12 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வெடித்த இந்த எரிமலையால் இந்தியாவுக்கு ஆபத்தா?
உலகம் முழுவதும் 1,350 முதல் 1,500 எரிமலைகள் இருக்கின்றன. இதில் கடலுக்குள் இருக்கும் எரிமலைகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் 50 முதல் 60 எரிமலைகள் வெடிக்கின்றன. இவற்றால் எரிமலைகள் வெடித்த பகுதிகளைத் தவிர, மற்ற இடங்களுக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த எரிமலைகள் வெடித்த செய்திகள் கூட உள்ளூருடன் நின்றுவிடுகிறது.
 இந்நிலையில் ஹைலி குப்பி என்ற எரிமலை வெடித்த செய்தி உலகம் முழுவதும் ஹாட் நியூஸாக மாறியிருக்கிறது. இதனால் பல நாடுகளில் விமானப் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. ஹைலி குப்பி எங்கிருக்கிறது? அதனால் நமக்கு ஏதாவது பாதிப்பு உண்டாகுமா என்கிறீர்களா?
எத்தியோப்பியா நாட்டின் அஃபார் பகுதியில் உள்ள எர்டா அலே ரேஞ்சின் தெற்கில் வீற்றிருக்கும் கேடய வகை எரிமலைதான், ஹைலி குப்பி. இது கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப் பகுதியில் அமைந்திருப்பதால், இப்படிஒரு எரிமலை இருப்பதே பலருக்கும் தெரியாது. மட்டுமல்ல, ஹைலி குப்பி இருக்கும் இடத்துக்குப் பெரிதாக யாருமே செல்ல மாட்டார்கள். கண்காணிப்போ, மக்கள் நடமாட்டமோ இல்லாத தனித்த, ஆபத்தான பகுதி இது. சுமார் 12 ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்த எரிமலை செயலற்று, உறங்கிக் கிடந்தது.
ஆனால், திடீரென்று கடந்த நவம்பர் 23ம் தேதி இந்த எரிமலை முதல் முறையாக வெடித்து, உலகமெங்கும் பிரபலமாகிவிட்டது. வரும் காலங்களில் இந்த எரிமலையைப் பார்க்க சாகசப் பயணிகள் படையெடுக்கலாம். அணுகுண்டைப் போல ஹைலி குப்பி வெடித்ததால் உண்டான புகை மண்டலம், மேகத்தைக் கிழித்துக்கொண்டு வெகு உயரத்துக்குச் சென்றது. காற்றின் வேகத்தால் அந்தப் புகை மண்டலம் பல நாடுகளுக்குப் பயணமானது.
இந்தப் புகையில் சல்பர் டையாக்சைடு கலந்திருந்தது. அதனால் செங்கடல், தெற்காசியா, இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளின் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சில மணி நேரங்கள் நீடித்த வெடிப்பு, அடங்கிவிட்டது. ஆனால், அந்தப் புகை மண்டலமோ பயணித்துக்கொண்டே இருந்தது. தவிர, தொலைதூரத்தில் ஹைலி குப்பி இருந்ததால், அரசும் கூட எரிமலையைக் கண்காணிப்பதில்லை.
எரிமலை வெடிப்பு செயற்கைக்கோளில் பதிவான பிறகே எல்லோருக்கும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்திருக்கிறது. எரிமலை வெடிப்பின் மூலம் மேலெழுந்த புகை 25 ஆயிரம் அடி முதல் 45 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் சென்றது. அதாவது எரிமலை வெடித்தபோது ஏற்பட்ட புகை, 7.62 கிலோ மீட்டர் முதல் 14 கிலோ மீட்டர் உயரம் வரைக்கும் சென்றிருக்கிறது. இந்த உயரத்தில்தான் சர்வதேச விமானப் பயணத்துக்கான பாதைகள் இருக்கின்றன. புகையில் சல்பர் டையாக்சைடு இருப்பதால் விமானப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று பல விமான நிறுவனங்கள் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்கின்றன. எரிமலை கக்கிய புகை மண்டலம் சரியான பிறகுதான் விமானப் போக்குவரத்து சீராகும். 45,000 அடி உயரத்தில் புகை இருந்ததால், நிலத்தில் உள்ள காற்றுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய வானியல் ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.
எரிமலை வெடித்த நாட்களில் இந்தப் புகை பல இடங்களுக்குப் பயணம் செய்து காற்றை மாசுபடுத்தும் என்று சொல்லியிருந்தனர். ஹைலி குப்பி கக்கிய புகை காற்றின் வேகத்தால் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து இமயமலையின் வழியாக சீனாவுக்குள் செல்லும் என்று கணித்திருந்தனர். இந்தியாவுக்குள் வரும்போதுகுஜராத், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவைப் பாதிக்கும் என்றும் சொல்லியிருந்தனர்.
ஆனால், எரிமலை இருக்கும் பகுதியைத் தவிர, மற்ற இடங்களில் இந்தப் புகையால் பாதிப்பு ஏற்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை. ஒருவேளை இந்தப் புகை நிலத்தை ஆக்கிரமித்திருந்தால் பெரும்பாலானோருக்கு சுவாச பிரச்னையை உண்டாக்கியிருக்கும், குறிப்பாக ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
தில்லி போன்ற நகரங்களில் முன்பே காற்றின் தரம் மோசமாக இருக்கிறது. சல்பர் டையாக்சைடும் அதில் கலந்திருந்தால் காற்றின் தரம் இன்னமும் மோசமாகியிருக்கும். நவம்பர் 26ல் இந்தியாவின் வான்வெளியிலிருந்து இந்த எரிமலை புகை அகன்று, சீனா நோக்கிச் சென்றுவிட்டதால் எல்லாம் இயல்பாகிவிட்டது என்று இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எரிமலை வெடிப்பின்போது வெளியான புகை மாதிரியை வைத்து, ஏன் எரிமலை வெடித்தது? எரிமலையின் உண்மையான வரலாறு என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.
த.சக்திவேல்
|