6 லட்சம் ஆசிரியர்களில் 2 ஆயிரம் பேர்தான் பாஸ்?





தமிழக கல்விச்சூழலில் நிலவும் மிகப்பெரும் பின்னடவை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது அண்மையில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு. 6 லட்சம் பேர் எழுதிய அந்தத் தேர்வில் வெறும் 2000 பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டு, மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டு, போதிய அவகாசமும் கொடுத்து நடத்தப்பட்ட ஒரு தேர்வையே எதிர்கொள்ள முடியாதவர்கள் ஆசிரியர்களானால்..? நம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் இந்த லட்சணத்தில்தான் ஆசிரியர்களை தயாரிக்கின்றனவா..? - இப்படி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது இந்த தேர்வு முடிவு.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் நடந்து வருகிறது. தமிழகத்தில், 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பதற்காக ஜூலை 12ம் தேதி தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 150 கேள்விகள். 150 மதிப்பெண்கள். சுமார் 6 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டும் இந்த நிலை ஏன்?

‘‘இந்த ஒரு தேர்வை மட்டுமே வைத்து தகுதியை மதிப்பிடக் கூடாது. விண்ணப்பம் வழங்கியது முதல் இந்தத் தேர்வில் பல குழப்பங்கள் நிலவின. ‘பட்டதாரிகளுக்கு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்களிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடங்களிலும் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்’ என்றார்கள். ஆனால் எம்எஸ்சி பாடங்களில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. தேர்வு நேரத்தை அதிகப்படுத்தக் கேட்டோம். ஆனால், 150 கேள்விகளுக்கு பதில் அளிக்க வெறும் 90 நிமிடம் மட்டுமே வழங்கினார்கள். ஒரு கேள்வியைப் படித்து, பதிலைத் தேர்வு செய்து, டிக் செய்ய வெறும் 36 வினாடிகள். கல்வி உளவியல் பாடத்தில் கேட்கப்பட்ட 30 கேள்விகளுக்கு பதில் அளிக்கவே 25 நிமிடம் ஆனது. மீதமுள்ள 65 நிமிடத்தில் 120 கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க முடியும்? கேள்விகளும் பாரா, பாராவாக இருந்தது. படிக்கவே நேரம் போதவில்லை. ஒரே கேள்வித்தாளில் மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் கேள்விகள் இருந்தன. அதெல்லாம் மிகப்பெரும் குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்தின’’ என்கிறார் ஆசிரியர் பட்டதாரிகள் கழகச் செயலாளர் பாலசுப்ரமணியன்.

‘கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் நியமனத்தில் முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு’ என்று சுட்டிக்காட்டும் பாலசுப்ரமணியன், ‘‘இது முதல் தகுதித்தேர்வு என்பதால், மதிப்பெண் விதிமுறைகளைத் தளர்த்தி, தேவையுள்ள 23,343 ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

‘‘எம்பிபிஎஸ் படித்தால் எப்படி டாக்டராகலாமோ, அதைப்போல பி.எட், எம்எட், டிடிஎட் படித்தால் ஆசிரியராகலாம். மாணவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி பாடம் நடத்த வேண்டும் என்றெல்லாம் அங்கு படித்து முடித்துவிட்டுத்தான் பட்டம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித் தேர்வு நடத்தினால், அந்தப் படிப்புகள் எல்லாம் எதற்கு..? அவற்றை வழங்கிய பல்கலைக்கழகமே சரியில்லை என்றுதானே பொருளாகிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மீதான மரியாதையை இந்த தகுதித்தேர்வு குலைத்து விட்டது. பட்டதாரிகளுக்கு தாழ்வு மனப்பான்மையையும், மனஉளைச்சலையும் உருவாக்கி விட்டார்கள்...’’ என்றும் குற்றம் சாட்டுகிறார் பட்டதாரி ஆசிரியர்கள் கழக செயலாளர் அய்யாத்துரை.

எதிர்கால இந்தியாவைக் கட்டமைக்கும் பொறுப்பு மிக்க ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு?
‘‘தவறில்லைதான். ஆனால், ஆப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்படும் ஒரு தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால் அவர் தகுதியான ஆசிரியர் என்று கருதுவதும் தவறுதான்’’ என்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.



‘‘ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குக் கூட தனியாகப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கு பணியில் சேரும்முன் எவ்விதமான பயிற்சியும் வழங்குவதில்லை. பிறகு அவர்களை எப்படிக் குறைசொல்ல முடியும்? ஆசிரியர்களின் பணிச்சுமை பற்றி பலருக்குத் தெரியாது. செக்குமாடு போல வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. ரெகார்டு ஒர்க், ஆபீஸ் ஒர்க், ரேஷன் கார்டு கணக்கெடுப்பு, சென்சஸ், எலெக்ஷன் டியூட்டி எல்லாம் போக, மீதமிருக்கும் நேரத்தில் கற்பிக்கும் பணி.. இதற்கிடையில் ஆசிரியர் தன் அறிவை விசாலமாக்கிக் கொள்ள எங்கே நேரம் இருக்கிறது. ஒரு நாளிதழ் வாங்க, ஒரு புத்தகம் வாங்க அரசு நிதியளிக்கிறதா..? தொடக்கப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் கூட இல்லை. ஆசிரியரே எல்லா வேலையும் செய்ய வேண்டியிருக்கிறது. தகுதித்தேர்வில் வெற்றிபெறும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்தால் இந்த சுமைகளைத்தான் சுமக்க வேண்டும். முதலில் ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்த வேண்டும். கற்றல், கற்பித்தல் தவிர வேறெந்த வேலையையும் அவர்களுக்குத் தரக்கூடாது. அப்போதுதான் அவர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள முடியும்’’ என்கிறார் கஜேந்திரபாபு.


ஒரு சில வாரங்களில் தகுதித்தேர்வுக்கான முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம். தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதால் மதிப்பெண் விகிதத்தைக் குறைப்பது பற்றியும் பரிசீலனை நடந்து வருகிறது. முடிவு எதுவாக இருந்தாலும், ஆசிரியர் பட்டதாரிகள் பொறுப்பை உணர்ந்து மனப்பூர்வமாக தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- வெ.நீலகண்டன்