நான் : சினிமா விமர்சனம்





‘தப்பை சரியாகச் செய்தால் தப்பு இல்லை...’ என்று படத்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் ‘தீம் சாங்’கில் சொல்லப்படுவதுதான் படம் சொல்லும் நீதியும். சின்ன வயதில் அம்மாவின் தவறான உறவினால் அப்பாவை இழக்கும் ஹீரோ, அப்படியும் திருந்தாத அம்மாவையும், அதற்குக் காரணமான ஆணையும் தண்டித்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்கிறார். இயல்பாகவே இன்னொருவர் கையெழுத்தை அப்படியே போடும் திறமை(!)யுள்ள அவருக்கு, மேற்படி சம்பவத்தால் திட்டமிட்டுக் கொலை செய்யும் துணிவும் ஏற்பட, வாழ்வின் தேவைகளுக்கு அவர் மேற்கொள்ளும் திட்டமிடுதலை ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவா சங்கர்.

ஹீரோவாக இசையமைப்பாளர் விஜய் ஆன்டணி. அலட்டிக்கொள்ளாத, அதே சமயத்தில் அப்பாவியான கேரக்டர் என்பதால் அவரது அறிமுகம் வெகு இயல்பாகப் பொருந்தி விட்டது. ஊரே சர்டிபிகேட் கொடுக்கும் அளவில் நல்லவனாகவே நடந்து கொள்வதிலும், நெருக்கடி வரும்போது நிஜ முகம் காட்டி வன்மமாவதிலும், அண்டர்பிளே செய்து ரசிக்க வைக்கிறார். மனசாட்சி உறுத்துவதால் உண்டாகும் பதற்றத்தை அற்புதமாக வெளிக் காட்டியிருப்பவர், நண்பனை யதேச்சையாகக் கொன்ற இடத்தில் குலுங்கி அழுது நடிப்பிலும் வரவு வைத்துக்கொண்டிருக்கிறார்.

இரண்டாவது ஹீரோ வேடத்தில் நடித்திருக்கும் சித்தார்த், பிளேபாய் கேரக்டருக்கேற்றாற்போல் ஸ்மார்ட்டாக இருக்கிறார். நல்ல பெண்ணாக இருந்தும் தவறான தேர்வாக சித்தார்த்தைக் காதலிக்கும் ரூபா மஞ்சரியின் குற்றமற்ற முகம் ரசிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் சித்தார்த்தின் பொய்முகமும் விஜய் ஆன்டணியின் நல்ல மனதும் அறிந்து காதலை மாற்றிக்கொள்வாரோ என்கிற அளவில் ஸ்கிரீன்பிளே இருந்தாலும், அதெல்லாம் நடக்காமல் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அவருக்கு மட்டுமல்லாமல், படத்தில் அங்கங்கே உற்சாகம் தூவும் விபாவுக்கும், அனுயாவுக்கும் கூட விரும்பியது நடக்காமல் போவதில், அத்தனை பெண்களும் அதிர்ஷ்டக் கட்டைகளாகவே இருக்கிறார்கள். சின்ன கேரக்டர் என்றாலும் கிருஷ்ணமூர்த்தியின் பிளாக்மெயிலையும், அதை விஜய் ஆன்டணி சமாளிக்கும் காட்சியையும் ரசிக்கலாம்.

படத்தின் இயக்குநர் ஒளிப்பதிவாளராகவும், ஹீரோ இசையமைப்பாளராகவும் இருப்பதில் இரட்டிப்பு லாபம் கிடைத்திருக்கிறது. ஆங்கிலப்பட சாத்தியத்தில் ஒளிப்பதிவும், இசையும் கலந்து கட்டி ரசிக்க வைக்கின்றன. ‘மாக்காயேலா...’, ‘தப்பெல்லாம்...’ பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசை மற்றும் மிக்ஸிங் வேலைகள் வெகு நேர்த்தி.


லாஜிக் அதிகம் தேவைப்படும் கதையென்பதால், இயக்குநர் அதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது புரிகிறது. அதில் பல இடங்களை சாமர்த்தியமாகக் கடந்திருந்தாலும் சில இடங்களில் சறுக்கியும் இருக்கிறார். அம்மா செய்த தவறுக்கு தண்டனை தரத் தெரிந்த மகனுக்கு, பள்ளியில் பிற பிள்ளைகளுக்கு ஃபோர்ஜரி கையெழுத்து போட்டுத் தருவது மட்டும் தப்பாகத் தெரியவில்லையா..? அதெல்லாம் பழங்கதையாக ஆகிப்போக, கருணை மிக்க வார்டனால் வளர்க்கப்படும் விஜய் ஆன்டணி நல்லவராகத்தானே வளர்ந்திருக்க வேண்டும்..? எந்த நெருக்கடியும் இல்லாத நிலையில் சென்னைக்கு வரும் முதல்நாளே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இன்னொருவனாக நடிக்க முற்படுவது நல்லவனுக்கான அடையாளம் இல்லை.

செய்த குற்றங்களை சட்டத்தின் கண்களிலிருந்து புத்திசாலித்தனமாக மறைத்துவிட்டாலும் அங்கங்கே விஜய் ஆன்டணிக்கு மனசாட்சி உறுத்துவதும், அதன் காரணமாகக் கடைசியில் தான் இதுவரை நடித்த இன்னொரு கேரக்டரின் நோயாளித் தந்தைக்கு பணிவிடை செய்யப் போவதும் ஆறுதல். ஆனாலும் விடாமல் ‘எண்ட் டைட்டிலி’ல் ‘தொடரும்’ என்று போட்டு ஏன் குற்றங்களைத் தொடர விரும்புகிறார்கள் என்பதுவும், இதே லைன் இன்னொரு படத்திலும் எடுத்தாளப்பட்டிருப்பது யார் குற்றம் என்பதுவும் முக்கிய கேள்விகள்.
- குங்குமம் விமர்சனக்குழு