ஃப்ரிட்ஜ் மேக்னட்டில் பிசினஸ் இருக்கு!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
                    மனதுக்குப் பிடித்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பது எவ்வளவு சந்தோஷமானதோ, அதைவிட சந்தோஷமானது, அந்த அன்பளிப்பை நாமே நம் கைப்பட டிசைன் செய்வது. எல்லாராலும், எல்லாப் பொருள் களையும் அப்படிச் செய்ய முடியாதுதான்... திருநெல்வேலியைச் சேர்ந்த வாகீஸ்வரி செய்கிற விதம்வித மான ஃப்ரிட்ஜ் மேக்னட்ஸை யார் வேண்டுமானாலும் சுலபமாக செய்யலாம். கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, விதம்விதமாக டிசைன் செய்து, யாருக்கு வேண்டுமானாலும் எந்த சந்தர்ப்பத்துக்கும் பரிசளிக்கலாம்.

''இன்னிக்கு ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை. ஃப்ரிட்ஜ் கதவுல பழம், காய் வடிவங்கள்ல காந்தம் ஒட்டி வைக்கிறது ஃபேஷன். இன்னும் சிலர் வீட்டு பீரோல கார்ட்டூன் மேக்னட்ஸ் ஒட்டி வைப்பாங்க. அழகுக்காக ஒட்டற இந்த மேக்னட்ஸை நாமளே விதம்விதமா, வித்தியாசமா டிசைன் பண்ணலாம். பெரிய அளவுல அதை ஒரு பிசினஸாவே எடுத்தும் செய்யலாம்’’ என்கிற வாகீஸ்வரி, ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘கெமிக்கல் க்ளே, காந்தம் (வேற வேற மாடல்கள் மற்றும் அளவுகளில்), வெள்ளை கம், ஃபேப்ரிக் கலர், மோல்டு, லெதர் ஃபோம், சோடா பாட்டில் மூடி, ஐஸ்கிரீம் குச்சி... 500 ரூபாய் முதலீடே தாராளம்.’’

என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘ஃப்ரிட்ஜ்ல ஒட்ட பழங்கள், காய்கறி, பழக்கூடை, வாழையிலை, ஆம்லட்னு சாப்பாட்டு டிசைன்கள் நல்லாருக்கும். பீரோல ஒட்ட சட்டை மாடல், போட்டோ ஃபிரேம், செருப்பு, கார்ட்டூன்னு எந்த டிசைன்ல வேணா பண்ணலாம். எத்தனை மாடல்னு சொல்லவே முடியாது. கற்பனை விரிய விரிய புதுசு புதுசா எதையும் பண்ணலாம். பிறந்த நாள், கல்யாணத்துக்கு அன்பளிப்பா கொடுக்கறதா இருந்தா, சம்பந்தப்பட்டவங்களோட போட்டோக்களை வச்சும் பண்ணித் தரலாம்.’’

ஒரு நாளைக்கு எத்தனை? விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘சின்னதா இருந்தா 20&ம், பெரிசுன்னா 15&ம் பண்ணலாம். பிறந்த நாள் பார்ட்டிகளுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க, தாம்பூலத்துல வச்சுக் கொடுக்க மொத்தமா ஆர்டர் எடுக்கலாம். அன்பளிப்புப் பொருள்கள் விற்கற கடைகள்ல சப்ளை பண்ணலாம். 35 ரூபாய்லேர்ந்து 70 ரூபாய் வரைக்கும் அளவைப் பொறுத்து விலை... 50 சதவீதத்துக்கும் மேலான லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சில 3 மாடல் கத்துக்க, தேவையான பொருள்களோட சேர்த்துக் கட்டணம் 250 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்