அரியானாவில் 20 ஓட்டுகளை போட்ட பிரேசில் மாடல் இவர்தான்!



மத்தியில் ஆளும் பிஜேபியின் வாக்கு மோசடிகள் குறித்து அடிக்கடி பேசி வருகிறார், ராகுல் காந்தி. அப்படி சமீபத்தில் போலி வாக்குகள் குறித்து அவர் வைத்த  முக்கிய குற்றச்சாட்டு ஒன்று, இந்திய அரசியலில் பெரும் அதிர்வைக் கிளப்பியுள்ளது. 
அதாவது, கடந்த வருடம் நடந்த அரியானா சட்டமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கில் போலி வாக்குகள் பதிவாகின என்று குற்றம் சாட்டிய ராகுல், லாரிஸா நேரி என்ற பிரேசில் மாடலின் புகைப்படம் 22 வாக்காளர் அடையாள அட்டைகளில் இடம்பிடித்திருந்தது என்றும் அதிர்ச்சியளித்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பத்திரிகைச் செய்திகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் நியூஸ் சேனல்களின் தலைப்புச் செய்திகளில் லாரிஸா நேரியின் புகைப்படம் இடம்பிடித்தது. 
மட்டுமல்ல, அரியானா வாக்காளர் அடையாள அட்டையில் லாரிஸாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்த செய்திகளையும், அந்தப் போலி வாக்காளர் அட்டைகளையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, ஆயிரக்கணக்கானோர் லாரிஸாவை டேக் செய்த நிகழ்வும் அரங்கேறியது. 

‘‘ஆரம்பத்தில் எனக்கு முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து நிறைய மெசேஜ்கள் வந்தன. இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை. யாரோ பிராங்க் செய்கிறார்கள்; வேறு யாருக்கோ அனுப்ப வேண்டிய மெசேஜ்களைத் தவறுதலாக எனக்கு அனுப்புகின்றனர் என்று நினைத்தேன். பிறகு தொலைக்காட்சிகளில் என் புகைப்படம் இடம்பெற்றதை வீடியோவாக அனுப்பினார்கள். அதைக்கூட ஏஐ என்றுதான் நினைத்தேன். 

இதே மாதிரி ஆயிரக்கணக்கானோர் மெசேஜ் அனுப்ப, இது பிராங்க் இல்லை உண்மை என்று உணர்ந்தேன்...’’ என்கிற லாரிஸா ஒரு புகழ்பெற்ற சிகை அலங்கார நிபுணர். பிரேசிலில் உள்ள பெலோ ஹாரிசான்டே எனும் நகரில் வாழ்ந்து வருகிறார். இந்தியாவுக்கு அவர் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘கூகுள்’ தேடல் மூலமாகத்தான் இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டிருக்கிறார். 

மேத்யூஸ் ஃபெராரோ என்ற புகைப்படக் கலைஞர் லாரிஸாவைப் புகைப்படமெடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை லாரிஸாவின் ஒப்புதலுடன் ஃபேஸ்புக்கிலும், ஒரு புகைப்பட இணையதளத்திலும் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் கோடிக்கணக்கான பார்வைகளை அள்ளி வைரலானது. 

இப்புகைப்படத்தைத்தான் அரியானாவில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளில் சீனா, ஸ்வீட்டி, சரஸ்வதி என்று பல பெயர்களில் 22 முறை பயன்படுத்தியிருக்கின்றனர். அரியானாவின் வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்ற புகைப்படம் தன்னுடையதுதான் என்று உறுதிப்படுத்தியதோடு, அது இளம் வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என்றும் அறிவித்தார் லாரிஸா. 

இப்போது லாரிஸாவின் வயது 29. மட்டுமல்ல, தான் ஒரு சிகை அலங்கார நிபுணர்; மாடல் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது தனக்கு வயது 21 என்றும் உறுதிப்படுத்தியிருக்கிறார். லாரிஸாவின் வீட்டுக்கு அருகில் உள்ள ஓர் இடத்தில் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. 

தான் அழகாக இருப்பதால், புகைப்படம் எடுக்க கேட்கிறார் என்று மேத்யூஸுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் லாரிஸா. அது இப்படி அரியானாவின் வாக்காளர் அடையாள அட்டையில் இடம் பிடிக்கும் என்று அவர் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இதனால் லாரிஸாவும், மேத்யூஸும் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். 

‘‘உண்மையில் நான் பயந்துபோயிருக்கிறேன். இந்தியாவில் என் புகைப்படத்தை எந்த கட்சி பயன்படுத்தியிருக்கிறது என்பதுகூட  எனக்குத் தெரியாது. இந்தியாவிலிருந்து நிறைய பத்திரிகையாளர்கள் எனக்கு கால் செய்தனர். என்னால் காலையில் வேலைக்குக் கூட செல்ல முடியவில்லை. 

வாடிக்கையாளர்களின் மெசேஜைக் கூட திறந்து பார்த்து, பதில் சொல்ல முடியவில்லை. என் புரொஃபைலில் இருந்த நான் வேலை செய்யும் சலூன் பெயரைக் கூட நீக்கிவிட்டேன். இது சம்பந்தமாக என்னுடைய பாஸ் கூட பேசினார். இந்த நிகழ்வு தொழில்ரீதியாக என்னை மிகவும் பாதித்துள்ளது...’’ என்று கவலையுடன் தெரிவித்திருக்கிறார் லாரிஸா.

த.சக்திவேல்