குடும்பத்தோடு தற்கொலை செய்வோம்! விரக்தியின் உச்சத்தில் மக்கள்நலப் பணியாளர்கள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
                          ‘‘ஒரு லட்சம் அரசுப் பணியாளர்களை ஓவர்நைட்டில் வீட்டுக்கு அனுப்பியது முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக்கால வடு. விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை போனதில், இழந்தவர்களுக்குத் திரும்பக் கிடைத்தது வேலை. இப்போதும் ஒரேயொரு அரசாணையில் 13,500 பேர் டிஸ்மிஸ். ‘அரசாங்கம் என்பதே மக்களுக்காகத்தான்’ என்கிற நினைப்பில்லாதவர்கள்தான் மக்கள்நலப் பணியாளர்கள் தேவையில்லை என்பார்கள்’’ என்கிறார் தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தன.மதிவாணன்.

‘‘1989&ல் உருவாக்கப்பட்ட பொறுப்பு இது. தி.மு.க. அரசு கொண்டு வந்த வேலை என்ற காரணம்தான் இன்னிக்கு வரைக்கும் எங்க நிம்மதியைப் பதம் பார்த்துட்டே இருக்கு. நாங்க முழுக்க முழுக்க தி.மு.க. காரங்கன்னு நினைக்குது அ.தி.மு.க. அரசு. உண்மையைச் சொல்லணும்னா, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்கள்ல அ.தி.மு.க. நிர்வாகிங்க வீட்டுலயே மக்கள்நலப் பணியாளர்கள் இருக்காங்க.

1991&ல் அ.தி.மு.க அரசு பதவி ஏத்ததும் எதிர்பார்த்தபடியே எங்களை வீட்டுக்கு அனுப்புனாங்க. திரும்ப தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்தான் எங்களைப் பணியில சேர்த்தாங்க. அஞ்சு வருஷம் நிம்மதியாக் கழிஞ்சது. திரும்பவும் 2001&ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பழையபடி பணிநீக்கம். ரெண்டாவது முறை வேலை பறிபோனப்ப எங்க ஆளுங்க 56 பேர் மன உளைச்சலால தற்கொலை செய்துக்கிட்டாங்க. இன்னிக்கும் அவங்க குடும்பங்களோட நிலைமை பரிதாபமாத்தான் இருக்கு. அடுத்து 2006&ல் தி.மு.க. ஆட்சி வந்ததுல திரும்ப வேலையில சேர்ந்தோம். இப்ப மீண்டும் அ.தி.மு.க ஆட்சி. இந்த ஆட்சி பதவியேத்த நாள்ல இருந்தே வயித்துல நெருப்பைக் கட்டிட்டுத்தான் இருந்தோம். இப்போ, மூணாவது முறையா டிஸ்மிஸ். முறையா வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமா நியமிக்கப்பட்டவங்கதான் நாங்க.

 ஆட்சி மாறும் போதெல்லாம் வேலையை இழக்கறதுக்கு, நாங்க என்ன பாவம் செஞ்சோம்? நீதிமன்றத்தைத்தான் பெரிசா நம்புறோம்’’ என்கிறார் மதிவாணன்.

கிராம அளவில் பொதுச் சொத்துகளைக் கண்காணித்தல், பஞ்சாயத்து தலைவர்களுக்கு அலுவல்ரீதியாக உதவுதல், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்குதல், 100 நாள் வேலை உறுதித்திட்டத்தை மேற்பார்வையிடுதல் போன்றவைதான் இப்போது மக்கள் நலப்பணியாளர்கள் செய்து வரும் சில முக்கிய வேலைகள். 1989&ல், 21 வயதில் இந்தப் பணியில் சேர்ந்தவர்கள் இன்று நாற்பதைக் கடந்து விட்டார்கள்.

‘‘இனி எங்க போய் வேலை தேடறது? 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்துலதான்  குடும்பம், ரெண்டு பெண் குழந்தைகளோட படிப்புன்னு எல்லாத்தையும் கவனிக்க வேண்டி யிருந்துச்சு.

‘நம்மையும் ஒருநாள் பணிநிரந்தரம் பண்ணிட மாட்டாங்களா’ன்னு ஏங்கிட்டு இருந்தோம். எங்க தலையில இப்படியொரு இடி...’’ என்கிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகச்சாமி.

‘‘வேலையப் புடுங்கிட்டாங்கம்மான்னு முந்தா நாள் போன்ல சொன்னப்பவே எம்பொண்ணு உடைஞ்சு போயிருந்தா. ‘எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு. வர்றேன்’னு கிளம்பி வந்தா. இப்படியொரு முடிவோட வந்திருக்கானு தெரியாமப் போச்சு. யார் புண்ணியமோ இன்னிக்கு என் மகளைக் காப்பாத்திட்டேன். ஆனா, எத்தனை நாள்தான் நானும் காவல் இருப்பேன்?’’ எனக் கதறுகிறார் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலவாக்கம் உமா மகேஸ்வரியின் தாயார். மக்கள்நலப் பணியாளரான உமா மகேஸ்வரி பணிநீக்கச் சேதி கேட்டு தற்கொலைக்கு முயன்றவர்.

‘இவர்கள் செய்கிற வேலையைச் செய்ய போதுமான ஆட்கள் இருக்கிறார்கள்’ என்கிற ஒற்றைவரிக் காரணம்தான் இவர்களைப் பணிநீக்கம் செய்திருக்கும் அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘இந்த வேலை நிச்சயம் திரும்பக் கிடைக்காதென்று தெரிந்தால்,  குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வது தவிர வேறு வழியில்லை’ என்கிறார்கள் வேலையைப் பறிகொடுத்து நிற்பவர்கள்.
 அய்யனார் ராஜன்
படம்: லோகநாதன்