காதல் முடிச்சுகளை அவிழ்க்கிறார் பிரசன்னாநட்சத்திரக் காதல்களுக்கும், கல்யாணச் செய்திகளுக்கும் எப்போதுமே வீரியம் அதிகம். ‘‘இல்லவே இல்லை...’’ என்று மறுக்கப்பட்ட பல நட்சத்திரக் காதல்களும் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. சமீபத்திய பிரபுதேவா & நயன்தாரா காதல் வரை உதாரணம் சொல்லலாம். அப்படி கடந்த இரண்டு வருடங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த பிரசன்னா & சினேகா காதலும் இப்போது ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது.
‘‘விரைவில் நிச்சயதார்த்த தேதியை அறிவிப்போம்...’’ என்கிற அளவில் பிரசன்னா மௌனம் கலைக்க, கோலிவுட்டில் பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது. சினேகாவோ கடல் கடந்து தோஹாவில் இருக்கும் சகோதரனின் வீட்டுக்குச் சென்றிருக்க, தாம் காதலைக் கடந்து வந்த பாதை பற்றிச் சொன்னார் பிரசன்னா.
‘‘இந்த விஷயத்தை நானும் சினேகாவும் ஒண்ணாதான் பத்திரிகைகளுக்கு அறிவிக்க இருந்தோம். ஆனா ஒரு மீடியாவில எங்களோட நிச்சயதார்த்த செய்தியா ஒரு தவறான தகவல் வர, அது குறித்த விளக்கங்கள் சொன்னப்ப இதை ஒத்துக்கொள்ள வேண்டியதாகிடுச்சு. ஏன்னா இதுல ஒளிச்சு மறைக்க ஒண்ணுமில்லை. ஆனா எங்க காதல் உறுதிப்பட்டு, ரெண்டு வீட்டாரோட சம்மதம் வாங்கியிருக்க நிலையில, ஒன்றுபட்டு அறிவிச்சா முறையானதா இருக்கும். சினேகா வெளிநாட்டில் இருக்கும்போது நான் மட்டும் இதைப்பற்றிப் பேசிக்கிட்டிருக்கிறது சரியா இல்லைன்னு தோணுது...’’ என்று ஆரம்பித்தார் பிரசன்னா.

‘‘ரெண்டு பேரும் பேசறதை அப்புறம் வச்சுக்குவோம். உங்க காதல் உறுதிப்பட்டதை உங்க நிலையிலேர்ந்து சொல்றதுல என்ன தயக்கம்...?’’ என்று நியாயமான கேள்வியை வைக்கவும், பேச ஆரம்பித்தார் பிரசன்னா...
‘‘சினேகாவோட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்துலதான் அறிமுகம். எல்லா கோ & ஆர்ட்டிஸ்ட் போல நாங்களும் பழகினாலும் அதைத் தாண்டி நல்ல புரிந்துகொள்ளல் இருந்தது. மத்த நடிகைகள்கிட்டேர்ந்து சினேகாவை தனிச்சுக் காட்டிய விஷயம், பழகும்போது சாதாரண பெண்ணா அவங்க தெரிஞ்சது! அதேபோலத்தான் என் கேரக்டரும்ங்கிறதால, அது அவங்களைக் கவனிக்க வச்சிருக்கு. இது நல்ல நட்புக்கு அடித்தளமா அமைஞ்சது. சினேகாவும் சரி, நானும் சரி எங்க குடும்பங்கள் மேல அக்கறை கொண்டிருந்தோம். இந்த அடிப்படை குணங்களால படம் முடிஞ்சும்கூட நட்பு தொடர்ந்துக்கிட்டிருந்தது. ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவை பேசிக்கிட்டிருந்தோம்.
‘அச்ச முண்டு அச்சமுண்டு’ல பழகியப்பதான், ரெண்டு பேருமே ஒரே இண்டஸ்ட்ரியில இருந்தாலும் ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் அதிகமா தெரிஞ்சுக்காம இருந்தோம்ங்கிறதே தெரிய வந்தது. அவங்க படத்துல நான் ‘பார்த்திபன் கனவு’,
‘வசூல்ராஜா’, ‘ஆட்டோகிராப்’ மட்டும்தான் பார்த்திருந்தேன். சினேகா என்னைவிட சுத்தம். என் படங்கள் ஒண்ணுகூட பார்த்த தில்லையாம். அப்ப ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டோம். ரெண்டு பேரும் அடுத்தவர் நடிச்ச படங்களை தினமும் ஒவ்வொண்ணா பார்த்து முடிக்கணும்னு! மாத்தி மாத்தி எல்லா படங்களையும் பார்த்து எங்க நடிப்பைப் பத்தி விமர்சனங்களை பரிமாறிக்கிட்டோம். அவங்களுக்கு என் படங்கள்ல ‘அழகிய தீயே’, ‘கண்டநாள் முதல்’, ‘அஞ்சாதே’ பிடிச்சிருந்தது.
புதுசான எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் பொதுவா பிடிச்சிருந்தது. அடுத்தவர் உணர்வை மதிச்சு அவங்கவங்களுக்கான சுதந்திரத்தில தலையிடாத தன்மை ரெண்டு பேருக்குமே பொதுவா இருந்தது. ‘நான் ஃப்ரீயா இருக்கேன். உன் நினைப்பு வந்தது...’ன்னு மணிக்கணக்கா கடலை போடற வித்தையோ, ‘நான் பிஸியா இருக்கேன். அப்புறம் பேசலாமா..?’ங்கிற மாதிரி பகட்டோ எங்களுக்குள்ள இருந்ததில்லை. இப்படி இயல்பா நட்பு தொடர்ந்ததுல ஒரு கட்டத்துல அவங்க எதிர்பார்க்கிற ஒரு ஆணா நானும், நான் எதிர்பார்க்கிற ஒரு பெண்ணா

அவங்களும் தெரிஞ்சாங்க. இது வெறுமனே நட்பு மட்டும் இல்லைன்னு அந்தக் கட்டத்துலதான் புரிஞ்சது. ஆனா ரெண்டுபேருக்குமே ஒரு கேள்வி பொதுவா இருந்தது. ‘இந்த உறவு இன்னும் எத்தனை நாளைக்கு இதே ஈர்ப்போட போகும்..?’
அதுக்காக ஒரு உடன்பாட்டுக்கு வந்தோம். ‘இந்தக் காதலோட ஆயுளைத் தீர்மானிக்க இப்படியே பரஸ்பர மரியாதையோட பழகுவோம். இதுதான் வாழ்க்கைன்னு ஒரு கட்டத்தில தோணும்போது வீட்டில சொல்லி திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்குவோம்’னு முடிவெடுத்து கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகுது. இப்ப ரெண்டு வீட்லயும் ஒப்புதல் வாங்கிட்டோம். இருந்தாலும் எப்ப நிச்சயம் வச்சுக்கலாம்னு இன்னும் முடிவெடுக்கலை. அதுக்கு இன்னும் அஞ்சு, ஆறு மாதங்கள் ஆகலாம். இப்போதைக்கு எங்க காதல் நிச்சயமானதை மட்டும் உறுதி செய்யறேன்..!’’
உலகமே சினேகாவை ‘புன்னகை இளவரசி’யாக பார்க்க, பிரசன்னாவை பெரிதும் கவர்ந்தது சினேகாவின் கண்கள். ‘‘சினேகாவோட கண்களைப் பார்க்கும்போது ‘சுட்டும் விழிச்சுடர்தான்
கண்ணம்மா, சூரிய சந்திரரோ..?’ன்னு கேட்ட பாரதி வரிகள்தான் தோணுது..!’’ என்கிறார்.
சுருக்கமா ‘அழகிய தீ’ன்னும் சொல்லலாம் பாஸ்..!
வேணுஜி
படம்: ராஜன் பால்