பைசன் ல வீடு, கிராமம், மைதானம், ஜப்பான் மேட்ச் எல்லாமே செட்தான்!



சினிமாவில் ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர் என பல டெக்னீஷியன்களின் வேலைகளுக்கு நேரடியாக பாராட்டு கிடைத்துவிடும். ஆனால், ஆர்ட் டைரக்டர்கள் பெரிதாகப் பேசப்படுவதில்லை. இத்தனைக்கும் படம் முழுவதும் ஃபிரேம் பை ஃபிரேம் வேலை செய்வதில் ஆர்ட் டைரக்டருக்கு முக்கிய பங்கு உண்டு. 
அப்படி ஆர்ட் டைரக்டரின் பங்களிப்பை பார்வையாளர்கள் ரசித்த, ரசிக்க மறந்த படங்கள் ஏராளமாக உண்டு. அந்த வகையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படத்தில் ஆர்ட் டைரக்டரின் பங்களிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெருமைக்குரியவர் ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன்.

கலை இயக்குநராக உங்கள் பயணம் எப்படி ஆரம்பமானது?

சொந்த ஊர் சென்னை. ஸ்கூல் படிக்கும்போது ஓவியத்தில் ஆர்வம். பிரபல ஓவியக் கலைஞர்கள் ஜே.பி.கிருஷ்ணா, இளஞ்செழியன் ஆகியோரிடம் சுவர் விளம்பரம், கட்
அவுட் விளம்பரம், சினிமா பேனர்... என ஓவியம் பழகுவதில்தான் என்னுடைய கலை வாழ்க்கை ஆரம்பமாச்சு.ஃபிளக்ஸ் பேனர்கள் வந்த பிறகு அந்தத் தொழில் நலிவடைய ஆரம்பிச்சது. அப்போது சினிமா பக்கம் கவனம் திரும்புச்சு. தோட்டா தரணி சார், ராஜீவன் சார் படங்களில் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 

ஒரு கட்டத்தில் ராஜீவன் சாரிடம் உதவியாளராக வேலை சேர்ந்தேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘தங்கமீன்கள்’ உட்பட ஏராளமான படங்களில் வேலை செய்தேன். ராஜீவன் சார்தான் என் சினிமா குருநாதர்.இயக்குநர் ராம் சார் ‘தரமணி’யில் முதல் வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து ‘மேயாதமான்‘, ‘பேரன்பு’, ‘மாமன்னன்’, ‘வாழை‘, ‘பறந்து போ’ உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்கள், ‘குயின்’, ‘வாட்ஸ் அப் வேலைக்காரி’ வெப் சீரிஸ் என பயணம் தொடர்கிறது.

‘பைசன்’ வாழ்வியல் சார்ந்த கதை. ஆர்ட் டைரக்டராக உங்கள் அனுபவம் எப்படி?

இயக்குநர் ராம் சாரிடம் வேலை செய்யும்போது இயக்குநர் மாரிசெல்வராஜ் நட்பு கிடைத்தது. ‘மாமன்னன்’, ‘வாழை’யை தொடர்ந்து இது அவருடன் மூணாவது படம். 
‘பைசன்’ நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதனையாளர் ஒருவரைப் பற்றிய கதை. வரலாற்றை படமாக்கும்போது கவனமாக பண்ண வேண்டும். அதாவது கதை நடக்கும் காலகட்டத்துக்கு ஏற்ப வேலை செய்ய வேண்டும். 
ஆரம்பத்தில் மணத்தி கணேசன் சாருடைய சொந்த ஊரில் படமாக்க நினைத்தோம். ஆனால், கடந்த மழை வெள்ளத்தில் அவர் சார்ந்த நிலப் பகுதி பெரும் சேதமடைந்ததால் காலியிடத்தை தேர்வு செய்தோம். அங்கு பதினெட்டுக்கும் மேற்பட்ட வீடு செட் போட்டு மினி வில்லேஜ் கிரியேட் பண்ணினோம். 

துருவ் விக்ரம் வீடு நிஜம் பாதி, செட் பாதி என உருவாக்கினோம். கபடி மேட்ச்சை பொறுத்தவரை பல இடங்களில் போட்டிகள் நடப்பதுபோல் காட்டியிருப்பார்கள். ஆனால், அது அனைத்தும் ஒரே விளையாட்டு மைதானம். கிராமம், நகரம், மாநகரம் என போட்டிகளின் தன்மைக்கு ஏற்ப பின்புலத்தை மாற்றினோம். அது நல்ல அனுபவம்.

எந்த மாதிரி படங்கள் ஆர்ட் டைரக்டருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்?

ஒவ்வொரு கதையும் அதற்கான வேலையை கேட்கும். ‘மாமன்னன்’ பீரியட் படமாக இருந்தாலும் அது கொஞ்சம் எளிதாக இருந்துச்சு. வடிவேலு சார் வீடு, பன்றி தொழுவம் என கிரியேட் பண்ணினோம். சில படங்களுக்கு வெளிப்புறத்தில் செட் போட்டிருப்போம். மழை, புயல் என சீற்றங்கள் வரும்போது பாதிப்படையும். அதை மீண்டும் சரி செய்வதற்குள் ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் நெருக்கடியை ஏற்படுத்தும். அதுக்காகவே இரவு, பகல் என இருபத்தி நான்கு மணி நேரம் வேலை செய்வோம். 

‘வாழை’யில் சிவானந்தன் கதாபாத்திரத்தில் நடித்த பொன்வேல் வீடு உள்ள கிராமத்தை வாழைத் தோப்பு அருகில் கிரியேட் பண்ணினோம்.இதுமாதிரி வாழ்வியலைச் சொல்லும் கதைகளில் அந்த ஊருக்கு அருகில் செட் அமைக்கும்போது ஆர்ட் டைரக்டரின் ஒர்க் தெரியாமல் போய்விடுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். உண்மையில் அந்த மாதிரி லொகேஷன் கிடைப்பது அரிது. ஏனெனில், அப்படி கிடைத்தால் ஆர்ட் டைரக்டர் ஸ்கோர் பண்ணலாம். 

‘பைசன்’ படத்தில் ஆர்ட் டைரக்டராக நிறைய வேலை செய்திருந்தேன். ஆனால், விமர்சனங்களில் ஆர்ட் டைரக்டர்பற்றி சொல்வதில்லை. பிரபல வார இதழில் ரேடியோ, டிவியை சரியாகப் பயன்படுத்தி பீரியட் ஃபிலிம்மாக பண்ணியிருக்கிறார் என்று எழுதினார்கள். ஆனால் ‘பைசன்’ படத்தில் கிராமம், மைதானம் என அனைத்தும் செட் ஒர்க். 

சொல்லப்போனால் ஃபைனல் மேட்ச் ஜப்பானில் நடைபெறுவதாக காட்டியிருப்பார்கள். அது தாம்பரம் பக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் செட் போட்டு எடுத்தோம். 

ஆர்ட் டைரக்டராக எங்கள் வேலை துருத்திக்கொண்டு இருக்கக்கூடாது. அதனால் பல நேரங்களில் எங்கள் வேலை தெரியாமல் போவதும் உண்டு. இன்னொரு பக்கம் எங்கள் வேலையை கண்டுபிடிக்காமல் போவதும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

இயக்குநரின் பார்வையை கலை வடிவமாக மாற்றும் பிராசஸ் எப்படி நடக்கிறது?

கதையை உள்வாங்குவது முக்கியம். கதாபாத்திரத்தின் தன்மை, வண்ணம், வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். ‘வாழை’ படத்தில் ஒரு கட்டில் காட்டியிருந்தோம். அதில் ஒரு கால் இருக்காது. அதற்கு செங்கல் சப்போர்ட் கொடுத்திருப்பார்கள். 

அந்த ஒரு ஷாட் அவ்வீட்டின் வறுமையைச் சொல்லிவிடும். அதுமாதிரி அந்த வீட்டில் இருப்பவர்களின் வேலை, வருமானம் என எல்லாத்தையும் கவனித்து ஆர்ட் டைரக்டரும் ஒரு கேரக்டராக மாறணும். 

அப்படி செய்யும்போது தனித்துவமாக வேலை செய்ய முடியும். அப்படி டைரக்டர் விஷனுக்கு போகணும் என்றால் அவராகவே மாறணும். அவருடன் டிஸ்கஷன் பண்ணணும். ‘மாமன்னன்’ படத்தில் நாட்டார் தெய்வ சிலையை காட்டியிருந்தோம்.

அது வரலாற்று நூலின் தரவுப்படி வடிவமைத்தது. எழுத்தில் சொல்லப்பட்ட தகவலை உருவமாக மாற்றணும். அது என்னுடைய வாசிப்பு அனுபவத்திலிருந்து இயக்குநரிடம் சொன்னேன். அது அவருக்கு பிடிச்சிருந்துச்சு. அப்படி ஆர்ட் டைரக்டர் தகவல் சேகரித்து வைத்திருக்கணும். இல்லையென்றால் இயக்குநரின் விஷனுக்கு வேலை செய்ய வேண்டும்.

ஒரு கலை இயக்குநர் என்ற வகையில் ‘அழகு’ என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அழகாக செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. டைரக்டர் நேர்த்தியாக கதை சொல்லும்போது ஆர்ட் டைரக்டர் ‘அழகு பண்றேன் பார்’ன்னு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பக்கூடாது. வண்ணம், பின்புலம் என ஆடியன்ஸை தொந்தரவு பண்ணாமல் இருப்பதுதான் அழகு.  தற்போதைய ஏஐ தொழில்நுட்பம் கலை இயக்குநர்களிடையே என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

ஏஐ சினிமாவின் முக்கியமான பகுதி. முன்கூட்டியே காட்சிகளை பார்க்க உதவுகிறது. ஃபோட்டோ ஷாப், ஸ்கெட்ச் ஒர்க், 3 டி ஒர்க் என பல கட்டங்களில் ஒர்க் செய்வதை சுருக்கி உடனுக்குடன் ஏஐ செய்து காட்டுகிறது.

ஏஐ வந்துவிட்டதால் ஆர்ட் டைரக்டர் வேலை குறையுமா என்றால் இல்லை என்பதுதான் பதில். இயக்குநர், கேமராமேன் என பலர் ஏஐ யூஸ் பண்ணினாலும் கிரியேட்டிவிட்டி முக்கியம். இல்லையென்றால் ஏடாகூடமான ரிசல்ட் கொடுக்கும். அதனால் ஏஐ-யிடம் ஒரு நாய்க்குட்டி போல் செல்லம் கொஞ்சி பழகினால் நல்ல ரிசல்ட் உண்டு.

எஸ்.ராஜா