வீட்டுத் தலைவர்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        வீட்டு பிரதான அறையில், பூவேலைப்பாடுகள் மிக்க மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த அந்த தலையாட்டிப் பொம்மையை பார்த்து அன்று ஒருநாள் தெரியாத்தனமாக இவ்வாறு கூறிவிட்டேன்... ‘‘அப்பா! சின்னம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க...’’

ஆனால், சின்னம்மா சொன்ன ஒரே காரணத்துக்காக கடந்த அரை மணி நேரமாக தோட்டத்தில் செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அப்பா, தன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை பிடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடி வந்தார் என்றால், அதற்குக் காரணம் அவர் என் சின்னம்மா மேல் வைத்திருக்கும் மேதகு மரியாதை உணர்வுதான்.
அது எப்படி வந்தது, எப்போது வந்து தொலைத்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ‘மரியாதை’ என்ற வார்த்தைக்கு டிக்ஷனரியில் அர்த்தம் தேட வேண்டிய அவசியமே இல்லை. அதற்கு வாழும் அர்த்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிஸ்டர் மோகன் ஆகிய என் அப்பாதான் என்பதை 3 தெரு தள்ளியிருக்கும் ராஜீவ் நகரின் கடைசியில் கட்டப்பட்டிருக்கும் ஓட்டு வீட்டில் உள்ள மீனா அக்காவின் 5 வயது குழந்தையிடம் கேட்டாலும் சொல்லிவிடும். அந்தக் குழந்தையின் நனவிலி மனதில் கூட என் தந்தையின் குணநலன் பதிந்திருக்கிறது.

கொடுக்கப்பட்டது 4 இட்லிதான் என்றாலும், மேலும் ஒன்று வேண்டும் என்று கேட்காமல் பெரிதாக ஏப்பம் விட்டு தான் வயிறார சாப்பிட்டு விட்டதை பறைசாற்றிவிட்டு மெலிதாக சிரிக்கும் நாகரிகம் தெரிந்தவர் என் தந்தை. அப்படியே இன்னொரு இட்லி கேட்டாலும் அது கிடைக்கப் போவதில்லை என்பது எனக்கு மட்டுமல்ல... மீனா அக்காவின் குழந்தைக்குக்கூடத் தெரியும். அந்த 4 இட்லி கூட ஒரு குடும்பத் தலைவர் உழைத்துப் போடுவதற்கு உயிருடன் இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் என்பது தெள்ளத் தெளிவு.

சின்னம்மா ஏதேனும் ஆர்டர் போட்டால் போதும்... சிரமேற்கொண்டு அந்த ஆர்டரை ஒபே பண்ணுவதில் ராணுவ ஒழுங்கைக் கடைப்பிடிப்பார் அப்பா. அன்று ஒருநாள் சப்பாத்தி மாவை பிசையச் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுவிட்டார் சின்னம்மா. ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோதும் அவர் மாவையே பிசைந்துகொண்டிருந்தார். அன்று அவர் வாங்கிய திட்டுக்கள் அவரது சொரணையற்ற மூளைக்குள் சென்று தாக்கி, சிறிது கண்ணீரை வெளியே கொண்டு வந்துவிட்டது. ஆம், சப்பாத்தியை சுட்டு வைக்கச்சொன்னால்தான் அதைக்கூட சுட்டு வைப்பார். அவர் ஒரு எந்திரமாக மாறியிருந்தார்.

என் தந்தையைப் பொறுத்தவரை தலைக்குக் கீழ் கழுத்து என்ற ஒரு பகுதி இருப்பது எதற்கு என்று கேட்டால், அது ‘சரி’ என்று தலையாட்டுவதற்காகவே என பதில் வரக்கூடும். கண்கள் எப்பொழுதுமே தரையை நோக்கித்தான் இருக்கும். அப்படி தரையில் என்னதான் இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை போன ஜென்மத்தில் தரையைத் தோண்டி பழம்பெரும் நாகரிகங்களை கண்டுபிடிக்கும் ஆர்க்கியாலஜிஸ்ட்டாக இருந்திருப்பாரோ என்னவோ!

தாழ்வுணர்ச்சியை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு வெளிப்படுத்த வழி தெரியாமல் பரிதாபமாகத் திரிந்து கொண்டிருக்கும் என் தந்தைக்கு, தன்னைப் போன்று அல்லது தன்னைவிட சமுதாயத்தில் வெட்கித் திரியும் ஜீவன்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. அதில் அவருக்கு ஒருவித அமைதியும் கிடைக்கும். தன்னைப் போன்று துன்பப்படு பவர்களை காண நேர்ந்தால், வாழ்க்கை தனக்கு மட்டுமல்ல, பலருக்கும் அவ்வாறுதான் உள்ளது என்பதை உணர்ந்து அவரது மனம் அமைதி அடையும். இங்கு மட்டும் அல்ல தீ, ஊரெங்கும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட விஷயத்திற்கு அடிமையாவது இப்படித்தான். சிகரெட் பிடிப்பதில் அடிமைத்தனம், காபி குடிப்பதில் அடிமைத்தனம், பேப்பர் படிப்பது, சீரியல் பார்ப்பது, தெருச்சண்டையை வேடிக்கை பார்ப்பது... என சில்லரை விஷயங்களில் மனம் ஆறுதல் அடைய முயற்சி செய்து மறுபடி மறுபடி தோற்கும்.

மிஸ்டர் மோகனுக்கு இந்த சமுதாயம் & அதாவது 99 சதவீதம் சின்னம்மா & அனுமதித்த வரை அதிகாலையில் பேப்பர் படிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒருவித ரவுடித்தனத்துடன் பேப்பரை ஆக்கிரமித்துக் கொண்டு வரிவரியாக, விலாவாரியாக பரீட்சைக்கு படிப்பதைப் போல் படிப்பதில் அவரது உள்மனம் ஒருவித ஆறுதலை அடைந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலையிலிருந்து, ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மணல் லாரி ஏறியதுவரை அத்தனை கொடூரச் செய்திகளும் மிஸ்டர் மோகனை நிகழ்வாழ்க்கையின் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க உதவியது என்று சொன்னால் அது மிகையில்லை.

செய்தித்தாளின் மூன்றாம் பக்கத்தில், ஏதோ ஒரு செய்தியில் வைக்கப்படாத புள்ளி குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு காபி என்கிற அந்தத் திரவத்தைக் கொடுக்க நேர்ந்தது குறித்து நான் சந்தோஷமடைந்தேன். என்னால் நம்ப முடியாத விஷயங்களுள் ஒன்று, அந்த திரவத்தை அவர் ரசித்து குடிப்பது மட்டுமல்ல. இன்னொரு கிளாஸ் வேண்டும் என்கிற தோரணையில் என்னைப் பார்ப்பதும்கூடத்தான். காபியை கஷாயம் போல் செய்வதில் வல்லுனரான எனது சின்னம்மா, கஷாயத்தை எப்படிச் செய்வார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்னால். அதற்கெல்லாம் அதீதமான கற்பனை சக்தியும், கசப்புணர்ச்சியும்
வேண்டும்.
சின்னம்மாவின் உணர்ச்சிகள் காபி, இட்லி, சாம்பார் போன்ற படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியும். சாம்பாருக்கும், ரசத்துக்கும் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்கள் தோல்வியைத் தழுவுவதைத் தவிர வேறு வழியில்லை. வெறும் தண்ணியை ஊற்றி பழைய சாதமாக சாப்பிட நான் என்றோ கற்றுக்கொண்டு விட்டேன்.

என் தந்தையின் மூத்த மனைவியின் பிள்ளையான நானும், என் தந்தையும் தினசரி சின்னம்மா விட்டெறியும் அம்புகளுக்கு பலியாகிக் கொண்டிருந்தோம். விஷம் தடவிய ஒவ்வொரு அம்புகளும் தைத்துச்சென்ற இடங்களின் வடுக்கள் கணக்கில் அடங்காதவை. நீர் வற்றிய கிணற்றைப் போல, கண்ணீர் வற்றிய கண்களுடன் நடமாடிக் கொண்டிருந்த என் தந்தை வாங்கி வந்த சாபங்களுக்கு நான் ஏன் பலியாகிக்கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி வெகுகாலமாகவே என்னை நச்சரித்துக் கொண்டுதான் இருந்தது.

ஆறரை மணிக்கு செய்தித்தாள், 7 மணிக்கு பாத்திரம் கழுவுதல், ஏழரை மணிக்கு துணி துவைத்தல், 8 மணிக்கு அலுவலகம் கிளம்புதல், 9 மணிக்கு விடுதலை...

விடுதலைக்காகப் போராடியவர்களில் ஒருவரின் பெயரைச் சொல்லுமாறு என் வரலாற்று ஆசிரியர் கேள்வி கேட்டபோது, ஏதோ சிந்தனையில் இருந்த நான் ‘மிஸ்டர் மோகன்’ என்று கூறிவிட்டேன். எனது ஆசிரியரும் ‘வெரிகுட்’ என்று பாராட்டினார். அன்றுதான் எனக்கே தெரியும்... காந்தியின் முழுப்பெயர் ‘மிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்று.

அலுவலகம் செல்லும் அவஸ்தையில் 60 நொடிகளுக்குள் உணவு உண்ணும் சாதனைகள் என் தந்தையால் தினசரி நிகழ்த்தப்படுவதுண்டு. உருட்டிய கவளங்களை யானைகள் விழுங்குவது போல், இரண்டு உருண்டைகளை உள்நாக்கில் வைத்து அழுத்தி, தண்ணீரை வாய்க்குள் கொட்டி விட்டு, விருட்டென்று வெளியேறும் சாதனை நிகழ்ச்சி தினசரி நடைபெறுவதை இந்த உலகில் யார்தான் கவனிக்கிறார்கள். அதனால் அவர் 50 கிலோ தாஜ்மஹாலாகவே இன்று வரை இருக்கிறார். அவரது எடைக்குத் தகுந்தாற்போல் டி.வி.எஸ் 50 ஒன்றை வைத்திருந்தாலும், அதிகமாக காற்றடித்தால் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்தே பயணத்தைத் தொடர்வார்.

சின்னம்மாவின் நெருக்கமான தோழியான பக்கத்து வீட்டு சரளா அக்காவின் மகன் குட்டிமணியைப் பற்றி சொல்ல வேண்டிய விஷயங்கள் சில உண்டு. 7ம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனுக்கு நியாயமாகவும், நேர்மையுடனும் வைத்திருக்க வேண்டிய பெயர் குண்டுமணி, இப்பொழுதே 50 கிலோவைக் கடந்து 60 கிலோவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான்.

அவன் சாப்பிடும் நேரம் போக சில மணித்துளிகள் படிப்பான் என்று ஊருக்குள் பேசிக் கொள்வார்கள். அவனது தாடை எலும்புகள் கடினமானவை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அதை உபயோகப்படுத்தி கடினமாக உழைத்துக் கொண்டிருப்பான். வயிற்றுக்கு மேல் கழுத்து என்னும் ஒரு உறுப்பு உண்டு என்று சொன்னால் அவன் நம்ப மாட்டேன் என்கிறான். அவனைப் பொறுத்தவரை வயிற்றுக்கு மேல் தலை மட்டும் தான். அவனுக்கு உடை தைக்கும் தையல் தொழிலாளி வியர்வை சிந்தி தைக்கும் உடைகள் எதுவுமே ஒரு மாதத்திற்கு மேல் அவனுக்கு பத்துவதில்லை.

விஷயம் என்னவென்றால், குட்டிமணியின் தாய் சரளா என் சின்னம்மாவின் நெருங்கிய தோழி என்பதால், குட்டிமணியை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு என் தந்தையின் தலையில் வந்து விடிந்தது. சின்னம்மாவினால் அந்த கட்டளை பிறப்பிக்கப்பட்ட போது, மிஸ்டர் மோகன் கண்கலங்கியதை நான் கவனித்தேன். அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல் அவர் நிஜமாகவே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டார். இருப்பினும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.

குட்டிமணி அந்த பரிதாபமான டி.வி.எஸ். 50 மீது முதன்முதலில் ஏறி உட்கார்ந்தபோது அதன் சக்கரப்பகுதியில் சற்று கோட்டம் விழுந்து விட்டது. சின்னம்மாவின் முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்த என் தந்தை, ஆக்சிலேட்டரை பல்லைக் கடித்துக் கொண்டு திருகி முறுக்கினார். வண்டி கதறியதே தவிர, ஒரு இன்ச் தூரம் கூட நகரவில்லை. ஒரு கையில் மாம்பழத்தையும், மற்றொரு கையில் பிஸ்கெட் பாக்கெட்டையும் வைத்துக்கொண்டு மாறி மாறி சாப்பிட்டுக்கொண்டிருந்த குட்டிமணி இதற்கெல்லாம் கவலைப்படுவதாய் தெரியவில்லை.

கால்கள் நடுங்க, கண்கள் கலங்க, கைகள் வெடவெடக்க மிஸ்டர் மோகன் அந்த டி.வி.எஸ். 50யை ஒரு ரிக்ஷாவாக நினைத்து தள்ளிக் கொண்டு சென்றார் மெக்கானிக் ஷாப்புக்கு. உடலில் இவ்வளவுதான் வியர்வை வடிய வேண்டும் என்கிற வரையறையைத் தாண்டி கன்னாபின்னாவென வியர்த்து ஒழுகிய உடம்புடன் நடந்து வந்த மிஸ்டர் மோகனைப் பார்த்து பரிதாபப்பட்ட மெக்கானிக் கடை முருகன், வண்டியின் புல்லிங் கெபாசிட்டியை அதிகரித்துக் கொடுத்தார். ‘எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்’ என பரிதாபமாக சொல்லியனுப்பினார். நியாயமாக 50ல் போக வேண்டிய வண்டி 15, 16, 17, திரும்பவும் 15 என வேகமுள் துடிதுடிக்க நிதானமாய் பயணித்து அந்த மூட்டையை பள்ளியில் இறக்கியது.

இந்த தண்டனையை தினமும் அனுபவித்து வந்த என் தந்தை, போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேன் என பிள்ளையார் படத்திற்கு முன் நின்று தினமும் நொந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தினமும் சாப்பிடும் 4 இட்லியிலிருந்து கிடைக்கும் கலோரி அனைத்தும் குட்டிமணியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதிலேயே தீர்ந்து விடும் என்பதால், அவர் மேலும் மேலும் எடை குறைய ஆரம்பித்தார்.

என் தந்தை எப்பொழுது இப்படியொரு அடிமையானார் என யோசித்துப் பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் அடிமையாக்கப்படுகிறார்கள் என்கிற கருத்து நிலவுகிறது. ஆணடிமைத்தனத்தைப் பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

தான் இரண்டாம் தாரமாக வற்புறுத்தப்பட்டதால் ஏற்பட்ட கோபமாக இருக்கலாம். தனக்கென்று வரவேண்டிய அடிமை ஏற்கனவே இன்னொரு பெண்ணுக்கு அடிமையாக இருந்தவன் என்கிற மனோபாவமாக இருக்கலாம். எப்பொழுதும் பெண்களுக்கு, தன்னுடைய அடிமை கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உண்டோ என்னவோ? 

சித்தி கொடுமையிலிருந்து என்னை விடுவித்துவிட்டு தன்னை பலிகொடுத்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. சின்னம்மா இன்று வரை என் தந்தையை பழி வாங்கிக்கொண்டிருக்கிறார் என்றால் பின்னணியில் நிச்சயமாக வலிமையான ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும். என் தந்தை அவரது பழிவாங்குதலை மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்கிறார் என்றால் அதற்கும் காரணமில்லாமல் இருக்காது. உண்மையில் அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்திருந்தால் நான் ஒதுக்கப்பட்டிருப்பேன் என்று நினைத்திருப்பார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவருக்கு என்மேல் மிகுந்த அன்பு உண்டு என்றாலும், வரைமுறையின்றி அடிமைத்தனத்தில் வாழும் அவர் மேல் எனக்கு சற்றும் அன்பு இல்லை.

அவர்களுக்குத் திருமணமான புதிதில் & 3 மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் & திடீரென ஒருநாள் மாவு ஆட்டும் கல்லில் மாவரைக்க ஆரம்பித்தார். ஏதோ உடற்பயிற்சிக்காக மாவரைக்கிறார் என்றுதான் அப்பொழுது நினைத்தேன். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அந்த கல்லுக்கு அவர் ஓய்வு கொடுக்கவேயில்லை. அந்த மூன்று மாத இடைவெளிக்குள் தான் ஏதோ ஒருநாளில் அவர் அடிமையாகி இருப்பார் எனத் தோன்றுகிறது. திருமணமான புதிதில் ஏதோ ஒருநாள் சின்னம்மா சிரித்த முகத்துடன் உணவு பரிமாறிய காட்சி புகை மூட்டமாக ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் இன்று அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இதெல்லாம் பிரமையாக இருக்கலாம், அல்லது நிறைவேறாத விருப்பங்களின் வெளிப்பாடாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. 
எல்.சூர்யராஜ்