டிரம்ப்பின் உள்ளே வெளியே மங்காத்தா!



அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற தில் இருந்தே உலகம் முழுவதும் ஒருவித பதற்றம் இருந்து வருகிறது. வரிப்போரை நிகழ்த்தி வருகிறார். சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். விசா நடைமுறைகளைக் கடுமையாக்கினார். இப்போது டிரம்ப் நிர்வாகத்தின் புதிய குடியேற்ற விதிகள் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. 

இந்தப் புதிய விதிகள் உடல் பருமன், நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாள்பட்ட உடல்நலப் பிரச்னைகள் உள்ள வெளிநாட்டினருக்கு விசா மற்றும் கிரீன் கார்டுகளை வழங்க வேண்டாம் என்கிறது. அத்துடன் இந்தப் புதிய வழிகாட்டுதல்களை அமெரிக்க வெளியுறவுத் துறை உலகெங்கிலும் உள்ள தனது தூதரகங்கள் மற்றும் தூதரக அலுவலகங்களுக்கு உடனே அமல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.  

குறிப்பாக இந்த புதிய வழிகாட்டுதல் நடவடிக்கை, ‘பொதுக் கட்டண’ விதியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் சர்வதேச மாணவர்கள் மற்றும் குடியேற்ற நல ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுக் கட்டண விதி என்பது 1882ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் குடியேற்ற சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், இது 1999ம் ஆண்டு வரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

1999ம் ஆண்டுதான் இடைக்கால கள வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. இதன்படி முதலில் பொதுக் கட்டணம் என்பது வாழ்வாதாரத்திற்காக அரசாங்கத்தை முதன்மையாகச் சார்ந்திருப்பவரை வரையறுக்கிறது. அதாவது, வருமானத்திற்காக அரசின் பொது பண உதவியைப் பெறுபவர் அல்லது நீண்டகால பராமரிப்பிற்காக அரசின் செலவில் இருப்பவர் என்கிறது. 

இதில், ‘பொதுக் கட்டண விதி’ என்பது பொது உதவியைச் சார்ந்திருக்கக்கூடிய அந்தத் தனிநபர்களை நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்டது. அதாவது ஒரு வெளிநாட்டவர் வாழ்வாதாரத்திற்காக அரசாங்கத்தை முதன்மையாக சார்ந்திருக்கிறார் எனக் கருதப்பட்டால் அவர் அமெரிக்காவில் குடியேறவோ அல்லது தங்கியிருக்கவோ தகுதியற்றவர் எனத் தீர்மானிக்கும் விதி இது. 

கடந்த முறை டிரம்ப் ஆட்சியில் இருந்தபோது 2019ம்  ஆண்டு கிரீன் கார்டுகள் மற்றும் பிற விசாக்களுக்கு தகுதியுடையவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்தப் பொதுக் கட்டண விதி மேலும் விரிவுபடுத்தப்பட்டது.அதாவது அவர்கள் அரசாங்க சலுகைகளைச் சார்ந்திருக்க வேண்டியதன் காரணத்தை மறுவரையறை செய்தது. 

இதன்பிறகு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வந்ததும் 2021ம்ஆண்டு இந்த புதிய விரிவுபடுத்தப்பட்ட விதிதிரும்பப் பெறப்பட்டது. 1999ம் ஆண்டு கள வழிகாட்டுதல்களைப் பின்பற்றியது. தற்போது டிரம்ப் அரசாங்கம் மீண்டும் இந்த விதியில் புதிய உத்தரவைப் போட்டுள்ளது. இதன்படி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இருக்கும் நாள்பட்ட நோய்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது. 

அதாவது சுற்றுலா விசா(பி-1/பி-2), மாணவர் விசா (எஃப்-1), வணிக விசா பெற்று அமெரிக்காவில் நுழையும் வெளிநாட்டினர் உடல்நிலையைக் காரணம் காட்டி அமெரிக்காவில் நீண்டகாலம் தங்குகின்றனர். இதன்வழியே அமெரிக்க அரசின் சுகாதார திட்டப் பலன்களைப் பெறுகின்றனர்.

 இதனால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதைத் தடுக்க நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு விசா வழங்க வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.இதன்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டினருக்கு வாழ்நாள் முழுவதும் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுமா என்பதை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படும் பட்டியலில் இதயநோய்கள், ஆஸ்துமா, புற்றுநோய்கள், நீரிழிவு நோய், உடல் பருமன், நரம்பியல் நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் மனநல பாதிப்புகள் ஆகியவை உள்ளன. இதில் உடல் பருமன் என்பதை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காரணம், இதனால் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை அதிக செலவு வைக்கக்கூடிய நோய்களாக ஏற்பட வாய்ப்புள்ளது என்பதுதான். 

முந்தைய நடைமுறைகளின்படி காசநோய், எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது விசா விண்ணப்பதாரர்களிடம் இந்நோய்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆகும் என எதிர்பார்க்கப்படும் மருத்துவ செலவுகளை அரசிடம் இருந்து எந்தவிதமான நிதியுதவியும் நாடாமல், அரசு செலவில் நீண்டகாலம் தங்காமல் தாங்களே பார்த்துக் கொள்ளமுடியுமா என்பதையும் விசா  அதிகாரிகள் விண்ணப்பதாரர்களிடம் உறுதிசெய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகின்றனர். ஏற்கனவே எச்1பி விசா கட்டணத்தை சமீபத்தில் அமெரிக்க அரசு அதிகரித்தது. தற்போது இந்த நடவடிக்கை இன்னும் அவர்களைப் பாதிக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள். 

அதுமட்டுமில்லாமல் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் இந்தியா உளிட்ட பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் இந்தப் புதிய உத்தரவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இன்று மாணவர்களிடையேயும் உடல் பருமன் என்பதும், இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவையும் அதிகளவு காணப்படுகின்றன. இதனால், இதுகுறித்து பல்கலைக்கழகங்களும், குடியேற்ற நல ஆர்வலர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.மொத்தத்தில் மீண்டும் ஒருவித குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது டிரம்ப் அரசு.

ஹரிகுகன்