கொடுப்பினை வேணும்!





‘புலிகளைக் காப்பாற்ற சட்டமும், நீதியும் துணை நிற்கிறது. வனத்துக்குள் அகப்பட்ட பழங்குடி மக்களைக் காப்பாற்றத்தான் யாருமில்லை’ என்று உங்கள் கட்டுரையில் இடம்பெற்ற கடைசி வரிகள் மனதைத் தொட்டன.
*  ஏ.ஜி.கல்யாணசுந்தரம், சென்னை-11.

‘நம் பள்ளிக் குழந்தைகளுக்கு நாம் வழங்கும் மதிய உணவு, வாயில்லா ஜீவன்கள் கூட உண்ணத் தகுதியற்றது!’ என்று சட்டசபையிலேயே மனம் வருந்திப் பேசிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், நேர்மையானவர்தான். அவரின் அதிரடி நடவடிக்கையால் மதிய உணவு, புதிய உணவாகும் என்று நம்புவோம்.
*  அ.கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

‘த்ரிஷா வீட்டு இளவரசன்!’, அவங்க வீட்டு நாய்தானா? என்ன கொடுமை சார் இது! நடிகை வீட்டு ‘நாய்’களுக்குக் கூட இளவரசன் பட்டமா? ஹும்... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்!
*  டி.டி.சாமி, உச்சனவலசு.

‘பூர்விகா மொபைல்ஸ்’ அதிபர் யுவராஜ், தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து சாதித்திருப்பது, முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உந்து சக்தியே!
*  பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

‘எங்கே போனது ஆரஞ்சு மிட்டாய்?’ கட்டுரை வெரி நைஸ்! நீங்கள் தூண்டிவிட்ட ஆசையால் இந்த சுதந்திர தினத்தன்று ஆரஞ்சு மிட்டாய்களைத் தேடிப் பிடித்து வாங்கி, அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தேன்!
*  வி.ஜெயலட்சுமி, திருச்சி-2.

இந்தியாவில் லஞ்சமும் ஊழலும் பெருகிப் புரையோடி விட்ட நிலையில் அன்னா ஹசாரே கட்சி ஆரம்பிப்பதெல்லாம் வேஸ்ட். ‘ஹசாரே போல் நிறைய பேர் பெருக வேண்டும்’ என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இதெல்லாம் நடக்கிற கதையா?
*  எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘அதிசய நிவாரணம் தரும் அக்குபிரஷர் சிகிச்சை’ பகுதியை ஆரத்தி எடுத்து வரவேற்கிறோம். பணவிரயம், பக்க விளைவுகளால் ஆரோக்கிய விரயம் என ஏதுமில்லாது, ‘கை மேல் பலன் தரும்’ அக்குபிரஷரை கற்றுக் கொள்ளும் ஆவல் இப்போதே தொற்றிக் கொண்டுவிட்டது.
*  கண்ணதாசன்,
திருவண்ணாமலை.

‘உலகின் பணக்கார டவுன்!’ என்ற பெருமையைப் பெற கனவு காணும் அந்த குட்டி டவுன், பெர்லின் நகரத்திடம் கடன் வசூல் செய்யக் கிளம்பியிருப்பது ஓகே. ஆனால், நேத்து ஓடிப் போன ‘ஈமு’காரங்ககிட்டயே பணம் வசூல் பண்ண முடியலை... இதுல 1532ல கொடுத்த கடனெல்லாம் திரும்ப வருமா? சும்மா ஆசையைக் கிளப்பாதீங்க சார்!
*  இரா.வளையாபதி, கரூர்.