பெரிய நடிகர்களின் புதிய படங்கள் இல்லாததே காரணம்?
பழைய சினிமாக்கள் ரீ-ரிலீஸ்
தமிழ்நாட்டில் சுமார் 1168 திரையரங்குகள் இருக்கின்றன. இவை வருடம் முழுக்க திறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள், சில நேரங்களில் பத்து படங்கள் கூட வெளியாகின்றன. ஆனால், அவை வெளியாகிற நாளில் அரங்கம் நிறையவேண்டும் என்றுகூட யாரும் எதிர்பார்ப்பதில்லை. சுமார் இருபது முதல் முப்பது பேர் வந்தால் படம் போடலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படியிருந்தும் அவ்வளவு பேர் கூட வராமல் காட்சிகள் ரத்தாகும் அவலம்தான் நடந்துகொண்டிருக்கிறது.  இதனால் திரையரங்குகளுக்குக் கூட்டம் வரவைக்க என்னென்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஹாலிவுட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ரீ-ரிலீஸ் எனும் பழைய படங்களின் மறு வெளியீட்டை தமிழிலும் அறிமுகப்படுத்தினார்கள்.
சிவாஜி, எம்ஜிஆர் படங்கள் முதலில் மறுவெளியீடு செய்யப்பட்டன. அவற்றிற்கு குறிப்பிட்ட அளவு வரவேற்பு கிடைத்தது. அதன்பின், பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்களின் படங்களை மறு வெளியீடு செய்யத் தொடங்கினார்கள்.
தனுஷின் ‘3’ படம் உட்பட சில படங்களை எவ்வித விளம்பரமும் செய்யாமல் திரையரங்குகளில் திரையிட்டனர். அதற்கு அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.
அதன்பின் வெளியான விஜய்யின் ‘கில்லி’ லாபம் சம்பாதித்தது. அது ஒட்டுமொத்த திரையுலகையும் உசுப்பிவிட்டுவிட்டது.அதன்பின் மாதாமாதம் ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் மறு வெளியீடாக வரத் தொடங்கிவிட்டன.
விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, கமலின் ‘நாயகன்’ உட்பட பல படங்களை அவரவர் பிறந்த நாட்களையொட்டி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் ரீ-ரிலீஸான ‘நாயகன்’, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘ஆட்டோகிராஃப்’ போன்ற படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.இதில் இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கிறது. இது போன்ற மறுவெளியீட்டுப் படங்களுக்கான நுழைவுச்சீட்டுக் கட்டணத்தை சில திரையரங்குகள் பாதியாகக் குறைத்தன. அங்கெல்லாம் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் வசூல் கிடைத்தது என்கிறார்கள்.
இதிலிருந்து திரையரங்குகளில் கட்டணம் அதிகம் என்பதால் பலர் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு நிரூபணமாகியிருக்கிறது.மறுவெளியீட்டுப் படங்களில் திரையுலகுக்குக் கிடைத்திருக்கும் இந்த முக்கியமான பாடத்தை அனைவரும் கணக்கிலெடுத்துக் கொண்டால் எல்லாப் படங்களுக்கும் கூட்டம் வரும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
‘‘ரீ-ரிலீஸ் படங்களுக்கு வரவேற்பு நல்லாயிருக்கு. குறிப்பாக யூத் ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். ஏனெனில், அவர்கள் பிறப்பதற்கு முன் வந்த படம் அல்லது மிஸ் பண்ணிய படமாக இருப்பதால் அதைக் காண திரையரங்கம் வருகிறார்கள்.
அதனால் கல்ட், கிளாசிக் படங்களை மீண்டும் திரையில் எக்ஸ்பீரியன்ஸ் செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள்...’’ என்று சொல்லும் ‘கமலா’ திரையரங்க உரிமையாளரான கமல், ‘‘எங்கள் திரையரங்கத்தைப் பொறுத்தவரை ரீ-ரிலீஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரீ-ரிலீஸ் படங்கள் வரும்போது ரசிகர்கள் ஹிட் பாடல்களை ஒன்ஸ்மோர் கேட்கிறார்கள். இது எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது...’’ என்கிறார். இதை ஆமோதிக்கிறார் ‘உட்லண்ட்ஸ்’ தியேட்டர் உரிமையாளரான வெங்கடேஷ். ‘‘ரீ-ரிலீஸ் படங்கள் அதன் ஜானர் பொறுத்து வரவேற்பு பெறுகிறது. அதேநேரம், ஆக்ஷன், அட்வென்ச்சர் படங்கள்தான் ஓடுது. காதல் படங்கள் ஓடுவதில்லை. ‘பாகுபலி’ இரண்டு பாகங்களும் ஓடிய பிறகும் ‘பாகுபலி-எபிக்’ படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. லவ் படங்களை ரிப்பீட் பண்ணினால் ஓடாது. ரீ-ரிலீஸ் படங்கள் என்றில்லை. தியேட்டர்காரர்களுக்கு நல்ல படங்கள் வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் திரையரங்கம் நோக்கி வருவார்கள்.
அந்தக் காலத்தில் அப்படி பல படங்கள் வந்துள்ளன. 1969ல் கிரிகரி பெக் நடித்த ‘மெக்கனாஸ் கோல்ட்’ படம் தேவி தியேட்டரில் வெளியானது. ஒவ்வொரு வருடமும் அந்தப் படத்தை ரிப்பீட் செய்தார்கள். அப்படி இருபது வருடங்கள் தொடர்ந்து ரிப்பீட் செய்தார்கள். சமீபத்தில் வெளியான ‘ஆட்டோகிராஃப்’ கன்டென்ட் உள்ள படம். அதுவும் பேசப்பட்டது...’’ என்கிறார் வெங்கடேஷ்.
‘‘ரீ-ரிலீஸ் ஏன் செய்கிறார்கள் என்றால் புதிய படங்கள் இல்லாததே காரணம்...’’ என்கிறார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம்.
‘‘தமிழ்நாட்டில் 1168 திரையரங்குகள் உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு கன்டென்ட் வேண்டும். சமீப காலமாக பான் இந்தியா என்று சொல்லக்கூடிய மற்ற மொழி படங்கள்தான் ஓடுகிறது.
இந்த வருடத்தில் ஜூன், ஜூலை ஆரம்பிச்சு கடந்த ஆறு மாதங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. காரணம், ஓடிடி பிசினஸ் இல்லை. ஓடிடியை நம்பி நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டார்கள். அந்த பிசினஸ் நடக்காததால் சேட்டிலைட் பிசினஸ் சுத்தமாக இல்லை.
அதனால் தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பக்கத்திலிருந்தும் பணம் வருவதில்லை. படம் ரெடி பண்ணி வைத்துவிட்டார்கள். பணம் இல்லை என்பதால் ரிலீஸ் பண்ணாமல் பெண்டிங் வைத்துள்ளார்கள். தியேட்டர்காரர்களின் நிலைமையைப் பொறுத்தவரை ரீ-ரிலீஸ் படமா, புதிய படமா என்று பார்ப்பதில்லை. தியேட்டர் பராமரிப்பு காரணங்களுக்காக திரையிடுகிறார்கள். ஆனால், எல்லா ரீ-ரிலீஸும் ஒர்க் அவுட் ஆவதில்லை...’’ என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
‘‘ரீ-ரிலீஸ் படம் என்றால் அது கிளாசிக்கல் படமாக அல்லது பேசப்பட்ட படமாக இருந்தால் அதற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்...’’ என்கிறார் தயாரிப்பாளரான முக்தா சுந்தர்.
‘‘ஏனெனில், அப்போது அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருந்திருப்பார்கள். சில வெற்றி பெற்ற படங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள் அல்லது தொலைக்காட்சியில் பார்த்திருப்பார்கள். அதனால் ரீ-ரிலீஸ் படங்கள் இப்போதுள்ள ஜெனரேஷனுக்கு படம் பார்க்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.
சமீபத்தில் ‘நாயகன்’ படம் வெளியிடும்போது சிலர் ‘அப்போது எனக்கு பத்து வயது. இப்போது படம் பார்க்க ஆர்வமாக இருந்தது’ என்றார்கள். ரீ-ரிலீஸ் படங்களில் வருமானம் முதல் முறை போல் இல்லையென்றாலும், குறைந்தபட்ச லாபம் உண்டு.அப்போது ‘நாயகன்’ சுமார் 5 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 40 தியேட்டர்களில் வெளியானது.
இப்போது அமெரிக்கா, ஐரோப்பா உட்பட 200க்கு மேற்பட்ட தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், உலகளவில் ‘டாப் 100’ பட வரிசையில் ‘நாயகன்‘ உள்ளது. அந்தவகையில் ரீ-ரிலீஸ் பண்ணுவதற்கு தமிழில் பல படங்கள் உள்ளன...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் முக்தா சுந்தர்.
‘‘எனது ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம், 21 வருஷத்துக்குப் பிறகு ரீ-ரிலீஸ் என்ற செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கிறது...’’ என்கிறார் இயக்குநர் சேரன்.‘‘நான் எப்போதும் வியாபார நோக்கில் படம் எடுப்பதில்லை.
அப்படி எடுத்திருந்தால் ஐந்து ஹீரோவை வெச்சு பெரிய ஹிட் கொடுத்து ஐந்து வருஷத்துல காணாமல் போயிருப்பேன். இன்னும் என் படங்கள் தமிழ் நாட்டில் யாரோ ஒருவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் படைப்புகளாக இருக்கிறது. அப்படி துவண்டுபோய் உள்ள ஒருவரை என் படங்கள் கரை சேர்க்கிறது என்றால் அதையே பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்.
எந்தத் தோல்வியாக இருந்தாலும் கடந்துபோகும் மனநிலை வேண்டும் என்பதுதான் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் மையம். அப்பொழுது மட்டுமல்ல... இப்பொழுதும் பொருந்தக்கூடிய சப்ஜெக்ட் இது.
அப்படியிருக்கும் படங்கள் எப்பொழுது ரீ-ரிலீஸானாலும் ஓடும்.அதேநேரம் ரீ-ரிலீஸ் என்பது பெரிய சாதனை இல்லை. இதை தெளிவாக புரிந்துவைத்திருக்கிறேன். வருங்கால சந்ததிக்கு நல்ல கருத்துகளை விதைக்க இந்த மறுவெளியீடு என்பதும் ஒரு நல்ல உத்தி. இதைப் பயன்படுத்துவதில் தவறில்லை...’’ அழுத்தமாகச் சொல்கிறார் சேரன்.
எஸ்.ராஜா
|