திருப்புமுனை





‘‘ஒரு ரிஷிகிட்ட வந்த ஒருத்தன், ‘நான் சாதிக்கணும்னா என்ன செய்யணும்’னு கேட்டான். ‘உன் பலத்தை எல்லாம் ஒண்ணா திரட்டி தொடர்ந்து முயற்சி செய்’னு பதில் சொன்னார் ரிஷி. ‘அது எப்படி?’ என திரும்பவும் கேட்டான் அவன். அவனை ஒரு குளத்துக்குக் கூட்டிப் போன ரிஷி, ‘கண்ணை மூடி கடவுளை வேண்டிக்கிட்டு இந்தக் குளத்துல மூணு முறை மூழ்கி எந்திரி’ன்னு சொன்னார். அவன் உள்ளே போனதும், எதிர்பார்க்காத நேரத்துல அவன் தலையைப் பிடித்து பலமா தண்ணீருக்குள் அழுத்தினார் ரிஷி. மூழ்கினால் உயிர் போய்விடும். எல்லா பலத்தையும் திரட்டி, திமிறி எழுந்து வெளியே வந்தான் சந்தேகம் கேட்டவன். ‘சாதிக்கணும்னா இப்படி முயற்சி செய்யணும்’ என்றார் ரிஷி.

நான் கேள்வி கேட்கறதுக்கு எந்த ரிஷியும் இல்லை. ஆனா வாழ்க்கை என்னை தண்ணியில் முக்கி எடுத்தப்ப, என் எல்லா பலத்தையும் சேர்த்து வெளியில் வந்தேன். மொபைல் கடை வைக்கலாம்னு நினைச்சப்ப, சென்னையில் 5000 பேருக்கு மேல செல்போன் வித்திட்டிருந்தாங்க. இப்போ பேர் சொல்ற மாதிரி 5 பேர்கூட இல்லை. போட்டியில் எத்தனை பேர் வேணும்னாலும் கலந்துக்கலாம். வெற்றி, தோல்வி எது வேணும்னாலும் கிடைக்கலாம். ஆனால், முழு பலத்தையும் திரட்டி முயற்சி செய்தால் போதும்னு நினைப்பேன். முயற்சி நம்ம பொறுப்பு; முடிவு கடவுளோட பொறுப்பு. நம்ம வேலையை நாம சரியா செஞ்சிடணும்!’’

- புதிதாக வேலைக்குச் சேர்கிற பூர்விகா ஊழியர்களிடம், நம்பிக்கை தருகிற வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்கிறார் யுவராஜ். தன்னுடைய வெற்றி ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில் அவர் தயக்கம் காட்டுவதில்லை. வேலையில் சேர்கிற இளைஞர்களுக்குப் பயிற்சி தந்த பிறகே கிளைகளுக்கு அனுப்புகிறார்கள், யுவராஜ் - கன்னி யுவராஜ் தம்பதி.  



‘‘கோடம்பாக்கத்தில் அப்பா தந்த  மூலதனமா 175 சதுர அடி கடை இருக்கு. லாட்டரிச் சீட்டு மொத்த விற்பனையில், வாழ்க்கை நல்ல முன்னேற்றப் பாதையில் போச்சு. ஓடுற பஸ்ல இருந்து திடீர்னு இறக்கி விட்ட மாதிரி, ‘லாட்டரிக்குத் தடை’ன்னு சொல்லிட்டாங்க. எந்த வருமானமும் இல்லாம, சொந்த வாழ்க்கை லாட்டரி அடித்தது.

‘சூப் போட்டு விக்கலாம்’னு நானும் என் மனைவியும் முடிவு செஞ்சோம். டீக்கடைக்கு இருந்த ஆதரவுகூட, சூப் கடைக்குக் கிடைக்கலை. பிரியாணி போட்டா நல்லா போகும்னு முயற்சி செஞ்சோம். அதுவும் சரியா போகலை. போட்ட முதல் கைக்கு வந்தா, அதுவே பெரிய விஷயம். தனிக்குடித்தனம் வந்த நேரம் அது. கடை வாடகை, கரன்ட் பில் எல்லாம் போக, வீட்டு வாடகை தரமுடியுமான்னு ஒவ்வொரு மாசமும் பயம் வரும். போற ரூட் எதுவும் சரியில்லை. புதுசா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு.

சொந்தக்காரர் ஒருத்தர் செல்போன் ரிப்பேர் பண்ற கடை வெச்சிருந்தார். அப்ப 500 ரூபாய்க்கு செல்போன் வந்து, சின்ன பையன்ல இருந்து வயசானவங்க வரைக்கும், ‘ஹலோ... இப்பதான் சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியா?’ன்னு அதகளம் செஞ்சிட்டிருந்தாங்க. எல்லாருக்கும் செல்போன் அத்தியாவசிய தேவையாகும்னு தோணுச்சு. காத்து அடிக்கிற திசையில் சைக்கிள் ஓட்டினா, அதுவே பாதி தூரம் கூட்டிட்டுப் போயிடும். கால மாற்றத்தைக் கணிக்க தெரிஞ்சவங்க, சுலபமா ஜெயிச்சிருக்காங்க. இனி வரப்போறது ‘செல்போன் யுகம்’னு மனசு உறுதியா நம்புச்சு. அந்த நம்பிக்கை என் வாழ்க்கையில் மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான பூர்விகா ஊழியர்களின் வாழ்க்கையிலும் திருப்புமுனையா அமைஞ்சது.  

2,000 ரூபாய் முதலீடு இருந்தா சூப் கடை, பிரியாணி கடை வச்சிடலாம். செல்போன் ஷோரூம் வைக்கிறதா இருந்தா, 2 லட்சம் ரூபாயாவது முதலீடு தேவைப்படும். என்கிட்டே வேலை பார்த்த சொந்தக்காரர் ஒருத்தர், எனக்குக் கடன் தர முன்வந்தார். நான் சம்பளம் தந்த ஒருத்தர்கிட்டே கடன் வாங்கும் நிலையில் இருந்தது வாழ்க்கை. அழகா இன்டீரியர் டெக்கரேட் செஞ்சி முடிக்கும்போது ஒரு லட்ச ரூபாய் செலவாகி இருந்தது. பொண்ணு பொறந்த நேரத்துல புது பிசினஸ் ஆரம்பிச்சதால, ‘பூர்விகா’ன்னு பொண்ணு பேரை கடைக்கு வச்சேன். 5 ஊழியர்கள், 5 செல்போன் என 2004ம் வருஷம் மார்ச் 31ம் தேதி தொடங்கியது புதுப்பயணம். பிசினஸ்ல ஒரு வருஷத்தோட கணக்கு வழக்கை மார்ச் 31ம் தேதி முடிச்சி வைப்பாங்க. எனக்கு அன்னைக்குத்தான் லாபக் கணக்கு ஆரம்பிச்சது.

முதல் செல்போன் விக்க ஒரு வாரம் ஆச்சு. அந்த சந்தோஷம் இப்பக்கூட ஞாபகத்துல இருக்கு. நான் பொறந்து வளர்ந்த கோடம்பாக்க ஏரியாவில், எல்லா வீடும் எனக்குப் பழக்கம். ‘நம்ம பையன் செல்போன் கடை ஆரம்பிச்சி இருக்காரு’ன்னு ஏரியாகாரங்க அமோக ஆதரவு தந்தாங்க. ‘விலை குறைவா இருக்கும். ஒரிஜினல் செல்போன் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையில் நண்பர்கள் வந்தாங்க. நியாயமான விலை என்பது அவங்களுக்கு குறைஞ்ச விலையா இருந்துச்சு. ‘உரிய விலை, தரமான பொருள்’ நண்பர்களைத் தேடி வர வச்ச மாதிரியே, அதுவரை அறிமுகம் இல்லாத வாடிக்கையாளர்களை நண்பர்களா மாத்துச்சு.

செல்போனைப் பொறுத்தவரைக்கும், ‘லேட்டஸ்ட் மாடல் எது? என்னென்ன வசதிகள் இருக்கு’ன்னு வாடிக்கையாளர்களுக்கு புரிய வைக்கணும். சிலர் ரொம்ப நேரம் எடுத்து புரிஞ்சிக்குவாங்க. அந்த பொறுமையோட அவங்களுக்கு விளக்கணும். மனசுக்குப் பிடிச்சு ஒரு போனை ஒருத்தர் வாங்கிட்டு போயிட்டா, அது பத்து போன் வித்ததுக்கு சமம். அவருடைய பரிந்துரையில் அடுத்தடுத்து பத்து பேர் வருவாங்க. அதே மாதிரி, ஒரு வாடிக்கையாளர் மனம் கசந்து எங்க கடையில் இருந்து வெளியில் போனா, அடுத்து வர வேண்டிய பத்து கஸ்டமர்கள் வராமப் போயிடுவாங்கன்னு தெரிஞ்சி வச்சிருந்தோம். ‘பொறுமையா இருக்கிறது, சிரிச்ச முகமா பேசுறது, வாடிக்கையாளரின் விருப்பங்களைத் தெரிந்து பணியாற்றுவது’ போன்றவைதான் ஊழியர்களுக்கு அடிப்படைப் பாடமே. ஏதோ காரணத்தால் வாடிக்கையாளர் பொறுமை இழந்து சத்தமா பேசினாலும், ஊழியர்கள் தன்மையா பேசணும் என்பது எங்களுக்கு கோல்டன் ரூல்.



இரண்டாவது ஆண்டில், பூர்விகாவின் இரண்டாவது கிளையை கீழ்ப்பாக்கத்தில் தொடங்கினோம். அஞ்சு லட்ச ரூபாய் தேவைப்பட்டது. வங்கியில் லோனுக்கு முயற்சி எடுத்தேன். எனக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கும் தகுதிதான் இருக்கிறதா சொல்லிட்டாங்க. ஐந்து வங்கியில் தலா ஒரு லட்ச ரூபாய்னு அஞ்சு லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். தைரியம்தான் அப்போதைக்கு என் சொத்து. முதல் ஒரு ரூபாய் சம்பாதிக்கத் தெரிஞ்சிக்கிட்டா, அடுத்த லட்ச ரூபாய் சம்பாதிக்கிறது பெரிய விஷயம் இல்லை என்பது அனுபவமாச்சு. அடுத்த ஆறே மாதத்தில் மூன்றாவது கிளை. பரபரப்பான தி.நகரின் பாண்டி பஜாரில் ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் வளர்ச்சிப் பாதை ஆரம்பிச்சது. ஓட ஆரம்பிச்சிட்டா, எல்லா தூரமும் ரொம்ப பக்கத்துல தெரிய ஆரம்பிச்சிடும். தமிழ்நாட்டின் முக்கியமான எல்லா ஊர்லயும் நடையா நடந்திருக்கிறேன். எந்த இடத்துல ஷோரூம் திறந்தா நல்லா போகும்னு நானே நேர்ல போய் கவனிப்பேன். கார்ல போற வசதி வந்த பிறகும் பஸ்ல ஏறிடுவேன். ‘மக்கள் எந்த மாதிரி போன் வச்சிருக்காங்க, எந்த போனை பாராட்டுறாங்க, நல்லா இல்லேன்னு எதைத் திட்டறாங்க’ன்னு கவனிச்ச பிறகுதான், அந்த ஊர்ல ஷோரூம் திறப்பேன்.

137 ஷோரூம்களிலும் நானே இருந்து வியாபாரம் பார்க்க முடியாது. ‘ஓனர்’ இல்லாம ஒரு கடையில் ஒழுங்கா தொழில் நடந்தா அதுவே முதல் வெற்றி. ‘நல்ல ஆட்களை வேலைக்குச் சேர்க்கணும். அவங்களை நல்லா பார்த்துக்கணும். அவங்க நாம் இருந்து செய்ய வேண்டிய வேலையை செஞ்சிடுவாங்க’ என்கிற என் நம்பிக்கைக்கு நல்ல பலன் கிடைக்குது. சிஸ்டம் சரியா செஞ்சு கொடுத்துட்டா, முதலாளிக்கு அந்த இடத்துல வேலையே இல்லை. எல்லாம் ஒழுங்கா நடக்கும். ஏதோ ஒரு கடையில், யாரோ ஒருத்தர் தப்பு பண்ணிட்டாருனு கோபமா வந்து சொல்லுவாங்க. ‘உடனே அவரை வேலையை விட்டு தூக்கணும்’னு யோசிக்கும்போது, சிஸ்டத்துல என்ன தப்பு நடந்திருக்குன்னு தேடிப் பார்ப்பேன். ‘திறந்திருக்கும் பணப்பெட்டி, திருடர்களையே உருவாக்கும்’னு சொல்லுவாங்க. சிஸ்டம்ல தப்பு இருந்தா, மனிதர்கள் தப்பு பண்ணுவாங்க. அதை சரி செஞ்சா, அவங்களும் சரியாகிடுவாங்க.

வேலைக்கு ஆள் எடுக்கிறதை அக்கறையோடவும், ஷோரூம் இன்டீரியர் டெக்கரேட் பண்றதை ரசிச்சும் பண்ணுவேன். வேலை செய்யுறவங்களுக்கு உரிய வசதிகளை கவனிச்சு செய்வேன். ஒரு சேர் வாங்கினாக்கூட, 10 மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்போதும் முதுகு வலி வராம இருக்கணும், நல்ல கைப்பிடி இருக்கணும், அழகா இருக்கணும்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குவேன். இதுக்குரிய பலன் லாபமா என்கிட்டே திரும்ப வந்துடும். என் கனவு ரொம்ப பெருசு. கையில் எதுவுமே இல்லாம இருந்தப்பவும், நான் பெரிய கனவுகள் கண்டிருக்கேன். ரூ.2 லட்சம் கடனில் ஆரம்பித்த தொழிலில், இன்று ஆண்டு வியாபாரம் 660 கோடி ரூபாய். என் கனவுகளுக்கு வடிவம் தர்ற ஊழியர்களின் நலனை என்னுடைய நலனா பார்த்தது மட்டும்தான் நான் முன்னேறக் காரணம்’’ என்கிற யுவராஜ், தன்னுடைய பலம் எதுவென்று நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.

‘‘எப்போதுமே ‘நாம்’ என்பதே எங்கள் பலம். எல்லாரும் சேர்ந்து பெரிதாகக் கனவு கண்டால், அதுதான் பூர்விகா’’ என பெருமிதத்தோடு சொல்கிறார் கன்னி யுவராஜ். உள்ளங்கள் கூடி ஒன்றை சிந்தித்தால், ஒன்றாக இணைந்து சிந்தித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பூர்விகா நிகழ்கால சாட்சி.
(திருப்பங்கள் தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்