வள்ளுவர் சொல்லியே திருந்தாதவர்கள் நான் சொல்லியா திருந்துவார்கள்?





‘‘முதல்ல ஒரு விஷயத்தைத் ‘தெளிவா’ சொல்லிடறேன். எனக்குக் குடிப்பழக்கம் இல்லை. நான் குடிக்கு எதிரானவனும் கிடையாது. குடிப்பது சரியா, தவறா? குடிகாரர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்ற விவாதத் திரியை ஏற்றி வைத்து, அதற்குத் தீர்வு சொல்வதும் என் நோக்கமல்ல. குடிக்குள் இருக்கும் அரசியல் பற்றியதுதான் இந்தப் படம்.

கடந்த 15 வருஷத்தில் எப்படியெல்லாமோ மாறிவிட்டது. 50 சதவீதம் போலி மதுபானம்தான் இங்கு விற்கப்படுகிறது. படத்தில் இடம்பெறும் ‘பத்து ரூபா சரக்கை நூறு ரூபாய்க்கு விக்கிறீயே’, ‘கள்ளும் சாராயமும் எங்க குல சாமிடா...’ போன்ற வசனங்கள் அதைத்தான் பேசுகின்றன.

டாஸ்மாக்கை மூடுவதன் மூலம் குடியை நிறுத்தமுடியாது. குடிகாரர்கள் பார்வை வேறு பக்கமாகத் திரும்பும். உழைப்பாளிகளுக்கான பொழுதுபோக்காக குடிதான் இருக்கிறது. குடி, நம் பண்பாட்டுக்குள்ளேயே இருந்த விஷயம்தான். சாமியே குடி சாமியாக இருந்திருக்கிறது. வறண்ட பூமியின் விவசாயிகளுக்கு பனை மரம் வருவாய் கொடுக்கும் சாமியாக இருந்தது. கள் ஒருவகை உணவுதான். வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பு. தமிழக அரசின் அதிகாரபூர்வ மரமே பனை மரம்தானே?’’ எனக் கேள்வியில் ஸ்பிரிட் ஏற்றுகிறார் கமலக்கண்ணன்.

‘‘இந்தப் படத்தைப் பார்த்துட்டு யாராவது திருந்தினா சந்தோஷம்தான்! அதுக்காக, ‘இத்தனை குடிகாரர்கள் திருந்திட்டாங்க’ என்று போலியாக விளம்பரம் செய்ய மாட்டேன். வள்ளுவர் சொல்லியே மாறாதவர்கள் நான் சொல்லியா மாறப்போகிறார்கள்?

படம் பண்ணணும்னு முடிவானதும், என் டீமோட நிறைய இடங்களுக்குப் பயணித்தேன். தமிழ்நாட்டோட எல்லா பக்கங்கள்லயும் சமுதாயத்தை பாதிக்கற விஷயமா இருக்கறது ஒயின்ஷாப்தான்னு புரிஞ்சது. அதில் வர்ற கதாபாத்திரங்களுக்காக நட்சத்திரங்களைத் தேடி அலையாமல் ஊர் மக்களையே நடிக்க வைத்தோம். ‘பெட்டிஷன் மணி’ கேரக்டரில் நடித்த கவிஞர் என்.டி.ராஜ்குமார் பாடல் மட்டும் எழுதுவதாக இருந்தது. ‘அந்தக் கேரக்டருக்கு இவர்தான் பொருத்தமா இருப்பார்’னு தோன்றியது. அதன்பிறகுதான் அவரை நடிக்க வைத்தோம்.



பவானியிலிருந்து மேட்டூர் போகும் பேருந்தில் ஒருநாள் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது காக்கிச் சீருடையில் பஸ்ஸில் ஏறிய ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கும் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து கீழே உட்கார்ந்த அந்த தொழிலாளி, ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...’ என்று சத்தமாகப் பாட ஆரம்பித்தார். ‘உங்க அசிங்கத்தை நாங்கதான்டா சுத்தம் பண்றோம். அந்த நாத்தம் பொறுக்காமத்தான்டா குடிக்கிறோம். எங்களை ஏன்டா கேவலமாப் பார்க்குறீங்க..?’ என்று அவர் கேட்ட வார்த்தைகள், எல்லோர் கன்னத்திலும் அறைவிடுவது மாதிரி இருந்தது. நிஜத்தில் பார்த்த அந்த சம்பவத்தைத்தான் படத்தில் வைத்திருக்கிறேன்’’ என்கிறார் கமலக்கண்ணன்.

படத்துக்கான வரவேற்பு பற்றியும் வெளிப்படையாகப் பேசுகிறார் அவர். ‘‘ஏ சான்றிதழ் உள்ள படங்களெல்லாம் கெட்ட படம், யு சான்றிதழ் பெற்ற படங்களெல்லாம் நல்ல படம் என்று இங்கு தவறான போக்கும், பார்வையும் பரவிக் கிடக்கிறது. மக்கள் ஆதரிக்கும் படங்களை ஓடவிடாமல் தடுப்பது சினிமாவுக்கு நல்லதல்ல. ‘கலகலப்பு’ படத்துக்கு வரிவிலக்கு தர்றீங்க... என் படத்துக்கு ஏன் தரலை? நினைத்திருந்தால் தொப்புள் பக்கம் நானும் கேமராவை வைத்திருக்கலாம். அதைச் செய்யாமல் சமூக அக்கறையுடன் ஒரு படம் பண்ணினால் தப்பா?’’ எனச் சீறும் அவர் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். ‘‘ரசிப்பதற்காக மட்டும் படம் எடுப்பது என்பது முதுகு சொறிந்து விடுவது மாதிரி. அது என் வேலை இல்லை. ரெகுலர் ஃபார்முலாவில் ஒருபோதும் படம் எடுக்கமாட்டேன். சமுதாயச் சிந்தனையுள்ள படங்களை மட்டுமே எடுப்பேன்!’’
- அமலன்