ஜென் Z மத்தியில் ஏன் நீரிழிவு நோய் அதிகரிக்கிறது?



சமீபத்திய மருத்துவ ஆய்வு, இளைஞர்களில், குறிப்பாக ஜென் Z மக்களிடம் மொபைல் திரை பயன்பாடு அதிகரித்திருப்பதால் ஏற்படும் பார்வை சேதாரம் மற்றும் நீரிழிவு நோயின் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
இரண்டும் வேறு வேறு பிரச்னைகள் போல் தோன்றினாலும், வாழ்க்கை முறையின் மாற்றம் காரணமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இளைஞர்களிடம் அதிகரித்து வருவதாகச் சொல்லும் அந்த ஆய்வு அவற்றை பட்டியலிடவும் செய்துள்ளது.

மொபைல் திரை காரணமாக பார்வை சேதாரம்

நீண்ட நேரம் திரையை பார்ப்பது கண்களுக்கான தசைகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுத்துகிறது. இது Digital Eye Strain அல்லது Computer Vision Syndrome எனப்படும்.

இமைக்கும் நேரம் குறைவு

சாதாரணமாக நிமிடத்திற்கு 15 - 20 முறை இமைக்க வேண்டும்; ஆனால், மொபைல் பார்க்கும்போது இது 5 - 7 முறை வரை இமைக்கும் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதனால் கண் உலர்வு, எரிச்சல் உண்டாகும்.

நீல ஒளி

நீல ஒளி ரெட்டினா செல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். இதனால் விரைவில் பார்வை குறைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

கிட்டப்பார்வை அழுத்தம்

மிக நெருக்கத்தில் (20 - 30 cm) தொடர்ந்து பார்க்கும் பழக்கம், குழந்தைகள்/
இளைஞர்களில் கிட்டப் பார்வை பிரச்னைக்கு வழிவகுக்கும். 
மோசமான அமரும் நிலை மற்றும் குறைவான வெளிச்சம்
இதன் பின்விளைவாக தலைவலி, மங்கலான பார்வை உருவாகின்றன.
மொத்தத்தில் மொபைல் அடிமையாகிறார்கள், சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். எந்நேரமும் கேம் விளையாடியபடி இருப்பார்கள். 

இதனால் வெளியில் விளையாடும் பழக்கம் குறையும். விளைவு, சூரிய ஒளி குறைவாகக் கிடைப்பதால் கண் சேதாரம் அதிகரிக்கும். மட்டுமல்ல, தூக்கத்தின் சுழற்சி பாதிக்கப்படும். சக்திக்கு மீறி கண்கள் தொடர்ந்து வேலை செய்வதால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.

எல்லாம் சரி. இதனால் இளைஞர்களின் மத்தியில் நீரிழிவு அதிகரிக்குமா? 

ஆம் என்கிறது ஆய்வு. தொடர்ந்து ஓரிடத்தில் உழைப்பின்றி உட்காருவதால், உடல் சர்க்கரையை செல்களுக்குள் சிதைத்து அனுப்ப முடியாமல் இரத்தத்தில் சர்க்கரையாக மாற்றுகிறது.
அத்துடன் உள் கொழுப்பு அதிகரிக்கிறது. வெளிப்புற உணவு, நேரம் கடந்து உணவு எடுத்துக் கொள்வது போன்றவற்றால் உடலுக்குள் கொழுப்பு அதிகரிக்கிறது.
இந்தியர்களுக்கு இயல்பாகவே இன்சுலின் செயல்பாடு குறைவாக இருக்கும். இந்த மொபைல் பயன்பாடு இன்னும் இன்சுலின் சுரப்பியை பாதிக்கும்.

இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். மன அழுத்தத்தால் ஹார்மோன் உயர்கிறது. இதனால் இனிப்பு, துரித உணவு மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. இன்சுலினின் செயல்பாடு என்ன..? அதுதான் அளவை மீறிய இரத்த சர்க்கரையை உடைக்கும். அது தடைப்பட்டால் நீரிழிவு நோய்தான் உண்டாகும். 

சரி. மொபைல் திரை பழக்கமும் நீரிழிவும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு?

அதிகம் அமர்ந்த வாழ்க்கை முறைதான் இரண்டிற்கும் பொதுவான அடிப்படை. வைட்டமின் டி குறைபாடு, உடல் உழைப்பின்மை, உடல் பருமன் அனைத்தும் ஒன்றிணைந்து இக்கால இளைஞர்களை நீரிழிவு நோயாளியாக மாற்றி விடுகிறது.

இதற்கென்ன தீர்வு?

கண்களுக்கு 20-20-20 ரூல். அதாவது 20 நொடிக்கு ஒரு முறை, 20 அடி தூரம், 20 விநாடி பாருங்கள். கண்களை நீல ஒளியில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.
வெளிச்சம் நிறைந்த இடத்தில் மொபைல் பயன்படுத்தவும். தினமும் 30, 60 நிமிடம் வெளியில் இயற்கையான சூரிய ஒளியில் நேரம் செலவிடுங்கள்.

வெறும் 30 நிமிடம் வேகமான நடைபோடுங்கள். இதனால் இன்சுலின் செயல்பாடு அதிகரிக்கும். துரித உணவுகள், பேக்கரி உணவுகள், குளிர்பானங்களை குறையுங்கள். மூன்று வேளை ஆரோக்கிய உணவு, இருவேளை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ், 7, 8 மணிநேர தூக்கம், வருடத்திற்கு ஒரு முறை நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

ஷாலினி நியூட்டன்