ஷாலினி நியூட்டன்
|