அட்டக்கத்தி : சினிமா விமர்சனம்





சரியாக வெட்டாத கத்தியை வெண்ணெய் வெட்டி என்பார்கள். அதற்கும் லாயக்கில்லாததுதான் அட்டகத்தி. அப்படி எதற்கும் ஆகாத இளைஞனைப் பற்றிய கதை. மாறி வரும் தமிழ் சினிமாவில் மாற்று சினிமாக்கதை சொல்லும் உத்தியில், சம்பவங்களின் கோர்வையாகக் கதை சொல்கிறார் அறிமுக இயக்குநர் பா.இரஞ்சித்.

பள்ளி இறுதியில் தேறாத நிலையிலும் பேருந்து பிடித்து டுடோரியல் காலேஜ் போகும் சாக்கில் கல்லூரிக்குப் போவதாகக் கதை பண்ணிக்கொண்டிருக்கும் இளைஞன் தினேஷ்தான் கதையின் நாயகன். அவர் வைக்கும் காதல் கண்ணியில் ஒரு பள்ளி மாணவி சிக்குகிறாள். காதலைச் சொல்லப்போகும் வேளையில் அவள் ‘‘அண்ணா...’’ என்கிறாள். அப்செட் ஆனாலும், வேறு இரு பெண்களுக்கு ரூட் விடுகிறார். இப்படியே அடுத்தடுத்து ஏமாந்து, ‘காதலே வேண்டாம்...’ என்று பள்ளி தேறி கல்லூரியில் போய்ச் சேர்கையில் மீண்டும் துளிர்க்கும் பழைய காதல் என்ன ஆகிறதென்று போகும் கதை. ‘காதல் போனால் போகிறது; அதற்காக வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்ளாமல் இன்னொரு காதலி நோக்கி நகர்ந்து கொண்டேயிரு...’ என்று புரிந்துகொள்ளத்தக்க சின்னூண்டு செய்தியும் உள்ளே சொல்லப்பட்டிருக்கிறது.


அட்டகத்தி கேரக்டருக்கு அப்படியே பொருத்தமாக இருக்கிறார் தினேஷ். மதுரை இளைஞர்களே உரத்துக் குரல் கொடுக்கும் தமிழ் சினிமாவில் ஓடும் பஸ்ஸில் லாவகமாக ஏறும் புட்போர்டு தாவல், அதிலும் ‘படம்’ போடும் நெளிவு சுளிவு, சாவுக் குத்தில் கூட கண்ணில் பேப்பர் எடுக்கும் சாகசம், முடிந்தவரை எதிர்த்து அடிப்பது, முடியாத நிலையில் பின்னங்கால் பிடரி பட ஓடித் தப்பிப்பது என்று சென்னை இளைஞனின் பிரதிநிதியாகி சிலிர்க்க வைக்கிறார்.

நாயகியாகியிருக்கும் நந்திதாவும் நல்ல தேர்வு. பள்ளி மாணவிக்கும், கல்லூரி மாணவிக்குமான பருவ வித்தியாசத்துக்குப் பொருத்தமாக இருப்பவர், உதடு நெளிய சிரிப்பதை ரசிக்க முடிகிறது. ஒருசில காட்சிகளில் வந்தாலும் ஜோடியாகவே திரியும் ஷாலுவும், ஷோபியும் நச்சென்று மனதில் இடம்பிடிக்கிறார்கள். உறவுக்காரப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யாவின் நடிப்பும் நன்று.

சென்னை புறநகர்ப் பகுதி மக்களின் வாழ்க்கையை இத்தனை நேர்த்தியாக யாரும் இதுவரை பதிவு செய்ததாகத் தெரியவில்லை. அப்பா டை அடித்துக் கொண்டிருக்க, விறகு அடுப்பில் குமையும் அம்மாவின் குரலை சட்டை செய்யாமல் வெட்டியாக விடலைகள் டிவி பார்த்துக் கொண்டிருக்க, ‘‘என் ஜட்டியை எங்கேம்மா வச்சே..?’’ என்று ஒரு மகன் பரபரக்க... நகருக்கு வெளியே புலரும் ஒரு நடுத்தர வர்க்கக் காலையில் துவங்கும் படம் அதே பரபரப்புக் குறையாமல் பயணிக்கிறது. ‘‘காதலிக்க பயப்படக் கூடாதுடா... உன் பாட்டியை நான் தூக்கிட்டு வந்து தாலி கட்டினேண்டா...’’ என்று உசுப்பேற்றும் தாத்தா, போதையில் இருளைப் பார்த்து ‘‘எவண்டா அவன்..?’’ என்று உதார்விட்டு அரிவாளைத் தூக்கி வாழைமரத்தை வெட்டிச் சாய்க்கும் அப்பா, தன் காதலுக்குக் குறுக்கே தம்பி வந்து விடுவானோ என்று கண்காணிக்கும் அண்ணன் என்று அனைவரும் கவர்கிறார்கள்.

விளையாட்டாகப் போகும் முன்பாதிக் காதல் கதை பின்பாதியில் சீரியஸான வேகமெடுக்க, உணர்ச்சிமயமான க்ளைமாக்ஸ் ஒன்றை எதிர்பார்க்கிறோம். அதையும் விளையாட்டாகவே முடித்து விட்டுப் போகும் படம் எங்கே நிறைவு பெற்றிருந்தாலும் பிரச்னை இல்லை என்றே நினைக்க வைக்கிறது. பேருந்தின் நெரிசல்களிடையே அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மாவின் உழைப்பு அபாரம். பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கும் சந்தோஷ் நாராயணனின் இசையில் அமைந்த கபிலனின் கானாக்கள் சென்னையின் கலாசார கானங்களாகி ரசிக்க வைக்கின்றன.
- குங்குமம் விமர்சனக்குழு