தமிழ் சினிமாக்களில் மாமியார் வேடத்துக்கு தனி கிராக்கியே உண்டு. ஹீரோவுடன் மோதக்கூடிய வில்லனுக்கு ஒத்த பெண்பால் வேடமென்றால் அது மாமியார் வேடம்தான். மன்னன் பிலிம்ஸின் 'பேச்சியக்கா மருமகன்’ படத்தில் தலைப்பே அவரது பாத்திரத்தைச் சொல்ல, முதல்முறையாக கிராமத்து மாமியாராக இன்னொரு பரிமாணம் காட்ட வருகிறார் அவர்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று மொழிக்கு சராசரியாக நூறு படங்களைத் தொட்டபடி நடித்துக் கொண்டிருக்கும் ஊர்வசிக்கு ‘முந்தானை முடிச்சி’ல் அவர் அறிமுகமான பரிமளம் பாத்திரத்துக்குப் பிறகு பேர் சொல்லும் கிராமியப் பாத்திரமாக அமைந்திருக்கிறது இந்த பேச்சியக்கா. ‘‘கிராமத்து பாணியில மண்வாசத்தோட அங்கங்கே பழமொழி களைப் போட்டு பேசற வெள்ளந்தி அழகோட அமைஞ்ச படம் இது. நகரத்து நாகரிகம் படாத படம்ங்கிறதும் புதுமை...’’ என்று ஆரம்பித்த ஊர்வசி தொடர்ந்தார்...
‘‘நகரத்திலதான் பெண்கள் வேலைக்குப் போறதை பெரிசா பேசிக்கிட்டிருக்கோம். ஆனா கிராமங்கள்ல தொன்றுதொட்டே பெண்கள் வேலைக்குப் போய்க்கிட்டுத்தான் இருக்காங்க. நாலு ஆண்கள் செய்யக்கூடிய உழைப்பை ஒரு பெண் செய்வா. வீட்டு வேலையை முடிச்சுட்டு, வயக்காட்டு வேலைகளைப் பாத்து, புருஷனைப் பாத்து, புள்ளைகளைப் பாத்து கிராமத்துப் பெண்கள் சாதாரணமா

வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அப்படி ஒரு கேரக்டரைத்தான் இந்தப் படத்துக்காக டைரக்டர் பாலகுமார் சொன்னார். உடனே ஒத்துக்கிட்டேன். கதையை எழுதியிருக்க தருண்கோபியே என் மருமகனா வர்றார். புருஷனை இழந்து, எந்த உதவிகளும் இல்லாம குடும்பத்தைக் காப்பாத்தி, இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கற பேச்சியக்காவா நான். கறுப்பு மேக்கப் போட்டு வயல்வெளிகள்ல நின்னு, உண்மையிலேயே கறுத்து, வெறும் நூல் புடவைகள் மட்டுமே அணிஞ்சு நடிச்ச அந்தக் கேரக்டர் என்னைப்போலவே பார்க்கிறவங்களுக்கும் புதுசா தெரியும். மதுரைத் தமிழை அங்கேயே பழகி அவங்க பேச்சு, பாவனைகள்னு ஸ்டடி பண்ணி நடிச்சது நிறைவா இருந்தது.
வழக்கமான சினிமா மாமியாரா, மருமகன் கூட சவால்விட்டு ஜெயிக்கிற கேரக்டர் இல்லை என்னோடது. ஆண் வாசமில்லாத வீட்டுக்கு ஒரு மருமகன் வரும்போது அந்த வீட்ல உணர்வுரீதியா ஏற்படும் மாறுதல்களைப் படம் அழகா சொல்லுது. என்னோட பிள்ளைக்கும் மேலயே பாசம் காட்டி நான் மருமகனை நடத்த, மருமகனும் என்னை ஒரு தாய்க்கு மேல வச்சு நடத்த, எல்லாம் சரியா நடக்கும்போது இங்கே வில்லனா வர்றது சூழ்நிலை மட்டுமே!’’
வேணுஜி