நாய் நகத்தால் லேசாகப் பிராண்டினாலும் என்ன செய்ய வேண்டும்?



மீண்டும் மீண்டும் எழும் சந்தேகம் இதுவாகத்தான் இருக்கிறது. 

நாய் நகத்தால் ரொம்ப லேசாகப் பிராண்டி விட்டது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? 

வளர்ப்பு நாய்க்கு முறையாக வருடாந்திர தடுப்பூசிகள் அப்டுடேட்  போட்டாச்சு. அந்த நாய் பிராண்டினாலோ லேசாக பல் பட்டாலோ கூட ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டுமா? 

எனது பதில்: நாயோ, பூனையோ; அது வளர்ப்பு விலங்கோ, தெரு விலங்கோ; உங்களைக் கடித்தாலோ, பிராண்டினாலோ நீங்கள் கவனிக்க வேண்டியது இதுதான்:
கடித்த / பிராண்டிய இடத்தில் லேசான அளவு ரத்தம் (ஒரு சொட்டு இல்லை. அதைவிடக் குறைவாக இருந்தாலும் சரிதான்) வெளியே கண்ணுக்குத் தெரிந்தாலும் அது ‘மூன்றாம் நிலை’ ரேபிஸ் தொற்றுப் பரவலுக்கான காயமாக கணக்கில் கொள்ளப்பட்டு காயம் பட்ட இடத்தைச் சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் அட்டவணைப்படி பெற்றுக் கொள்ள வேண்டும். 

சிலர் கேட்கிறார்கள்... ‘ரொம்ப ரொம்ப லேசான காயம்தான் டாக்டர்...  ரொம்ப சின்ன அளவுதான் ரத்தம் வந்தது... இதுக்குக் கூடவா தடுப்பூசியும் இம்யூனோகுளோபுளினும் போடணும்’ என்று? 

ரேபிஸ் உண்டாக்குகின்ற வைரஸின் சைஸ் - 180 நானோமீட்டர் நீளம், 60 நானோமீட்டர் அகலம்.

இந்த நானோமீட்டர் என்றால் எவ்வளவு தெரியுமா? 

ஒரு சென்டிமீட்டரில் பத்து மில்லிமீட்டர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு மில்லிமீட்டரில் மட்டும் எவ்வளவு நானோமீட்டர் இருக்கிறது என்று கணிக்க முடியுமா? 
1 மில்லி மீட்டர் = 1000000 நானோமீட்டர்கள். 1 மில்லிமீட்டருக்குள் பத்து லட்சம் நானோமீட்டர்கள் அடக்கம் என்றால் 180 நானோமீட்டர் நீளம் கொண்ட இந்த வைரஸ்கள் ஒரு மில்லிமீட்டர் காயத்துக்குள் 5000 - 6000க்கும் மேல் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

புட்டுக்கோண்டு காயம் - ‘கண்ணுக்குத் தெரியல... லேசா ஒரு ‘சொட்டுக்கூண்டு’ ரத்தம்தான்’ என்று நீங்கள் கூறினாலும் அதன் வழியாக 5000  வைரஸ்கள் உள்ளே போகலாம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். லேசாக ரத்தத்தை பார்த்தாலும் உடனே காயத்தை உங்களின் செல்போனில் படம் பிடித்துக் கொள்ளுங்கள். மருத்துவரிடம் காட்டும் போது இந்த புகைப்படத்தைக் காட்டுங்கள். 

ரத்தம் தெரிந்தால், மூன்றாம் வகையாக வகைப்படுத்த வேண்டும். காரணம் - நமது முழுத் தோலையும் தாண்டி காயம் ஏற்பட்டால்தான் ரத்தம் வரும். எனவே கட்டாயம் இம்யூனோ குளோபுளின் ஊசியை காயம் பட்ட இடத்தைச் சுற்றி போட வேண்டும். 

ரத்தம் வராவிட்டால், அந்தக் காயம் இரண்டாம் வகை என்று கணக்கில் கொள்ளப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி மட்டும் போதுமானது. காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்கள் தொடர்ந்து நன்றாக சோப் போட்டு குழாய் நீரில் கழுவ வேண்டும். இதன் வழியாக வைரஸை உடனடியாகக் கொல்ல முடியும். அடுத்து காயம்பட்ட இடத்தில் போவிடோன் அயோடின் களிம்பு தடவலாம். அடுத்த நடவடிக்கை, நேரடியாக மருத்துவரை சந்தித்து நீங்கள் எடுத்த புகைப்படத்தைக் காட்டி அவர் காயத்தை சரியான முறையில் வகைப்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

கேடகரி ஒன்று என்பது எந்தக் காயமும் ஏற்படாத நிலை. வெறுமனே மூடிய தோலின் மீது எச்சில் படுவது. இவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி தேவையில்லை. பதினைந்து நிமிடங்கள் சோப் போட்டு கழுவினால் மட்டும் போதுமானது கேடகரி இரண்டு என்பது ஒரு கீறல் / ஓர் இடத்தில் லேசாக பல் படுவது. ஆனால், ரத்தம் வெளியே தெரியாமல் இருப்பது. இதற்கு ரேபிஸ் தடுப்பூசி போதுமானது. 

கேடகரி மூன்று பல இடங்களில் கீறல்கள் / பல இடங்களில் கடி / ஓர் இடத்தில் கீறல் என்றாலும் ரத்தம் சிறிது வந்தாலும் சரி... அது கேடகரி மூன்றுதான். காயம் பட்ட இடத்தில் இம்யூனோகுளோபுளின் ஊசி போடப்பட வேண்டும். அதனுடன் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அலட்சியம் வேண்டாம் அன்பர்களே... ரேபிஸ் விஷயத்தில் சிறிது அலட்சியமும் வேண்டாம்.

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா