‘‘நானா நடிக்கிறேன்னு இன்னும் கூட என்னால நம்ப முடியலீங்க... எல்லாமே கனவு மாதிரி இருக்கு. ‘பேங்க் மேனேஜர் பொண்ணு போறாங்க’ன்னு சொன்ன காலம் மாறி, இன்னிக்கு ரோட்ல இறங்கி நடந்தா, ‘காமு... காமு...’ன்னு கொண்டாடறாங்க. அந்த அன்புல அப்படியே திக்குமுக்காடிப் போறேன்...’’ & வியந்து வியந்து விழிகளை உருட்டிப் பேசுகிறார் பென்ஸீ... அதாவது ‘நாதஸ்வரம்’ காமு!
‘‘பி.இ., எம்.பி.ஏ. முடிச்சிட்டு ஒரு கம்பெனில ஹெச்.ஆரா வேலை பார்த்திட்டிருந்தேன். டான்ஸ் தெரியும். மத்தபடி நடிகையாகணும்ங்கிற எண்ணமெல்லாம் இருந்ததே இல்லை.
‘நாதஸ்வரம்’ ஆடிஷன் பத்தின அறிவிப்பு வந்தப்பகூட, நடிக்கிற எண்ணம் இல்லை. டைட்டில் சாங்ல டான்ஸ் பண்ணலாம்ங்கிற ஐடியாலதான் போனேன். அங்க என்னைப் பார்த்த டைரக்டர் திருமுருகன் சார், காமு கேரக்டருக்கு செலக்ட் பண்ணினார். அந்த கேரக்டருக்கு எல்லா ஊர்லேர்ந்தும் எக்கச்சக்கமான போட்டி. பொண்டாட்டி வீட்ல மாசக்கணக்கா டேரா போடற வேலையில்லாத புருஷனுக்கு அட்வைஸ் பண்ணித் திருத்தற மாதிரி ஒரு சீனை கொடுத்து நடிக்கச் சொன்னார் டைரக்டர். ‘நீ நிச்சயம் செலக்ட் ஆயிடுவே’ன்னு மனசு சொல்ல, தைரியமா நடிச்சேன். செலக்ட் ஆயிட்டேன்...’’ & பூரித்துச் சொல்கிற பென்ஸீ, நடிப்புக்காக வேலையை உதறியிருக்கிறார்.
தொடரில் பென்ஸீக்கு பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுத் தந்தது, அவரது முதலிரவுக் காட்சி. அதற்குப் பின்னால் பெரிய கதையே வைத்திருக்கிறார் அவர்.
‘‘பெரிய பிரச்னைக்குப் பிறகு எனக்கு கல்யாணமாகும். முதலிரவு சீன். அழணும். அதே நேரம் வாய்விட்டு அழக்கூடாது. ‘கண்ல மட்டும் உணர்ச்சி பொங்க, கண்ணீர் வழியணும்’னு சொல்லிட்டார் டைரக்டர். எனக்கு அந்த சீன் தர்மசங்கடமா இருக்கு... எவ்வளவோ ட்ரை பண்ணியும் கண்லேர்ந்து தண்ணி வரலை. டேக் மேல டேக் போக, டைரக்டர் கன்னாபின்னான்னு திட்டறார். கடைசி வாய்ப்பு... அடுத்து பேக்கப்தான்ங்கற நிலைமைல, ரொம்ப சிரமப்பட்டு ட்ரை பண்ணினதுல, கரெக்டா வந்திருச்சு. அவ்ளோ நேரம் திட்டின டைரக்டர், பிரமாதம்னு பாராட்டினார். அந்த சீன் ஒளிபரப்பானப்ப, அவ்ளோ பாராட்டு. ஹெச்.ஆர் வேலைல இருந்தப்ப திட்டு வாங்கினா, மூட் அவுட்டாயிடும். ஆனா, நடிகையானதும் திட்டு வாங்கினா, ஒரு வேகம் வருது. நல்லா பண்ணிக் காட்டணுங்கிற வெறி வருது...’’ & சந்தோஷமாகச் சொல்பவருக்கு எதிர்கால லட்சியம், கனவு எல்லாம் நல்ல நடிகையாவது மட்டுமே!
அப்படியே ஆக வாழ்த்துக்கள்!
கெட்டவன்தான் நல்லது!சன் டி.வியில் ‘மருதாணி’ தொடரில் நடிக்கிற நேத்ரன், 6 வயதிலேயே நடிக்க வந்தவராம்.
‘‘முதல் படம் ‘ஸ்ரீராகவேந்திரா’. அதுல சின்ன வயசு ரஜினி நான்தான். அப்புறம் ‘வேலைக்காரன்’, ‘ரெட்டைவால் குருவி’னு நிறைய படங்கள்ல சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சிருக்கேன். 11 வயசு வரைக்கும் நடிப்பு. அப்புறம் படிப்பு. ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்ப மறுபடி மீடியா என்ட்ரி. ‘சித்தி’, ‘சிவமயம்’, ‘குலவிளக்கு’ன்னு நிறைய தொடர்கள் பண்ணிருக்கேன். 3 வருஷம் கழிச்சு மறுபடி சன் டி.வி. வாய்ப்பு! ‘மருதாணி’ல எனக்கு பக்கா நெகட்டிவ் கேரக்டர். அதென்னவோ தெரியலீங்க... கெட்டவனாவே நடிக்கச் சொல்றாங்க. பரவால்லை, அதுவும் நல்லாத்தான் இருக்கு’’ என்கிறவருக்கு, சின்னத்திரையில் பெரிதாக சாதித்த பிறகே சினிமாவில் கால் பதிக்க விருப்பமாம்!
மருமகளுக்குக் கல்யாணம்!‘தென்றல்’ தொடரின் வாயாடி மருமகள் பவ்யகலாவுக்கு பூர்வீகம் பெங்களூரு. அங்கே கன்னடத் தொடர்களில் பிசியாக இருப்பவர், ‘தென்றல்’ தொடருக்காக அங்கிருந்து சென்னைக்கு ட்ரிப் அடிக்கிறார். ‘‘என்ன பண்றது? கஷ்டம்தான். ஆனாலும், தமிழ் சீரியல்ஸ்தானே என்னை பிரபலமாக்கினது... அதனால சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷல்’’ என்பவருக்கு அடுத்த வருடம் கல்யாணம்...
ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்