
வெற்றியின் பாதையில் தங்களைதிருப்பிவிட்ட தருணங்களை,ஜெயித்தவர்கள் அடையாளம்காட்டும் தொடர்டாக்டர் சுரேந்திரன்
வண்ணமயமான கட்டிடங்களும், ஸ்டார் ஹோட்டல்களும், ஷாப்பிங் மால்களும், குளிர்சாதனப் பேருந்துகளும், பல்கலைக் கழகங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் நிரம்பி வழிகிற பளபளப்பான மேல்பூச்சுள்ள சென்னையை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். உழைப்பின் வியர்வை வழியும் முகங்களோடு, எந்த அடிப்படை வசதியுமற்ற லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வாழும் அழுக்கான வட சென்னை பலரது கவனத்தில் பதியாமலே போய்விடுகிறது. சென்னையின் பூர்வீக குடிகள் அதிகம் வசிக்கிற வட சென்னையின் விரல்விட்டு எண்ணக்கூடிய அடையாளங்களில் ஒன்று ஸ்டான்லி மருத்துவமனை. தன் உடல்நலத்திற்காக நூறு ரூபாய்கூட செலவழிக்க கதியற்ற ஏராளம் அபலைகளும், அர்ப்பணிப்பு உணர்வுள்ள சில மருத்துவ மேதைகளும், ஊழியர்களும் இருக்கிற மருத்துவமனையில் டாக்டர் சுரேந்திரனின் வாழ்க்கை பெருமளவு கரைந்திருக்கிறது.
‘‘சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் மருத்துவ மாணவர்களின் முதல் கனவு. 1969ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவனாக நுழைந்தேன். இப்போது வரை மாணவனாகவே இருந்து வருகிறேன். அங்கு கற்றுக் கொண்டதும், பெற்றுக் கொண்டதுமே என் வாழ்வு. இங்கு மருத்துவம் படிக்கிற வாய்ப்பு, பல திருப்பங்களை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் உள்ள திறமைசாலி மாணவர்கள் ஒன்று கூடுகிற இடம். வகுப்பில், பள்ளியில், மாவட்டத்தில் முதல் இடத்தில் இருந்தவர்களுக்குள் போட்டி இருக்கும். தமிழ்நாட்டின் பெரிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்கிற நிம்மதியும், பெருமையும் மனதை ஆட்கொண்டிருந்தது.
என் போன்ற முதல் தலைமுறையில் வாய்ப்பு பெறுகிறவர்கள் எல்லாம் பொதுவாக ஒரு தவறு செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுவரை கிடைக்காத வாய்ப்புகளும் வசதிகளும் கிடைத்ததையே பெரிய சாதனையாகக் கருதி, அதற்குப் பிறகு அலட்சியமாகவோ, ஆர்வம் காட்டாமலோ இருந்துவிடுகிறார்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் ஒருவகையில் பொருந்துகிற யதார்த்தம் இது. வாய்ப்பு கிடைப்பது முதல் படியில் என்றால், அதற்கு மேல் ஏறி சிகரத்தை எட்டுவதற்குக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. முதல் படியிலேயே திருப்தி அடைந்துவிட்டால், அடுத்த படியில் வழுக்கி கீழே போய்விடுவோம். அது, முன்பு இருந்த இடத்தைவிட மோசமானதாகவும் ஆபத்தானதாகவும் மாறிவிடுகிறது.

ஸ்டான்லியில் விடுதி வாழ்க்கை. ஒத்துப்போகிற நண்பர்கள் அமைந்தார்கள். நான் இந்து, முகமது கௌஸ் என்கிற நண்பன் முஸ்லிம். அவன் அப்பா துறைமுகத்தில் தொழிலாளி. பொன்னையன் என்கிற நண்பன் கிறிஸ்துவர். அவன் அப்பா டீ எஸ்டேட் தொழிலாளி. படிக்கிற காலத்தில் சரியான நண்பர்கள் அமையாமல் போனால் நிறைய இழப்புகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். எனக்கு நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். ஒரு பக்கம் வசதி படைத்த, பெரிய இடத்து பிள்ளைகள் தனிக் குழுவாக இருப்பார்கள். இன்னொரு பக்கம் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு மிகுந்த தாழ்வு மனப்பான்மையோடு வந்த மாணவர்கள் ஒரு குழுவாக இருந்தனர்.
‘சாதாரண இடத்திலிருந்து டாக்டர் படிப்பு வரைக்கும் வந்தாச்சு. இதுக்கு மேல என்ன?’ என்கிற அலட்சியத்தோடு மனம்போன போக்கில் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அவர்கள். அப்போது நான் அந்த ரகத்தில் இருந்தேன். என்னோடு சில நண்பர்களும் இருந்தார்கள். எங்களுக்குள் அபாயமான ஒரு பந்தயம் வைத்தோம். ‘யாரும் எதையும் படிக்கக்கூடாது. புத்தகத்தைக்கூடத் தொடக்கூடாது. தேர்வுக்கு முதல் நாள் வந்து, அப்படியே நேராகப் போய் பரீட்சை எழுத வேண்டும். அதிக மதிப்பெண் எடுப்பது யாரென பார்ப்போம்’ என்ற போட்டியில் இறங்கினோம்.
நேரம் போக்குவதற்காக, நாங்கள் ஆறு நண்பர்களும் ஒன்றாக அவரவர் ஊருக்குப் போவதாக முடிவெடுத்தோம். குற்றாலம், பெரியகுளம், கொடைக்கானல், ஈரோடு என ஊர் சுற்றிவிட்டு தேர்வுக்கு முதல் நாள் கல்லூரிக்கு வந்தோம். படிக்காமல் பரீட்சை எழுதியதில், நான் மட்டுமே சுமாரான மதிப்பெண்களோடு தேறினேன். மற்றவர்கள் தேர்ச்சி பெறாமல் போனார்கள். வெற்றி பெற்றதற்குப் பெருமைப்படாமல் மிகுந்த அவமானப்பட்ட நாள் அது. விளையாட்டை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு படிக்க வேண்டும் என்கிற வெறியை மீட்டெடுக்க கொஞ்ச காலம் தேவைப்பட்டது.
இதற்கிடையில் விடுதி உணவகத்தில் நிறைய ஊழல் நடந்தது. பணம் கொடுத்தும் தரமான உணவு கிடைப்பதில்லை. உணவகத்தில் பொறுப்பாளராக இருந்த மாணவர் பிரதிநிதி, கல்லூரி துணை முதல்வரின் உறவினர். மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் ஆத்திரமடைந்த அவர், ‘உங்களில் யாராவது பொறுப்பெடுத்து ஊழலைக் கண்டுபிடிக்கத் தயாரா?’ என்று கேட்ட போது, நண்பர்கள் என்னைப் பிடித்து முன்னால் தள்ளிவிட்டனர். விருப்பத்தில் அல்லாமல், விபத்தில் பொறுப்பை ஏற்றேன். வாழ்வில் ஏற்றுக்கொண்ட முதல் பொறுப்பு. மாணவர்களுக்குத் தரமான உணவையும் தந்து, விடுதி உணவுக் கட்டணத்தையும் குறைக்கும்படியாக செய்தேன். அதைச் செய்தபோதே, அங்கு அதுவரை நடந்து வந்த ஊழலும் நிரூபணமானது. அதில் துணை முதல்வரின் உறவினர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். அதனால் அவர் என் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
மருத்துவம் படிக்கிற மாணவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். பேராசிரியர்கள் செய்முறைத் தேர்வில் போடுகிற மதிப்பெண்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இந்த நிலையில் நான் கல்லூரியின் துணை முதல்வரையே பகைத்துக் கொண்டேன். ‘அவ்ளோதான், மவனே நீ இனிமே ஜென்மத்துக்கும் பாஸ் பண்ண முடியாது’ என்று எல்லோரும் சொன்னதும் இதயத்துடிப்பு குற்றவுணர்ச்சியுடன் துடித்தது. ஒவ்வொரு முறை விடுமுறையில் போகும்போதும், ஊரே என்னை ‘டாக்டராக’ப் பார்த்தது. ‘என் பையன் ஒரு கோல்டு மெடலாவது வாங்குவான்’ என்று நம்பிக்கையோடு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.
‘பிராக்டிகல் மார்க் குறைவா வந்தாலும், பாஸ் பண்ற மாதிரி தியரி பேப்பராவது நல்லா படிச்சிடணும்’ என்று எனக்குள் இருந்த பயம் மெதுவாக வெறியாக மாறியது. வேகத்தோடு படித்து, தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் அடிவயிற்றில் பயம் திரண்டு எழுந்து வந்து தொண்டைக் குழியை அடைக்கும். தேர்வு முடிவு வந்த நாளில், எனக்கு ஏராளம் இன்ப அதிர்ச்சிகள். ஒவ்வொரு பாடத்திலும், பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் பெறும் மாணவர்களின் பெயரை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ‘சுரேந்திரன்’ என்கிற பெயரை 13 முறை உச்சரித்தார்கள். மொத்தம் 13 தங்கப் பதக்கங்களைப் பெறுவேன் என்று நானே நம்பவில்லை.
அதுவரை ஒரே மாணவர் அத்தனை பதக்கங்களை வாங்கியது இல்லை என்கிற சிறப்போடு எனக்கு, ‘பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட்’ என்ற சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கமும் கூடுதலாகக் கிடைத்தது. தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனோ என்று பயந்தவன், 14 தங்கப் பதக்கங்களை ஜெயித்தது கனவு போல இருந்தது. ஊருக்குப் போய் இறங்கியதுமே, ‘சுரேந்திரா, 14 மெடலு வாங்கிட்டீயாமே’ என்று முதல் விசாரிப்பிலேயே வரவேற்பு பலமாக இருந்தது. அப்பா ஊரில் இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்.
‘இதய ஆபரேஷன் செய்யவேண்டும்’ என்று கனவு கண்ட சிறுவன், நிஜ மருத்துவரானேன். ஆனால், மருத்துவம் புரிய ஆரம்பிக்கும் போது, இதயம் தாண்டி வயிறு என்னை ஈர்த்தது. இந்த உலகமே வயிற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகிறது. பழங்காலம் தொட்டு, இன்றுவரை மனிதனின் போராட்டம் வயிற்றை வைத்தே தொடங்குகிறது. ‘ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்கிற பாடலின் வரிகள் வாழ்க்கைக்கு மட்டும் இன்றி நம் ஆரோக்கியத்துக்கும் பொருந்தும். மருத்துவராக சவால்கள் நிறைந்த உடல் பகுதியாக வயிறுதான் எனக்குப் பட்டது. எனவே ‘கேஸ்ட்ரோ என்ட்ராலஜி’ என்கிற குடல், இரைப்பை, கல்லீரல், கணையம் தொடர்பான படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. மேற்படிப்பை அந்தத் துறையிலேயே முடித்தேன். வெளிநாட்டில் பணிபுரிகிற வாய்ப்பும் வந்தது. அப்பா எம்.ஜி.ராஜகோபாலின் உழைப்பு, தீர்த்தகிரி கவுண்டரின் உதவி போன்றவற்றை இங்கிருந்து எடுத்துக்கொண்டு, திறமையையும் உழைப்பையும் வெளிநாட்டிற்குத் தர எனக்கு விருப்பம் இல்லை.
‘அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்கிற சர்ஜனாக இருக்கவே ஆசைப்படுவோம். சர்ஜனாக வேலை கிடைக்காமல் போனால், வெளிநாடு போவது பற்றி யோசிக்கலாம்’ என நினைத்து நேர்முகத்தேர்விற்குப் போனேன். ஆனால் என்னை இன்டர்வியூ செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, ‘எங்க போட்டாலும் போவீங்களா? அது வேணும், இது வேணும்னு கேட்பீங்களா’ என்று கேட்டார். ‘நான் சர்ஜனாக வேண்டும். அதற்கு வாய்ப்பு தந்தால் நான் வேலையில் சேருவேன். இல்லாமல் போனால் வெளிநாட்டிற்குத்தான் போகணும்’ என்று சொன்னேன். ‘வேலையே இல்ல... இப்பவே இப்படி பேசுறீங்க’ என்று ஆச்சர்யமாகக் கேட்டார். ‘அதுதான் சார் உண்மை’ என்று சொன்ன என்னை ஏற இறங்கப் பார்த்தார்.
அரசு மருத்துவராகும் தேர்வில் 1800 பேரில் முதல் ரேங்க் வாங்கினேன். நான் வெளிப்படையாகப் பேசியது அந்த அதிகாரிக்குப் பிடித்திருந்தது. என்னுடைய திறமையோ, மதிப்பெண்களோ நான் முதல் ரேங்க் வர காரணம் இல்லை. நேர்மையாகச் சொன்ன பதில் எனக்கு முதலிடத்தைத் தந்தது. அரசு மருத்துவமனையில் மனசாட்சி உள்ள மருத்துவராகப் பணியாற்ற பொறுமையும், போராட்ட குணமும் வேண்டும் என்கிற உண்மை மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்ற அரசு ஆணை கையில் கிடைத்தது...
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்