வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தலையில் துண்டைப் போடும்விதமாக கடந்த 2 ஆண்டுகளில் 13 முறை வட்டியை உயர்த்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி. ‘பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இதுதான் வழி’ என்கிறார் அதன் கவர்னர் சுப்பா ராவ். இன்னொருபக்கம் பெட்ரோல் விலையும் உயர, அதன் தொடர்ச்சியாக விலைவாசி விண்ணுக்குப் போகிறது. கூடவே பணவீக்கமும் எகிறுகிறது. இந்த மாயச்சுழல் பற்றி ஆடிட்டரும் பொருளாதார நிபுணருமான எம்.ஆர்.வெங்கடேஷ் விளக்குகிறார்.
அதென்ன பணவீக்கம்? விலைவாசி உயர்வுதான் பணவீக்கம். எளிமையாகச் சொன்னால், 2010 நவம்பர் 14 அன்று 100 ரூபாய்க்கு ஒரு கூடை நிறைய பொருட்களை வாங்குகிறீர்கள். 2011 நவம்பர் 14 அன்று அதே பொருட்களை, அதே அளவில் வாங்கும்போது அது 112 ரூபாய் என்றால், அந்த ஆண்டின் வீக்கம் 12 சதவிகிதம். பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கு மத்திய அரசு சில பொருட்களை நிர்ணயம் செய்திருக்கிறது. அவற்றின் விலைகளின் ஏற்ற இறக்கத்தை வைத்துத்தான் இதைக் கணக்கிடுவார்கள். உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் வாரம் ஒருமுறையும், ஒட்டுமொத்த பணவீக்கம் மாதம் ஒருமுறையும் கணக்கிடப்படும்.
பணவீக்கத்துக்கும், வட்டி விகித உயர்வுக்கும் என்ன சம்பந்தம்?உற்பத்தி குறைந்தாலோ, தேவை அதிகமானாலோ பொருட்களின் விலை உயரும். அதாவது, பணத்தின் மதிப்பு குறையும். இதைக் கட்டுப்படுத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது உடனடியாக செய்யக்கூடியதல்ல. நான்கைந்து மாதங்களாவது ஆகும். இதற்கு மாற்றுவழி, மக்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பது. பாக்கெட்டில் பணம் இல்லாவிட்டால் பொருளை எப்படி வாங்குவீர்கள்..? இயல்பாகவே பொருளின் தேவை குறைந்துவிடுமல்லவா! அந்த யுக்தியின் வெளிப்பாடுதான் வட்டி விகிதத்தை உயர்த்துவது. ஒன்று, அதிக வட்டி கிடைப்பதால் கையிலிருக்கும் பணத்தை சேமிப்பார்கள். அல்லது, வட்டி அதிகமென்று கடன் வாங்க மாட்டார்கள். விலை தானாகக் குறைந்துவிடும். இது உலகளாவிய நடை முறைதான். ஆனால் உற்பத்தியை அதிகரிப்பதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு. அதற்கான ஏற்பாடுகள் இங்கே இல்லை.
வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே போனால் அமெரிக்காவைப் போல இந்தியாவும் பொருளாதாரச் சரிவை சந்திக்கும் என்கிறார்களே?அப்படி ஆகாது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பொருளாதாரத்தில் ஏகப்பட்ட அடிப்படை வேறுபாடுகள் உண்டு. அவர்கள் வாழ்க்கைமுறை வேறு; நம் வாழ்க்கைமுறை வேறு. அங்கே பணத்தின் மதிப்பு மட்டுமல்ல, பொருட்களின் மதிப்பும் குறைந்தது. அதனால்தான் பொருளாதாரம் சரிந்தது. இங்கே பொருட்களின் மதிப்பு உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு கோடி வீடுகள், வாங்க ஆளில்லாமல் கிடக்கின்றன. இங்கே வீடுகளின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வருமானமும் அதிகரிக்கிறது. கடனை கட்டாவிட்டால் வீட்டைப் பறிமுதல் செய்து, பணமுள்ள வேறொருவருக்கு விற்று வங்கி லாபம் பார்த்து விடமுடியும்.
வட்டி விகித உயர்வுக்கும் பெட்ரோல் விலைக்கும் என்ன தொடர்பு?
ஒரு தொடர்பும் இல்லை. இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகள். ஆனால், இவை இரண்டிலும் ஒருவகை அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. கிராமிய உற்பத்திகளை திட்டமிட்டு அழித்துவிட்டு பொருட்களுக்கு வெளிநாடுகளை நாடவேண்டிய நிலையை உருவாக்கி விட்டார்கள். வெளிநாடுகளில் பொருட்களை வாங்க டாலருக்கு நிகராக பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. நன்கு பொருளாதாரம் தெரிந்தவர்கள் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 22 முதல் 30 ரூபாய்தான் என்கிறார்கள். ஆனால், நம் ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பை ஏறக்குறைய 50 ரூபாய் என்று தீர்மானிக்கிறது. ரூபாயின் மதிப்பை உயர்த்தி, டாலரின் மதிப்பைக் குறைத்தால் பெட்ரோல் விலை தானாகக் குறைந்து விடும். சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 100 டாலர் என்று வைத்துக் கொள்ளுங்கள். 1 டாலர் 50 ரூபாய் என்றால், 1 பீப்பாய் 5 ஆயிரம் ரூபாய். டாலரின் மதிப்பு 40 ரூபாய் என்றால் 4 ஆயிரம் ரூபாய்க்கே நமக்கு ஒரு பீப்பாய் கிடைத்துவிடும். இவற்றோடு மத்திய, மாநில அரசுகள் வாங்கிக் குவிக்கும் வரிகளைக் குறைத்தால் பாதிக்கும் மேல் விலை குறைத்து விற்கலாம்.
மிக எளிதான தீர்வாக இருக்கிறதே... இதைச் செய்வதில் என்ன சிக்கல்?அதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. டாலரின் மதிப்பைக் குறைத்து, ரூபாயின் மதிப்பை அதிகரித்தால் இந்தியாவில் முதலீடு செய்திருக்கிற முதலாளிகளுக்கு லாபம் குறைந்து விடும். நம் அரசாங்கம் முதலாளிகளுக்கு ஆதரவானது. அவர்கள்தானே பின்புலத்தில் இருந்து அரசை இயக்குகிறார்கள்! அதனால்தான் டாலரில் கைவைக்கத் தயங்குகிறார்கள். இந்தியாவில் அதிவேகமாக இன்னொரு வேலையும் நடந்துவருகிறது. சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களின் பட்டியல் விரைவில் வெளிவரவிருக்கிறது. ‘விக்கிலீக்ஸ்’ அசாஞ்சே உள்ளிட்ட சிலரிடம் ஏற்கனவே அந்த லிஸ்ட் இருக்கிறது. அதனால் சுதாரித்துக்கொண்ட சில பெரும்புள்ளிகள், சுவிஸ் வங்கிப் பணத்தை இந்தியாவுக்குள்ளேயே வேறு வழிகளில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். டாலரின் மதிப்பைக் குறைத்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்களே!
விலைவாசி குறைய வழியே இல்லையா?எந்த சமரசமும் இல்லாமல் அரசாங்கம் சாட்டையை எடுத்தால் நிச்சயம் குறைக்கலாம். முதலில் வயலுக்கும், சந்தைக்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும். 100 ரூபாயில், 40 முதல் 50 ரூபாய் தரகர்களுக்குப் போய்விடுகிறது. விளைவிப்பவனுக்கும் வியாபாரிக்கும் கிடைப்பதை விட 10 மடங்கு லாபம் இது. தமிழகத்தில் இருக்கும் எல்லா மார்க்கெட்களிலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாஃபியாக்கள் செயல்படுகிறார்கள். வியாபாரிகள் கொடுக்கும் ரன் வட்டி, சூடு வட்டி, மாமூல் எல்லாம் விலையாக மாறி நுகர்வோர் தலையில்தான் விழுகிறது. இந்த மாஃபியாக்களைக் கட்டுப்படுத்தினாலே 20 சதவீதம் விலை குறையும். பங்களாதேஷில் இருப்பது போல மாநில அரசாங்கமே கிராமின் வங்கிகளைத் தொடங்கி குறு
வியாபாரிகளுக்கு கடனுதவி செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு இன்னொரு முக்கியக் காரணம், யூகவணிகம். யூகவணிக சந்தை அரசியல்வாதிகள் கையில்தான் இருக்கிறது. வியாபாரம் சூதாட்டக் களமாக மாறிவிட்டது. இதைத் தடை செய்ய வேண்டும்.
பணவீக்கத்தை தடுக்கிறோம் என்று கூறி வட்டி விகிதத்தை உயர்த்துவது புற்றுநோய்க்கு பேண்ட் எய்ட் போடுவது போலத்தான்.
ஒரு பயனும் இருக்காது!
வெ.நீலகண்டன்