குரு மககுராஜ!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

       ‘‘எங்க குருவுக்கு ஐக்யூ துளியும் கிடையாது. ஜெனரல் நாலட்ஜ் அடியோடு கிடையாது. சும்மா என்னவோ காஜா அடித்துண்டிருக்கிறார். உருப்படியான பொன்மொழியோ உபதேசமோ ஏதாவது செய்கிறாரா... ம்ஹும்.

குழந்தைகளுக்குக் கதை சொல்ற மாதிரி சிம்பிளாக ஏதாவது சொல்கிறார். ‘சூரியன் கிழக்கே உதிக்கும். ஆடிப் பெருக்குக்கு சித்ரான்னம் செய்வார்கள். பிள்ளையார் மூஞ்சூறு வாகனத்தில் ஊர்ந்து போவார். விஷ்ணுவுக்குக் கருட வாகனம்...’

எப்பேர்ப்பட்ட ஆன்மிக லெக்சரெல்லாம் சிட்டியில் யார் யாரோ வந்து நடத்துகிறார்கள். கூட்டம் நெரிகிறது. நம்ம ஆள் என்னடான்னா... ம்ஹும். இவரை குரு மகராஜ் என்பதைவிட குரு மக்குராஜ் என்றுதான் சொல்லவேண்டும்!’’

& எலெக்ட்ரிக் டிரெயினில் ஆபீஸ் நண்பர்கள் வீடு திரும்பும்போது ஜாலியான அரட்டையில் கிண்டல் கிச்சுடு பிளந்து கட்டிக்கொண்டிருந்தான்.

அவன் எது பேசினாலும் எல்லாருக்கும் சிரிப்பு வந்துவிடும். அங்க சேஷ்டைகளுடன், நாடகத்தனமான ஏற்ற இறக்கக் குரலில் பேசுவதால், ரயிலில் ஒன்றே கால் மணி நேரப் பொழுது போவதே தெரியாது.

எல்லா விஷயத்தையும் கிண்டலடிப்பான். அன்றைக்கு அவனது பெருமதிப்புக்குரிய & இல்லை... இல்லை... & சிறுமதிப்புக்குரிய குருவைப் பற்றிய சப்ஜெக்ட்டில் எல்லாருக்கும் சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தான்.

அந்தக் கும்பலின் குதூகலத்தை அடுத்த பெட்டியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு ரிட்டயர்டு மாமா தன் பகுதியிலிருந்து நண்பர்களின் சங்கத்துக்கு வந்தார். ‘‘கொஞ்சம் நகர்ந்து கொள்கிறீர்களா? உங்கள் அரட்டை ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. மே ஐ ஸிட் ஹியர்!’’ என்று பெஞ்சு நுனியைக் காட்டினார்.

‘‘தாராளமாக. ரயில் எங்களுடையது இல்லை சார்... நம்முடையது!’’ என்று கிண்டல் கிச்சுடு தானே இடம் ஒதுக்கித் தந்தான். அந்த ஆசாமியைப் பார்த்தால் வெகு வருடம் முன்பு ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் மாதிரி இருந்தது. ஜிப்பா, அங்கவஸ்திரம், பளிச் முகம், நெற்றியில் அப்போதுதான் போட்டது மாதிரி பளீர் விபூதிப் பட்டை.

‘‘சார் ரொம்ப நல்லாப் பேசறார். எனக்கு கயாவிலே ஏற்பட்ட ஒரு அனுபவம் சாரோட பேச்சுக்கு ரெலவன்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன். அதைச் சொல்லலாமா, வில் யூ பர்மிட் மீ...’’
‘‘சொல்லுங்க... ஓடற ரயிலிலிருந்து குதித்துவிடவா முடியும்!’’ & கிச்சுடுவின் கிண்டல்.

சிரிப்பு அடங்கிய பின் புதியவர் சொன்னார்...

‘‘ரெண்டு வருஷத்துக்கு முன் கயா போயிருந்தேன். இப்படித்தான் கும்பலா யாத்ரா ஸ்பெஷலில்... இதோ சார் மாதிரி ரொம்ப வேடிக்கையா பேசுகிற ஒருத்தர். அவருக்கு ஹிந்தி நல்லாத் தெரியும். வடக்கே போகப் போக பேசிப் புழங்க இந்தி நன்றாகத் தெரிந்த ஒருத்தர் கூட வர்றதுலே எல்லாருக்கும் சந்தோஷம். ஆந்திரா தாண்டறதுக்குள்ள அவர் ஏறக்குறைய தலைவராயிட்டார். எதற்கெடுத்தாலும் ‘இந்தி சாரைக் கேளுங்கள்’ என்றாகி விட்டது.

கயாவில் பெரிய பங்களாவில் தங்கினோம். மேலும் கீழுமான பிரமாண்ட பங்களா. ஏராளமான ரூம்கள்.

திதி கொடுக்க விரும்புகிறவர்களுக்கு மாடியில் இடவசதி செய்யப்பட்டிருந்தது. அவரவருக்குத் தனியாக ஹோம குண்டம், வாத்தியார்கள் என்று அனைத்தையும் ஒரு புரோகிதர் ஏற்பாடு செய்திருந்தார்.

புரோகிதர் அந்த பங்களாவுக்கு வந்து தங்குகிற யாத்ரா ஸ்பெஷல்காரர்களுக்கு திதி செய்து வைப்பவராம். சின்ன வயசு. எளிமையான தோற்றம். ‘சவுண்டி பிராமணர்’ என்று இளக்காரம் செய்வீங்களே... அந்த மாதிரியான பேர்வழி. திவச ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இந்தி சாரும் திவசத்துக்கு ரெடியாக உட்கார்ந்துவிட்டார்.

அந்த புரோகிதர், ‘‘உங்கள் சம்சாரத்தையும் மேலே வரச் சொல்லுங்கள்’’ என்றார்.

இந்திக்காரர், ‘‘மாடி கீடியெல்லாம் அவளால் ஏறி வரமுடியாது’’ என்றார். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், ‘‘நீர்தானே எல்லா ஏற்பாடும் செய்திருக்கிறீர். உமக்கு மூளை வேணாம்.

வயசான வர்களால் மாடி ஏறமுடியாது. கீழேயே எல்லா இழவையும் வைத்துக்கொள்ள ஏன் ஏற்பாடு செய்யவில்லை? காசு வாங்கறீங்க இல்ல...’’ என்றார்.

இந்தியில் பேசிக்கொண்டதால் பெரும்பாலானவர்களுக்குப் புரியவில்லை. புரோகிதர் சின்ன வயசாக இருந்தாலும்  பளபள பர்சனாலிடி இல்லாவிட்டாலும் தொழிலில் கெட்டிக்காரர் போல.
‘‘நான் சிரத்தையாக நடத்தற சிரார்த்தம் பற்றிச் சொல்லுகிறேன். நீங்க சம்பந்தமில்லாமல் ஏதோ காசு கீசுன்னு பேசறீங்க’’ என்றார்.

‘‘தெரியுமய்யா உங்க யோக்யதை. காசுன்னா என்ன வேணும்னாலும் செய்வீங்க. எப்படி வேணும்னாலும் நடப்பீங்க. கொள்ளை அடிக்கிறீங்க.’’

புரோகிதர் இங்கிலீஷில் சொன்னார்... ‘‘யூ டாக் டூ மச்! ஐ’ம் குரு. நாட் ஆர்டினரி பர்ஸன்.’’

‘‘ஏமாந்தவன்கிட்டே துட்டு பறிக்கிற பசங்கதானே நீங்க.’’

‘‘ப்ளீஸ்!’’ என்றார் அந்த புரோகிதர் கோபமாக. ‘‘இதற்கு மேலும் ஒரு வார்த்தை நீங்க பேசக்கூடாது.’’

‘‘பேசினால்?’’ என்றார்

நண்பர்.

‘‘உங்களால் பேச முடியாது! நான் வேதம் படித்த பிராமணன் சொல்றேன், நீங்க பேச முடியாது...’’

அடுத்த நிமிஷம் அந்த அதிசயம் நடந்தது. ஏதோ திட்ட வேண்டுமென்று வாயைத் திறந்த இந்தி சார் ‘ஆ’ என்று தன் தாடையைப் பற்றிக் கொண்டார். பல் வலிக்கிற மாதிரி துடித்தார்.
‘‘என்னாச்சு?’’ என்று நாற்காலியில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினார்கள்.

அவருக்கு அடிக்கடி பல்வலி வருவது உண்டு என்றும், இவ்வளவு ஸிவியராக, ஸடனாக எப்போதும் வந்ததில்லை என்றும் அவருடைய மனைவி கீழேயிருந்து பதறி அடித்து மேலே ஏறி வந்தவள் கூறினாள்.

‘‘அவரைக் கூட்டிக்கொண்டு அடுத்த தெருவிலுள்ள டாக்டர்கிட்டே போங்கள். மீதிப் பேர் சிரார்த்தம் செய்யலாம். எல்லாரும் போய் அவரவர் ஹோம குண்டத்துக்கு எதிரே உட்காருங்கள்’’ என்று கூறினார் புரோகிதர். அதை கட்டளை மாதிரி ஏற்றுப் பரபரப்புடன் அனைவரும் திவசம் செய்ய அமர்ந்தனர். இந்தி மாமாவை கைத்தாங்கலாகப் பிடித்து டாக்டரிடம் சிலர் கூட்டிச் சென்றார்கள்.

அன்று மட்டுமல்ல... சென்னை திரும்பும்போதும்கூட ரயிலில் அந்த இந்தி மாமா கப்சிப். மோவாயில் கை வைத்து வாயைப் பொத்தியது பொத்தியவாறே இருந்தார். அவரது அட்டகாசமான சிரிப்பும் பேச்சும் எங்களுக்குத் திரும்புகையில் கிடைக்கவில்லை.

எதுக்கு இதை நான் சொல்றேன்னா... குரு என்ற ஸ்தானத்துக்கும் அவர் படித்த வேதத்துக்கும் மதிப்பு கொடுத்தே ஆகவேண்டும். அவர் கெட்டிக்காரரோ இல்லையோ, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரண்டை இடக்கெல்லாம் காட்டினால் நமக்கு அவ்வளவு நல்லதில்லே. எனக்குப் பல்வலி சொஸ்தமாக ஒரு வருஷமே ஆச்சு!’ என்று சொல்லிவிட்டு, நுங்கம்பாக்கத்தில் இறங்கிவிட்டார்.

‘‘அட! புரோகிதரிடம் சாபம் வாங்கிக் கொண்டவர் இவர்தானோ? கொஞ்சம் முன்பே சொல்லிருந்தால் நன்றாகப் பார்த்திருக்கலாமே’’ என்று அவர்கள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது.
கிண்டல் கிச்சுவின் அருகே ஏதோ ஒன்று சுருண்டு கிடந்தது.

அவனது வாலோ?
(சிந்திப்போம்!)
பாக்கியம் ராமசாமி