ஹாயாக கையை வீசியபடி கடைக்குச் சென்று, ‘இன்னொரு கேரிபேக் கொடுப்பா’ என்று உரிமையாகக் கேட்பவரா நீங்கள்? ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... இப்போது கையோடு பை எடுத்துச் செல்லாவிட்டால் அவர்கள் தரும் பிளாஸ்டிக் பைக்கும் சேர்த்து காசு தீட்டி விடுவார்கள் கடைக்காரர்கள்!
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து ஓய்ந்துபோன மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் லேட்டஸ்ட் மிரட்டல் இது.
‘‘கடைகளில் 40 மைக்ரானுக்கு கூடுதல் திடமுள்ள பிளாஸ்டிக் பைகளையே வாடிக்கையாளருக்குத் தரவேண்டும். அதையும் இலவசமாகத் தரக்கூடாது. அதற்குரிய விலையை பில்லில் சேர்க்க வேண்டும். அப்படி வாங்கும் பைசாவை மொத்தமாக சேர்த்து துப்புரவுப் பணிக்காக உள்ளாட்சி நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்.’’
& மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் இதை முழுமையாகச் செயல்படுத்திவிட்டன. தமிழகத்தில் இப்போதுதான் சூடு பிடிக்கிறது. சென்னையில் மெக்ரென்னட், நீல்கிரீஸ், கோவை பழமுதிர் நிலையம், பிக் பஜார், சுபிக்ஷா, லேண்ட்மார்க் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அமல்படுத்தி விட்டன. பிற கடைகளிலும் இது விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
பிளாஸ்டிக் இல்லாமல் மனித வாழ்க்கையை கற்பனையே செய்ய முடியாது. ஆனால், அதை சாதாரணமாக அழிக்க முடியாது. குறிப்பிட்ட திட அளவில் இருந்தால் மட்டுமே மறுசுழற்சி செய்யமுடியும். மக்கும் தன்மை மிகக்குறைவு. 20 மைக்ரான் அளவுள்ள ஒரு பிளாஸ்டிக் கவர் முற்றிலும் மக்கிப்போக 400 ஆண்டுகள் ஆகுமாம். இதுதவிர, ஏராளமான நோய்களும் பரவும் என்கிறார்கள்.
‘‘40 மைக்ரான் திடத்துக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள் எடை குறைவாக இருக்கும். சேகரிப்பதும், மறுசுழற்சி செய்வதும் சிரமம். குப்பை பொறுக்குபவர்கள்கூட இந்த பைகளை எடுப்பதில்லை. இவை மண்ணில் புதைவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, கால்வாய், ஆறுகளையும் அடைத்துக் கொள்கின்றன. மழைக்காலத்தில் பெரும் பாதிப்பு உருவாகிறது.

ஓட்டல்களில் சூடான உணவுகளை கேரிபேக்கில் கொடுக்கிறார்கள். அதை சாப்பிடுவதால் பல நோய்கள் வர வாய்ப்புண்டு. அதனால் 40 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உணவை பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யவும் தடை வந்துள்ளது. விதிகளை மீறும் தயாரிப்பாளர்கள், கடைக்காரர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு இயந்திரங்களுக்கான ஆயில் தயாரிக்கவும், சாலை போடவும் திட்டம் உள்ளது’’ என்கின்றனர் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தரப்பினர்.
‘‘பாலிதீன் பைகள் தயாரிக்கும் 268 கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதுவரை 40 மைக்ரானுக்குக் குறைந்த 2500 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களிலிருந்து தரம் குறைந்த பிளாஸ்டிக் பைகள் சென்னைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கிறோம். பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மையம் அமைப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம்’’ என்கிறார் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் குகானந்தம்.
இந்த ஆணையை இந்தியா முழுவதும் தீவிரமாக அமல் படுத்தி வரும் ‘ரீடெய்லர் அசோசியேஷன் ஆப் இந்தியா’வின் (ஆர்.ஏ.ஐ) தலைமைச் செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன், மக்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்.
‘‘பணம் கொடுத்து வாங்கினால்தான் எதற்கும் மதிப்பு. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 33 நாடுகளில் இதே நடைமுறை இருக்கிறது. சீனாவிலும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து விட்டார்கள். சூப்பர் மார்க்கெட்களில் 2 கிலோ பிடிக்கும் பை 1 ரூபாய். 3 கிலோ பிடிக்கும் பை 2 ரூபாய். 5 கிலோ பிடிக்கும் பை 3 ரூபாய். 10 கிலோ பிடிக்கும் பை 4 ரூபாய். டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சிறிய பை 3 ரூபாய். மீடியம் சைஸ் 5 ரூபாய். பெரிய சைஸ் 7 ரூபாய். இத்திட்டத்துக்குப் பிறகு, கடந்த 2 மாதங்களில் 56 சதவீதம் பிளாஸ்டிக் பை பயன்பாடு குறைந்துள்ளது. 80 சதவீத வாடிக்கையாளர்கள் இதை வரவேற்கிறார்கள். வியாபாரிகள் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்கள்’’ என்கிறார் குமார் ராஜகோபாலன்.
இதுபற்றி தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சங்கரனிடம் பேசினோம்.

துணிப்பை , சணல் பைகளாலும் சுற்றுச் சூழல் பாதிப்பு உண்டு. காகிதங்களுக்காக மரங்களை வெட்டுகிறார்கள். அதுவும் பாதிப்புதானே? கையாளும் விதத்தில்தான் பொருட்களின் பயன்பாடு இருக்கிறது. கடைக்காரர்கள் பைகளை எப்போதும் இலவசமாகக் கொடுப்பதில்லை. பொருளில் அந்த விலையை சேர்த்து விடுவார்கள். இப்போது அரசே விலை வைத்து விற்கலாம் என்று சொல்லிவிட்டதால் இன்னும் கூடுதலாக விற்பார்கள். எல்லாம் மக்கள் தலையில்தான் விடியும். பிளாஸ்டிக் பற்றி மக்களிடம் அச்சத்தையும் வதந்திகளையும் பரப்புகிறார்கள். 5 மைக்ரான் திடமுள்ள பிளாஸ்டிக்கைக்கூட மறுசுழற்சி செய்ய முடியும்’’ என்கிறார் சங்கரன்.
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்