இனி சென்னையில் வெள்ளம் வந்தாலும் வீடுகளுக்குள் நுழையாது!
கடலுக்கு மூடி போடமுடியுமா? வானத்தை மறைக்கமுடியுமா?
முடியும் என சாதித்துக் காட்டியிருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஹென்றி ராபின்ஸ்.ஆம். சென்னைவாசிகளுக்கு பருவகால மழை என்றாலே வெள்ளம் பற்றிய பயம்தான் தொற்றிக்கொள்ளும். ஆனால், அந்த அடாத வெள்ளத்தையே தடுப்பதற்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கும் இந்த இளைஞர் சென்னைவாசிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறார்.
 சில ஆண்டுகளுக்கு முன் ஹென்றி ஆரம்பித்த ‘கேட் த ஃப்ளட்’ எனும் ஒரு சிறு நிறுவனம்தான் இந்த செப்டம்பர் முதல் வீடுகளில் புகும் வெள்ளத்தை தடுப்பதற்கான கதவை சென்னையில் சுமார் 100 வீடுகளுக்காவது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தொடர்ச்சியாக சென்னைவாசிகளின் தொலைபேசி அழைப்புகளுக்கு இடையே அவரை சந்தித்தோம். ‘‘நானும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால்தான் இந்த முயற்சி...’’ சிரித்தபடி பேசத் தொடங்கினார் ஹென்றி.  ‘‘நான் சென்னைவாசி. பள்ளிக்கரணைதான் சொந்த ஊர். 2022ல பள்ளிக்கரணைல சொந்த வீடு கட்ட நிலம் வாங்கினேன். வாங்கும்போது இனிமேல் சென்னையில் 2015ல் ஏற்பட்ட மாதிரி வெள்ளம் எல்லாம் வராது என நிலம் விற்றவர்கள் சொன்னார்கள். அதை நம்பித்தான் கீழ்த் தளத்தையும், ஒரு மேல் தளத்தையும் அந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே கட்ட ஆர்மபித்தேன்.
ஆனால், அந்த ஆண்டு டிசம்பர் மாத மழைல, கட்டப்பட்ட வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதுதான் வெள்ள நீர் தடுப்பதற்கான முதல் எண்ணத்தை என்னில் விதைத்தது...’’ என்று சொல்லும் ஹென்றி அதையும் விவரித்தார்.
‘‘சென்னையில் என் படிப்புக்கு ஏற்ற வேலையில் இருந்தேன். பல சிறு கம்பெனிகளின் வியாபார நடைமுறைகளை அங்கே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தொழில்நுட்ப உற்பத்தியாளர்களின் தொடர்பும் எனக்குக் கிடைத்தது.
வெள்ளம் வீட்டுக்குள் புகுந்ததும் வீட்டுக்குள் வெள்ளம் வராமல் தடுப்பதற்காக ஸ்டெயின்லஸ் ஸ்டீலில் ஒரு தடுப்பு அணையை உருவாக்கி அதை வீட்டு வாசலில் பொருத்தியிருந்தேன். ஆனால், அது மிகவும் எடை அதிகமான பொருளாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அதை பொருத்துவதும், கழற்றுவதும் கடினமாக இருந்தது.
இந்நேரத்தில்தான் என் தொழில்நுட்ப நண்பர்களுடன் கூடி சென்னை வெள்ளத்தை வீட்டில் தடுப்பதற்கான இலகுவான ஒரு பொருள் குறித்து ஆலோசித்தோம். அத்துடன் சில பொருட்களை சோதனை முறையிலும் செய்து பார்த்தோம்...’’ என்ற ஹென்றி, பிறகு எப்படி தன் சொந்த கண்டுபிடிப்பை உருவாக்கினார் என்பதையும் விவரித்தார்.
‘‘வீட்டில் வெள்ளத்தைத் தடுப்பதற்கான கதவுகள் வெளிநாடுகளில் சாதாரணமாக காணப்படுகின்றன. மிகையில்லை. தீயை அணைக்க பயன்படுத்தும் தீயணைப்புக் கருவியிலிருந்து வீட்டு வெள்ளத் தடுப்பு கதவு வரை சர்வசாதாரணமாக வெளிநாடுகளில் உள்ள வீடுகளில் பார்க்கலாம்.
அதே மாதிரி சென்னையிலும் வெள்ளத்தை தடுப்பதற்கான சில வெளிநாட்டு கதவுகள் விற்பனைக்கு இருந்தன. ஆனால், அந்த இறக்குமதியான கதவுகளில் இரண்டு பிரச்னைகள் பெரிதாக இருந்தன.
ஒன்று அவை ஸ்டாண்டர்ட் சைசில் இருக்கும். மற்றது விலை அதிகம். ஸ்டாண்டர்ட் சைஸ் என்றால் நம் வீட்டு வாசல், கதவுகளை எல்லாம் பெயர்க்க வேண்டும் அல்லது உடைக்கவேண்டும். இதற்கு அதிகம் செலவாகும். அத்தோடு கட்டப்பட்ட வீட்டையும் அலங்கோலப்படுத்திவிடும்.
விலையைப் பொறுத்தளவில் வெளிநாட்டுக் கதவுகள் ஒரு சதுர அடிக்கு 15 ஆயிரம் என விலை இருந்தது. உதாரணமாக 3 அடி அகலம், 2 அடி நீளக் கதவுகளுக்கு சுமார் 90 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இந்த இரண்டு பிரச்னைகளையும் என் ஆய்வு மற்றும் செய்முறைகளிலிருந்து திருத்தினேன்...’’ என்று சொல்லும் ஹென்றி, அதையும் விளக்கினார்.
‘‘வெளிநாட்டு வெள்ளத் தடுப்புக் கதவுகள் எப்படி அலுமினியத்தால் செய்யப்பட்டதோ அதேமாதிரிதான் எங்கள் கதவும் இருக்கும். ஆனால், அலுமினியத்திலும் இது எடைகுறைவான அலுமினியமாக இருக்கும். எடை குறைவாக இருந்தாலும் மிக உறுதியானது.
இதை டி.6 அலுமினியம் என்பார்கள். எவ்வளவு எடை மோதினாலும் உடையாது. அலுமினியத்தை சிறு துகள்களாக வாங்கி நாங்களே உருக்கி தேவைக்கு ஏற்ற மாதிரி வடிமைத்துக் கொள்கிறோம். முதலில் வீட்டுக் கதவின் இருபக்கங்களிலும் இரண்டு அலுமினியக் கம்பங்களை நிரந்தரமாக இருக்குமாறு ஃபிக்ஸ் செய்கிறோம். பிறகு 6 இன்ச் கொண்ட அலுமினியத் தட்டுகளை இந்த கம்பங்களில் ஒவ்வொன்றாக சொருகுகிறோம்.
உதாரணத்துக்கு 2 அடி உயரத்துக்கு கதவு இருக்கவேண்டும் என்றால் 6 இன்ச் கொண்ட 4 கதவுகளை, பொருத்தப்பட்ட கம்பங்களில் சொருகவேண்டும். இந்த அலுமினியத் தகடுகள் பாரம் குறைவாக இருப்பதால் சிறுகுழந்தைகள்கூட சொருகலாம்; கழற்றலாம். ஒவ்வொரு தட்டுக்கும் இடையில் ரப்பர் இருக்கிறது. இந்த ரப்பரும் வெயில், மழையில் மக்காது; பொடியாகாது.
அதேபோல் கம்பத்தின் இடுக்குகள், அடித்தட்டிலும் இந்த ரப்பர் இருக்கும். ஒரு சொட்டு நீரைக்கூட இந்த ரப்பர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காது. எங்கள் வெள்ளக் கதவு ஒரு சதுர அடிக்கு வெறும் ரூபாய் நான்காயிரத்து சொச்சம்தான் வரும்.
உதாரணத்துக்கு 4 அடி அகலம், 2 அடி நீளக் கதவு என்றாலே 8 சதுர அடி வரும். ஒரு சதுர அடி 4000 ரூபாய் என்றால் 8 சதுர அடி 32 ஆயிரம் ரூபாய்தான் வரும்...’’ என்ற ஹென்றி இதுவரை சுமார் 100 வீடுகளுக்காவது கதவுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அழைப்புகள் தொடர்ச்சியாக வந்தாலும் ஒவ்வொரு அழைப்பாளரின் வீட்டு அமைப்பு, கதவின் வகைகளைப் பார்த்துதான் இந்தக் கதவுகளை தன் குழுவின் மூலம் அமைத்துக்கொடுக்கிறார். ‘‘எங்களிடம் இரு டீம்கள் உள்ளன. ஒரு டீம், அழைப்புக்கு ஏற்ப வீட்டுகளுக்குச் சென்று அந்த வீட்டு வாசலின் வாட்டம், அதை வெள்ளக் கதவுக்கு ஏற்ப சீர் செய்யவேண்டுமா, எந்த அளவில் கதவு இருந்தால் தடுக்கலாம் போன்ற கணக்கீட்டைச் செய்வார்கள்.
இதன் அடிப்படையில்தான் இரண்டாவது டீம் வெள்ளத் தடுப்புக் கதவை உருவாக்கும். இந்த உருவாக்கத்தில் ஈடுபடுபவர்கள் எல்லோருமே பெண்கள். இந்தக் கதவுகளை பெண்களே வீட்டில் பொருத்திக்கொள்ளலாம் என்பதற்கான குறியீடாகவும், பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காகவும் இந்த தயாரிப்பில் பெண்களை ஈடுபடுத்துகிறோம்...’’ என்கிறார் ஹென்றி.
செய்தி:டி.ரஞ்சித்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|