சைதாப்பேட்டை மாரியம்மாவுக்கு 9 பிள்ளைகள். கணவர் இறந்துவிட, தனி ஆளாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். பையன்கள் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். பெண்கள் திருமணமாகி செட்டிலாகி விட்டார்கள். மாரியம்மா இன்று இருப்பது முதியோர் இல்லத்தில்.
கெல்லீஸ் சுப்பிரமணிக்கு சொந்த வீடு உண்டு. மனைவி இறந்துவிட்டார். ஒரே மகனுக்கு கடந்த வருடம் திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்த மறுவாரம், ‘தொழில் தொடங்க லோன் வாங்கணும். வீட்டை என் பேருக்கு எழுதிக்கொடு’ என்று வாங்கிக்கொண்டார் மகன். அதன்பிறகு, அந்த வீட்டில் வேண்டா மனிதராகிப் போனார் சுப்பிரமணி. மகனின் புறக்கணிப்பும் மருமகளின் அவமரியாதையும் சகிக்காமல் கிளம்பிவிட்டார் முதியோர் இல்லத்துக்கு.
இப்படி, நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாரியம்மாக்களும் சுப்பிரமணிகளும் முதியோர் இல்லங்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் பத்துக்கும் குறைவான முதியோர் இல்லங்களே இருந்தன. இன்று 132 இல்லங்கள் இயங்குகின்றன. அண்மையில் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வில், 63 சதவீதம் முதியவர்கள் மருமகளாலும், 44 சதவீதம் பேர் மகன்களாலும் கொடுமைக்கு உள்ளாவது தெரிய வந்துள்ளது.
‘‘60 வயதுக்கு மேல முதியவர்கள் குழந்தைகளா மாறிடுவாங்க. அன்பும் அரவணைப்பும்தான் அவங்களோட எதிர்பார்ப்பு. தன் துணை இருக்கிற வரைக்கும் எதுவும் அவங்களை பெரிசா பாதிக்கிறதில்லை. அதன்பிறகு தனிமையை உணர்றாங்க. அதை சகிச்சுக்க முடியல. சின்ன சொற்கள் கூட அவங்களைப் பாதிக்குது. பிள்ளைகள் நிறைவா அன்பு காட்டலைங்கிற மனக்குறை அவங்களை வாட்டுது. ஆனா, இன்னைக்கு இருக்கிற பரபரப்புல பெத்தவங்களோட தியாகத்தை நினைச்சுப் பாத்து அவங்களுக்கு மரியாதை செய்றதுக்கு பிள்ளைகளுக்கு நேரமில்லை.

மனைவி, பிள்ளைகள்தான் அவங்களுக்கு உலகமா இருக்கு. ஆண்களுக்கு இணையா பெண்களும் வேலைக்குப் போறதால குடும்பங்கள் எதிர்கொள்ற கலாசார மாற்றம்தான் இதுக்குக் காரணம். இதுல அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறது முதியவர்கள்தான்’’ என்கிறார் ‘ஹெல்ப் ஏஜ்’ நிறுவன இணை இயக்குனர் எட்வின்.
முதியோர் கொடுமையில் முன்னணி வகிக்கிறது தலைநகரம் டில்லி. அங்கு பெரும்பாலான முதியவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வரிசையில் பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா நகரங்களுக்கு அடுத்தடுத்த இடங்கள். அவற்றோடு ஒப்பிடுகையில் சென்னை பரவாயில்லை. ஆனால், இங்கே பல முதியவர்கள் தங்கள் பிரச்னைகளை பேசத் தயங்குகிறார்கள். பிள்ளைகள் மீது புகார் கொடுப்பதையோ, குறை சொல்வதையோ விரும்பவில்லை. சரியாக பராமரிக்காத பிள்ளைகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் என்பது கூட 90 சதவீதம் பேருக்குத் தெரியவில்லை.
‘‘முன்பெல்லாம் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள், பெற்றோர் தனிமையில் தவிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் முதியோர் இல்லத்தில் விடுவார்கள். இன்று, சென்னையில் வசிக்கும் பிள்ளைகளே பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுகிறார்கள். நகர்ப்புற முதியவர்கள் பரவாயில்லை. கிராமங்களில் இருப்பவர்களுக்கு தற்கொலைதான் தீர்வு. பல முதியவர்கள் தங்கள் பிள்ளைகளால் ஏமாற்றப்படுகிறார்கள். சொத்துகளை பறித்துக்கொண்டு துரத்தி விடுகிறார்கள். பல வீடுகளில் வேலைக்காரி மாதிரி மாமியாரை மருமகள்கள் நடத்துகிறார்கள்’’ என்கிறார் முதியோருக்கான மனநல ஆலோசகர் முத்துக்கிருஷ்ணன்.
‘‘நாட்டில் 60 வயது தாண்டிய முதியவர்கள் 9 கோடி பேர் இருக்காங்க. இவர்களில் 72 சதவீதம் பேர் மகன்களோடு வசிக்கிறாங்க. 66 சதவீதம் பேர், தங்கள் தேவைகளுக்கு மகனை சார்ந்து வாழுறாங்க. நாங்கள் சந்தித்த 98 சதவீதம் பேர் தங்கள் பிள்ளைகள் செய்யும் கொடுமைகளை வெளியில் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது உணவை அல்ல... அன்பை’’ என்கிறார் எட்வின்.
சென்னையின் மிகப்பெரிய 7 குடிசைப் பகுதிகளில் ஹெல்ப் ஏஜ் ஆய்வு நடத்தியது. அப்பகுதியின் மொத்த வருமானத்தில் 40 சதவீதம் முதியோர் மூலமே வருவது தெரிய வந்தது. ஆனாலும், அங்கு முதியோர்கள் செல்லாக்காசாகவே மதிக்கப்படுகிறார்கள்.
நன்றி மறந்து பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளுக்காக யாரோ சொல்லி வைத்த ஒரு கதை...
தன் தகப்பனுக்கு ஒரு கொட்டாங்கச்சியில் கஞ்சியை ஊற்றி, தன் மகனிடம் தினமும் கொடுத்து அனுப்புவானாம் ஒருவன். கஞ்சியைக் குடித்துவிட்டு தாத்தா வீசும் கொட்டாங்கச்சிகளை அந்தப் பையன் சேகரித்து வைத்தானாம். ஒருநாள், ‘ஏன் இந்தக் கொட்டாங்கச்சிகளை சேகரிக்கிறாய்’ என்று அப்பன் கேட்க, ‘நீ இப்போது தாத்தாவுக்குக் கொடுப்பது போல, உனக்கு வயதான பிறகு நான் கஞ்சி ஊற்றித்தர வேண்டுமே... அதற்காகத்தான்’ என்றானாம் பையன்.
பல வீடுகளில் இப்படி கொட்டாங்கச்சிகள் சேகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்