‘‘உங்க வாழ்க்கையோட ஆரம்பம் ரொம்ப மோசமானதா இருந்தாலும், அது மோசமாவே முடிஞ்சு போயிடறதில்லை. அதுக்கு நானே சாட்சி’’ என தத்துவார்த்தமாகப் பேசும் இவியான் சார்கோஸ், இந்த ஆண்டின் உலக அழகி.
வெனிசுலா நாட்டைச் சேர்ந்த இவியானுக்கு 22 வயதாகிறது. நூறு நாடுகளின் அழகிகள் பங்கேற்ற, உலகமெங்கும் நூறு கோடி பேர் கண்டு ரசித்த உலக அழகிப் போட்டியில் கிரீடம் சூட்டிக் கொண்டவர். மலையேறுதல், கைப்பந்து விளையாட்டு இரண்டுக்கும் ரசிகையான இவியான், மனிதவளத் துறையில் பட்டம் பெற்றவர். அழகாக இருப்பதால், இப்போது ஒரு டி.வி.யில் பணி
புரிகிறார்.
இவியான் பிறந்தது பெரிய குடும்பத்தில். சகோதர, சகோதரிகள் என மொத்தம் 12 பேர். வீடே ஒரு வகுப்பறை மாதிரி இருக்கும். இவருக்கு எட்டு வயது இருக்கும்போது அப்பாவும் அம்மாவும் ஒரு விபத்தில் இறந்துவிட, குடும்பமே நிராதரவானது. கன்னியாஸ்திரிகள் நடத்திவந்த ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்து படித்தார் இவர். உடன்பிறந்த பலரும் இப்படி திசைக்கு ஒருவராக பிரிய நேர, வாழ்க்கையின் வலியை அந்த 8 வயதிலேயே உணர்ந்துவிட்டார் இவியான்.
‘‘பெற்றோரை இழந்த அந்த கணத்தில் நான் உடைந்து போனாலும், இனிமேல் நானே முட்டி மோதி வளர்ந்து மேலே வரவேண்டும் என்ற நினைப்பு எனக்கு அசாத்திய மன உறுதியைத் தந்தது. இந்த அழகிப் போட்டியில் நான் கலந்துகொண்டதும், ஜெயித்ததும் அந்த மன உறுதியால்தான்! அழகாக இருப்பதற்கும் ஒரு அர்த்தம் வேண்டும் அல்லவா? என்னைப் போன்ற ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து ஆளாக்க இந்த கிரீடத்தைப் பயன்படுத்துவேன்’’ என்கிறார் இவியான்.
இவியானுக்கு மனசும் அழகு!
ரெமோ