ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதில் அதிக சந்தோஷம் அடைந்தவர் கரீனா கபூராகத்தான் இருக்கும்! புகழ்பெற்ற டைரக்டர் மதுர் பண்டர்கரின் ‘ஹீரோயின்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நேரத்தில்தான் கர்ப்பமானார் ஐஸ். அதனால் அவர் படத்திலிருந்து விலக நேர, இப்போது அதன் ஹீரோயின் கரீனா. இதற்காக தனது கால்ஷீட்டை ஏகத்துக்கு அட்ஜஸ்ட் செய்து கொடுத்திருக்கிறார் அவர். பண்டர்கரின் முந்தைய படங்களில் நடித்த தபு, ப்ரியங்கா சோப்ரா இருவருமே விருது வாங்கினர். இம்முறை கரீனாவுக்கு?
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை உணர்த்தும் ஒரு விளம்பரப் படம் தயாராகி வருகிறது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் வெளிவரப்போகும் படத்தில் அமீர் கானும் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியும் நடிக்கிறார்கள்.
நடிகை நளினியின் மகள் அருணாவுக்கு இந்த மாத இறுதியில் கல்யாணம்! கண்டிப்பாக கல்யாணத்தில் கலந்து கொள்வதாக வாக்களித்திருக்கிறாராம் அப்பா ராமராஜன்!
இந்திப் படங்களில் தலைகாட்ட ஓடோடி வரும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பட்டியலில், ‘ஆஸ்கர்’ விருது வாங்கிய நிகோல் கிட்மேனும் அடக்கம். ‘காலி காலி மெய்ன் சோர் ஹை’ என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட 5 கோடி ரூபாய் சம்பளம் பேசி இருக்கிறார்கள். நிகோல் அதிகம் எதிர்பார்க்கிறாராம்!
‘ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையைப் படமாக்கத் தயாராக இருக்கிறது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். ‘இந்த உரிமைக்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவிடத் தயார்’ என அறிவித்திருக்கிறது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைப் படமான ‘தி டர்ட்டி பிக்சர்’ இசை வெளியீட்டு விழாவில் கவர்ச்சி ஆடையில் வந்து டான்ஸ் போட்டு கலக்கினார் வித்யா பாலன். படத்தில் வித்யாவின் ஆடைகளுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிய, ‘‘அப்படி ஒன்றும் முகம் சுளிக்கிற மாதிரி வித்யா தெரியவில்லை’’ என அவருக்கு ஆதரவுக் கரங்களும் நீள்கின்றன. லேட்டஸ்ட்டாக சோனம் கபூர், ‘‘கவர்ச்சிகரமாகத்தான் வித்யா தெரிகிறார். ஆபாசமாக இல்லை’’ என்று சப்போர்ட் செய்திருக்கிறார்.