என் படத்துக்கு நானே கை தட்டினேன்!





கடந்த வாரம் வழக்கம்போலவே ஸ்கூப் செய்திகளுக்காக யாரோ ரஜினியின் உடல்நிலை பற்றி தவறாக செய்திகள் வெளியிட்டிருந்த வேளையில், ஏவி.எம் தயாரித்து ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த ‘சிவாஜி’ படத்தின் 3டி உருவாக்க முயற்சியைத் திரையிட்டுக் காட்டும் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது. ஏற்கனவே நாம் பார்த்து வியந்திருக்கும் பிரமாண்ட படைப்பான ‘சிவாஜி’யை 3டியிலும் காணப்போகும் ஆர்வத்தில் அனைவரும் இருக்க, அத்தனை பேருக்கும் இனிய அதிர்ச்சி கொடுத்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து நின்றவர்... சூப்பர்ஸ்டாரேதான். நிகழ்ச்சியைத் தொகுத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ‘‘ரஜினி நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறார். யாரோ தவறான செய்திகள் வெளியிட்ட நேரம், அவர் கம்பன் விழாவில் நான்கு மணி நேரம் கலந்து கொண்டிருந்தார்...’’ என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திரையிடப்பட்ட ‘சிவாஜி 3டி’யின் காட்சிகளில் மெய்மறந்த பத்திரிகையாளர்களே பலத்த கைதட்டல் எழுப்ப, ரஜினியே மெய்சிலிர்த்து ‘‘எனக்கும் மூணு ரீல் போட்டுக் காட்டினாங்க. என் படத்துக்கு நானே கைதட்டினேன். இன்னொரு தடவை போட்டுக் காட்டுங்கன்னு மூணு முறை திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தேன். உங்களுக்கே இது பிடிச்சிருக்குன்னா ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்..!’’ என்று தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார்.

‘கோச்சடையான்’ பற்றிய கேள்வி எழுந்தபோது, ‘‘வேற ஒரு பட நிகழ்ச்சியில என் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது. இருந்தாலும் உங்க கேள்விக்கு பதில் சொல்றேன். ‘கோச்சடையானு’ம் 3டிதான். அதுதான் என் முதல் 3டியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா ஏவி.எம் முந்திக்கிட்டாங்க...’’ என்றார் பெருந்தன்மையுடன்.



‘கறுப்பு வெள்ளை’ காலத்தில் நடிக்க ஆரம்பித்து, ‘வண்ணப்பட’ காலம் தாண்டி, முப்பரிமாண படங்களின் காலத்திலும் அவர் தொடர்ந்து முன்னணியில் இருப்பது பற்றிக் கேட்டபோது, ‘‘நான் அதிர்ஷ்டசாலி. இதையெல்லாம் நான் ப்ளான் பண்ணலை. எல்லாமே இறைவன் கையில இருக்கு. இதுக்குப் பிறகு இனிமே பண்ற படங்கள் இன்னும் தொழில்நுட்பத்துல மேம்பட்டு இருக்கணும்னு நினைக்கிறேன். நம்ம படங்கள் தொழில்நுட்பத்துல ஹாலிவுட்டை நெருங்கிக்கிட்டிருக்கு...’’ என்றார்.

‘‘அடுத்து 3டியா உருவாக்கணும்னா உங்களோட எந்தப் படத்தைச் சொல்வீங்க..?’’ என்று அவரது சாய்ஸ் பற்றிக் கேட்டபோது, சட்டென்று சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘எந்திரனை’ச் சொன்னார். ‘‘அடுத்து ‘படையப்பா’வையும் அப்படி 3டியாக்கலாம்...’’ என்றார். ரசிகர்கள் காட்டில் இனி 3டி மழைதான்..!
- ஜி