போராளிகளுக்கு ஹீரோவாகவும், சட்டத்துக்கு வில்லனாகவும் தெரிந்த சந்தன வீரப்பனின் வாழ்க்கை ‘வன யுத்தம்’ என்ற தலைப்புடன் பெரிய திரையில் படமாக விரியவிருக்கிறது. இந்தப்படம் எல்லா மட்டத்திலிருந்தும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதற்குக் காரணம், படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். ‘குப்பி’யில் ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட சிவராசனின் இறுதிக்கட்ட பெங்களூர் வாசத்தைப் படம் பிடித்துக் காட்டியிருந்த ரமேஷ், இப்போது வீரப்பனின் தொலைந்த வாழ்க்கையை வரலாறாக்க வனம் புகுந்திருக்கிறார்.
‘‘ஆனா என் படத்துல நான் வீரப்பனை ஹீரோவாகவோ, வில்லனாகவோ காட்டலை. அதை மக்கள் தீர்மானிக்கட்டும். முப்பது வருஷம் காட்டுக்கு ராஜாவா இருந்த வீரப்பனின் வாழ்க்கையில என்ன நடந்தது, வீரப்பன் கடத்தல்காரரா ஆனது எப்படி, கடத்தியது எப்படி, அவருக்கு ஆயுதங்கள் வந்தது எப்படிங்கிற சம்பவங்களை ரசிகர்களோட பார்வைக்கு வைக்கிறேன். அதுக்காகவே பதினொரு வருஷங்கள் வீரப்பனைப் பற்றி தகவல்களைச் சேகரிச்சுக்கிட்டே வந்திருக்கேன். இதுக்காக நான் சந்திச்சவர்களோட எண்ணிக்கை இருநூற்று ஐம்பதுக்கு மேல போகும்...’’ என்கிற ரமேஷ், இந்தப் படத்தைப் பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு இப்போதுதான் முடிவுக் கட்டத்துக்கு வந்திருக்கிறார்.
‘‘தயாரிப்புக்கான திட்ட மிடல்கள்ல நிறைய உழைப்பும், தேவையும் இருந்தது. அதுக்குத் தயாராகறதுக்குத்தான் இத்தனை காலம். கடைசியில என்னோட அக்ஷயா கிரியேஷன்ஸோட சாய்ஸ்ரீ சினிமாஸும் தோள் கொடுக்க, என் நீண்ட நாள் கனவு இன்னைக்கு நிஜமாகியிருக்கு...’’ என்ற ரமேஷ் தொடர்ந்தார்...
‘‘கன்னட ஹீரோ ராஜ்குமார் கடத்தல்ல தொடங்கற கதை, வீரப்பன் யார்ங்கிற பத்திரிகையாளரோட பார்வை வழியா நிஜ சம்பவங்களோட போகுது. தமிழ்நாடு, கர்நாடக மக்களுக்கு வீரப்பனைப் பற்றி நிறையத் தெரியும்கிறதால, தெரிந்த பகுதிகளைவிட தெரியாத விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து படத்தை உருவாக்கியிருக்கேன். இதுல வீரப்பன்கூட வாழ்ந்தவங்க, வீரப்பனைத் தேடிப்போன படையில இருந்த போலீஸ் அதிகாரிகள், வீரப்பனால கடத்தப்பட்டவங்கன்னு எல்லா மட்டத்திலும் விஷயங்களைக் கேட்டு, கதையை எழுதியிருக்கேன்...
இதுல வீரப்பனா கிஷோர் நடிச்சிருக்கார். இந்த வேடத்துக்காக ஆறு வருடங்கள் அவரும் பல பேர்கிட்ட பேசி வீரப்பனைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு உடல் இளைச்சு, கறுத்து அப்படியே நிஜ வீரப்பனைக் கண்முன்னால நிறுத்தியிருக்கார். வீரப்பன் கதை முடியக் காரணமான டிஜிபி விஜயகுமார் வேடத்தில ஆக்ஷன் கிங் அர்ஜுனும், ஜாயின்ட் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் வேடத்தில ரவி காலேயும் நடிச்சிருக்காங்க. எஸ்.பி.ஹரி கிருஷ்ணனா சம்பத்தும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியா விஜயலட்சுமியும், சேத்துக்குளி கோவிந்தனா சம்பத்ராமும் நடிச்சிருக்காங்க. நடிகர் ராஜ்குமாரா இந்தி நடிகர் சுரேஷ் ஓபராய் நடிச்சிருக்கார். ஒரு முக்கிய கேரக்டர்ல வ.ஐ.ச.ஜெயபாலன் நடிச்சிருக்கார்.
என்னோட திரைக்கதைக்கு அஜயன்பாலாவோட வசனங்கள் ஜீவனா அமைஞ்சிருக்குன்னா, அந்த வாழ்க்கையை அப்படியே கண் முன்னால கொண்டுவந்து நிறுத்தியிருக்கு விஜய் மில்டனோட ஒளிப்பதிவு. அதுக்குத் தோதான படத்தொகுப்பை ஆன்டனி கவனிக்க, ‘குப்பி’யில உணர்ச்சிகளை இசையா தந்த சந்தீப் சௌடா இதுக்கும் உணர்வுபூர்வமான இசையைத் தந்திருக்கார். சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைச்சிருக்கார்.
படமெடுக்க வீரப்பன் வாழ்ந்த அதே மாதேஸ்வரன் மலை, தர்மபுரி, ஈரோடு பகுதிகள்ல காட்டுக்குள்ள போனப்ப கிடைச்ச அனுபவங்கள் காலத்துக்கும் மறக்க முடியாதவை. எந்த லொகேஷன்ல என்ன நடந்ததோ அதை அங்கேயே படம் பிடிச்சிருக்கோம். நிஜத்திலேயே ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸில வீரப்பனைத் தேடியவங்க எங்க கூட வந்தாங்க. ‘வீரப்பனைப் பிடிச்சா அவன்கூட நின்னு போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சோம். அது அப்ப முடியலை...’ன்னு சொல்லி, வீரப்பனா நடிச்ச கிஷோர் கூட நின்னு அவங்க போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ராஜ்குமார்கூட கடத்தப்பட்ட நாகப்பாவும், அவரைக் கடத்திய வீரப்பன் ஆட்களும் எங்களோட ஷூட்டிங்குக்கு வந்தாங்க. பத்து வருஷத்துக்கு முந்தி எதிரிகளா இருந்தவங்க, எங்களால நண்பர்களா ஆகிட்டாங்க. அவங்க அங்கங்கே நினைவுபடுத்திச் சொன்னதையெல்லாம் அங்கேயே எடுத்துச் சேர்த்தோம்.
ஒரு இடத்துல எனக்கு வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கியோட ‘பட்’டுங்கிற கட்டைப்பகுதி கிடைச்சது. அதை ஒரு நினைவுச்சின்னமா பத்திரமா வச்சிருக்கேன். வீரப்பன் வாழ்க்கையைத் தேடி நாங்க போன வழி சரியானதுதான்ங்கிறதுக்கு அது ஒரு ஆதாரச்சின்னமும் கூட..!’’