நிழல்கள் நடந்த பாதை





இந்த நகரத்தில் காணாமல் போன ஒரு பூனையைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? அவற்றை யாராவது பிடித்துக்கொண்டு போயிருப்பார்களா? வீட்டிற்கு வர வழி தெரியாமல் எங்காவது சுற்றிக்கொண்டிருக்குமா?

வளர்ப்புப் பிராணிகள் மேல் அதீத ஈடுபாடு கொண்டவர்கள் எப்போதும் எனக்கு மிகவும் வினோதமாகவே தோன்றி யிருக்கிறார்கள். மனிதர்களை நேசிக்க முடியாதவர்கள்தான் பிராணிகளை நேசிக்கிறார்கள் என்றும், பல சமயங்களில் தனிமை யுணர்ச்சியின் வெளிப்பாடாகவும், சமூக அந்தஸ்தின் குறியீடாகவுமே வளர்ப்புப் பிராணிகள் இருக்கின்றன என்றும் யோசித்திருக்கிறேன். சுதந்திரமான விலங்குகளை நமது விருப்பத்திற்காக அடிமைப்படுத்துகிறோம் என்று விவாதித்திருக்கிறேன். மனிதனுக்கும் பிராணிகளுக்கும் இடையிலான மர்மமும் ஆழமும் கூடிய பந்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதவனாக இருந்தேன். அப்படிப் புரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பமும் எனக்கு வந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு எங்கோ தெருவில் சுற்றிக்கொண்டிருந்த இரண்டு பூனைக் குட்டிகளை என் குழந்தைகள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நான் பிராணிகளை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவன் அல்ல. அவற்றை நான் எவ்வளவு தவிர்க்க முடியுமோ தவிர்த்தேன். ஆனால் அவை எந்நேரமும் அணுகியவண்ணம் இருந்தன. ஏதோ ஒரு கணத்தில் என் புறக்கணிப்பின் சுவரை அவை உடைத்தன. அவை இல்லாத சமயங்களில் நான் அவற்றைத் தேடத் துவங்கினேன். சில சமயம் இரவில் வேலை முடிந்து அதிகாலையில் தூங்கச் செல்லும்போது அவை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

ஒரு பூனை மட்டும் கருவுற்று, பிறந்த குட்டிகள் கண் விழிக்காமலேயே இறந்து போயின. அந்த நாட்களில் இன்னொரு பூனை, ஈன்ற பூனையை அணைத்துக்கொண்டு எந்நேரமும் படுத்திருப்பதைக் கண்டபோது, சக உயிரை ஆற்றுப்படுத்தும் உணர்வு என்பது எவ்வளவு உயிரியல் ரீதியானது என்பதைக் கண்டுகொண்டேன். அந்தப் பூனைகள் என் ஆழமான உணர்ச்சிகளின் குறியீடாகவே எனக்குத் தோன்றியது.

வாழ்க்கையின் பல முக்கியமான உறவுகள் கசந்தும் முறிந்தும் போயிருந்த ஒரு காலகட்டத்தில் என் வெறுமையை அந்தப் பூனைகள் நிரப்பத் தொடங்கின. நான் எல்லோரையும் மறந்துவிட்டு அந்தப் பூனைகளையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

சிறிது காலத்திற்குப் பிறகு இரண்டு பூனைகளும் ஒரே நேரத்தில் கருவுற்று மொத்தம் ஏழு குட்டிகளை அடுத்தடுத்த நாளில் ஈன்றன. ஏற்கனவே ஒரு பூனை எல்லா குட்டிகளையும் இழந்ததால், இந்த முறை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஒரு அறையில் அவை பிரசவிப்பதற்கு உரிய விரிப்புகளைத் தயார் செய்தேன். எதனோட குட்டி எது என்ற பேதமில்லாமல் அவை மாறி மாறி பால் குடித்தன. ஒரு குவியலாக இரண்டு தாய்ப்பூனைகளும் ஏழு குட்டிகளும் பிணைந்து கிடக்கும் காட்சி, பெரும் உயிரியல் கோளமாக மனதை விம்மச் செய்யும்.


ஒருநாள் பகலில் சாம்பல் நிறப் பூனைக்குட்டி ஒன்று கழுத்தைத் தூக்க முடியாமல் காய்ச்சலில் சுருண்டு கிடந்தது. அவை கடுமையான கோடை தினங்கள். நண்பர் ஒருவர் மூலம் ஒரு மிருக வைத்தியரைக் கண்டுபிடித்தேன். எங்கோ இருந்த அவரை டாக்சியில் வரவழைத்தேன். அவர் ஒரு இலங்கைத் தமிழர். பிராணிகளை ஒருவர் அவ்வளவு அக்கறையுடன் கவனிக்க முடியுமா என்று வியப்பாக இருந்தது. ஐந்து மணி நேரம் என் அறையில், என் படுக்கையில் வைத்து அந்தப் பூனைக்குட்டிக்கு சிகிச்சை அளித்தார். நான் அதன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பூனைகளின் கண்கள் நம்மை ஊடுருவிச் செல்லக்கூடியவை. அமைதியிழக்க வைப்பவை. காய்ச்சல் மெல்லக் குறைந்தது. இங்க் ஃபில்லரில் சொட்டுச் சொட்டாகப் பால் குடித்தது. கழுத்தை சாய்த்து சாய்த்து நடக்கத் தொடங்கியது. ‘‘ஹீட் ஸ்ட்ரோக்... மெதுவாகத்தான் சரியாகும்’’ என்றார் அவர்.

அன்றிலிருந்து அந்த சாம்பல் நிற பூனைக்குட்டி என்னிடம் விசேஷ உரிமைகள் எடுத்துக் கொள்ளத் தொடங்கியது. என்னைக் கண்டபோதெல்லாம் மேலே விழுந்து பிறாண்டும். என் விரல்களைக் கடிக்க முயற்சிக்கும். நாக்கை நீட்டி என் கைகளைத் துழாவும். பிறகு அமைதியாக என் அருகிலேயே படுத்து தூங்கத் தொடங்கிவிடும். தினமும் இரண்டு மணி நேரமாவது என் படுக்கையில், என் அருகில் படுத்துத் தூங்காவிட்டால் அது மிகவும் அமைதியிழந்து காணப்படும். ஒருவித சீற்றத்தோடு என் மேல் பாயும்.

பூனைகள் வெளியே நடமாடத் தொடங்கிய பிறகு அவற்றின் சுபாவம் மாறத் தொடங்கியது. வீட்டிற்கு வெளியே அவை மூர்க்கமாக வேட்டையாடுவதைக் கண்டேன். ஒரு பாம்பரணையை பூனைக்குட்டிகள் வேட்டையாடுவதைக் கண்டு எனக்கே பயமாக இருந்தது. ஒரு நாள் ஒரு பெரிய புறாவை அடித்து அவை வீட்டிற்குள் கொண்டு வந்தன. இரவெல்லாம் வேட்டையாடிவிட்டு சாம்பல் நிறப் பூனை அதிகாலையில் என்னிடம் குழந்தையைப் போல தூங்க வந்துவிடும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு எல்லாம் மாறத் தொடங்கின. இருப்பதிலேயே மிகவும் ஆரோக்கியமான மஞ்சள் நிறப் பூனை ஒருநாள் மதியம் வீட்டின் முன் இறந்து கிடந்தது. என்ன காரணம் என்றே தெரியவில்லை. அதற்கு அடுத்த வாரம் கண் தெரியாத ஒரு பூனைக்குட்டி, மரத்தின் உச்சியிலிருந்து என் கண்முன்னால் விழுந்து இறந்தது. என் அடி மனதில் ஏதோ ஒன்று உடையத் தொடங்கியது.

பூனைகள் மிகவும் சுதந்திரமானவை. அவற்றை எப்படிப் பாதுகாப்பது என்று தெரியாமல் திகைத்துப் போனேன்... ‘அந்தப் பூனைகளுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் விஷம் கொடுத்திருப்பார்களோ’ என்ற விபரீத எண்ணம் என்னை அலைக்கழிக்கத் தொடங்கியது.

இந்த துயரக் கதையின் அடுத்த அத்தியாயம் நான்கு நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஒரு குழந்தையைப் போல எந்நேரமும் என்னைத் தொடர்ந்துகொண்டிருந்த சாம்பல் நிறப் பூனையும் இன்னொரு வெண்ணிறப் பூனையும் எங்கோ காணாமல் போய்விட்டன. வெளியே சென்ற அவை வீடு திரும்பவே இல்லை. எப்படியும் வந்துவிடும் என்று காத்திருந்து மனம் சோர்ந்து போனேன். இந்த நகரத்தில் காணாமல் போன ஒரு பூனையைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா? அவற்றை யாராவது பிடித்துக்கொண்டு போயிருப்பார்களா? வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருக்குமா? எங்காவது வேட்டையாடச் சென்றிருக்குமா? வீட்டிற்கு வர வழி தெரியாமல் எங்காவது சுற்றிக்கொண்டிருக்குமா?

ஒரு பூனைக்குட்டியைப் பிரிவது இவ்வளவு பெரிய துயரமாக மாறும் என்று நான் நினைத்ததே இல்லை. மனிதர்களைப் பிரிவது கடினமாக இருக்கிறது என்றுதான் பிராணிகளை நேசிக்கத் தொடங்கினேன். ஆனால் சாபம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? தாய்ப்பூனைகள் இரண்டும் காணாமல்போன குட்டிகளைத் தேடி இரவெல்லாம் அழுதுகொண்டி ருக்கின்றன. ஒவ்வொரு மூலையாகத் தேடுகின்றன. மீதமிருக்கும் குட்டிகள் மூலையில் சுருண்டுபோய் கிடக்கின்றன. என் குழந்தைகள் அந்தப் பூனைகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டவண்ணம் இருக்கிறார்கள். அவற்றிற்காக வாங்கிய மீன்கள் அப்படியே மிச்சமிருக்கின்றன நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதர்கள் நம்மை விட்டுப் போகும்போதுதான் ஆறாத் துயரம் என்ற ஒன்று நமக்கு நிகழ வேண்டும் என்பதில்லை.

கொஞ்சம் வேலை... கொஞ்சம் ஊழல்...
‘‘நல்லா வேலை செஞ்சுட்டு கொஞ்சமா திருடிக்கங்க... தப்பில்ல!’’ என்று சொன்ன உ.பி. அமைச்சர் சிவ்பால் சிங் யாதவ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர் சொன்னதில் எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கீழ்முதல் மேல்வரை ஊழலில் உளுத்துப்போன ஒரு அமைப்பைச் செயல்பட வைப்பதற்கு ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கெஞ்ச வேண்டியிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

ஒரு ‘நியாயமான’ ஏற்பாட்டின்கீழ் ஊழலை ஒழுங்குபடுத்த நினைக்கும் இந்த முயற்சி, அன்னா ஹசாரேயின் திட்டங்களைவிட பிராக்டிகலாக இருப்பதாகத் தோன்றுகிறது. இந்திய சுதந்திர தினத்தன்று உட்கார்ந்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கும்போதுதான் கொஞ்சம் சஞ்சலமாக இருக்கிறது. எங்கேயோ வந்து சேர்ந்து விட்டோம்.

இது என்ன நியாயம்?
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியானதை ஒட்டி 4 லட்சம் பேர் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது. சிலருடைய தவறுக்காக இத்தனை லட்சம் பேரை மறுபடி தேர்வு எழுதச் சொல்வது என்ன நியாயம் என்று புரியவில்லை. எந்தத் தேர்வு மையங்களில் இது நடந்ததோ, அங்கே மட்டும் மறு தேர்வு நடத்துவதுதான் முறையானது. இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் நடக்கும் பெரும்பாலான தேர்வுகளை மறுபடி மறுபடி நடத்த வேண்டியிருக்கும். வினாத்தாள்களை வெளியாக்குவது என்பது காலாகாலமாக நடந்துவரும் மிகப்பெரிய ஊழல். அதைத் தடுக்க தேர்வுகளை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வது வழியல்ல.
(இன்னும் நடக்கலாம்...)



இந்த வார புத்தகம்

கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர்: க.துளசிதாசன்

குழந்தைகளின் மனதை வடிவமைப்பதில் பெரும்பகுதி பொறுப்பு ஆசிரியர்களுக்கே உரியது. எல்லா வளர்ந்த மனிதர்களும் தங்கள் இளமைக் காலத்தின் நல்ல ஆசிரியர்கள் பற்றியோ, மோசமான ஆசிரியர்களைப் பற்றியோ ஆழமான நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள், ‘சிறந்த கனவு ஆசிரியர் யார்’ என்று தேடுகிறார்கள். அந்தக் கனவு ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். இந்தக் கடிதங்கள் முழுக்க, ஆசிரியர் என்பவர் எவ்வளவு பெரிய மகத்தான சக்தி என்பதை நினைவூட்டுகின்றன. பல சிறந்த ஆசிரியர்களைப் பற்றிய நுட்பமான மனப்பதிவுகள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. ஆசிரியர்கள் குழந்தைகளின் உலகத்தில் எவ்வாறு நுழைய வேண்டும் என்பது குறித்தும், அச்சமற்ற வகுப்பறைகளை உருவாக்குவது குறித்தும் இங்கே விரிவாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரையும் இந்த நூலைப் படிக்க வைக்கவேண்டும். இந்தக் கனவுப் புத்தகத்தை உருவாக்கிய துளசிதாசன் பெரிதும் பாராட்டிற்குரியவர்.
(விலை: ரூ.90/-, வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018. தொலைபேசி: 044-24332424.)

இந்த வார கவிதை
தழும்பு


அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்
வந்தது.
அப்படியும் வாழ்கிறோம்
நம்மோடு நாம் காண
இத் தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி
- ராஜ சுந்தர்ராஜன்

ஃபேஸ்புக்

ஏழைக் குடும்பங்களுக்கு இலவச செல்போன் வழங்க மத்திய அரசு திட்டம் - செய்தி தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கடைசியாக மன்மோகன் சிங்கிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப ரொம்ப உபயோகமாக இருக்கும்!